கலாலயா வழங்கிய எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசை மாலை
ஏப்ரல் 25, 2010 அன்று சான் ஹோசேவின் கலாலயா நிறுவனம் சான் ஹோசே பெர்ஃபார்மிங் ஆர்ட் சென்டரில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குழுவினர் பங்கேற்ற இசைமாலையை ஏற்பாடு செய்திருந்தது. இதில் எஸ்.பி.பி.யுடன் அவரது சகோதரி எஸ்.பி. ஷைலஜா, மகள் பல்லவி இளம் பாடகர் கிருஷ்ணா ஆகியோரும் பங்கேற்றுப் பாடினார்கள். எஸ்.பி.பி.யும் குழுவினரும் நேரில் இசையமைத்துப் பாடியதைக் காண்பதும் கேட்பதும் அற்புதமான இசை அனுபவமாக இருந்தது.

பாடல்களுக்கு இடையில் அவ்வப்போது நகைச்சுவையாக எஸ்.பி.பி. கூறியவை பார்வையாளர்களுக்கு உற்சாகமூட்டியது. பாடல்களை இசையமைத்த மேதைகளை நினைவுகூர்ந்து அவர்களுடனான தன் அனுபவங்கள் சிலவற்றையும் அவர்களது பெருமைகளையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். இசையமைப்பாளர் ரஹ்மானின் தந்தை திலீப் தன்னை மலையாள சினிமா பின்னணிப் பாடகராக அறிமுகப்படுத்தியதை நினைவு கூர்ந்தார். ஒரு சில பாடல்களின் அடிப்படை ராகங்களையும் விளக்கினார். ஒரு சில கவிதை வரிகளின் சிறப்பைக் கோடிட்டுக் காட்டி எப்படி ரசித்து அனுபவிப்பது என்பதையும் விவரித்தார் எஸ்.பி.பி.

எஸ்.பி.பி.யின் குரல் வளத்துக்காகவே கேட்க வேண்டிய மென்மையான பாடல்களான, ராகங்கள் பதினாறு, பாட வா, நதியில் ஆடும் பூவனம், யமுனா நதியிங்கே ஆகியவற்றைப் பாடினார். அதோடு வேகமும் விறுவிறுப்பும் கூடிய கட்ட வண்டி, கவிதை கேளுங்கள், டிஸ்கோ, காவிரி ஆறும், ஆத்தா ஆத்தோரமா போன்ற அவரது குரலின் சகல பரிமாணங்களையும் வெளிக்காட்டும் பாடல்களையும் பாடி ரசிகர்களை நடனாமாட வைத்தார். ஒரு சில இந்திப் பாடல்களையும் பாடினார். அவரது ஆரம்ப காலப் பாடல்களான ஆயிரம் நிலவே வா, இயற்கை என்னும் இளைய கன்னி, சங்கராபரணம் போன்ற பாடல்களைக் கேட்க முடியாதது சற்று ஏமாற்றமாகவே அமைந்தது. ஆனாலும் நிகழ்ச்சி மனதில் நின்றது என்பதில் சந்தேகமில்லை.

ச. திருமலைராஜன்,
ஃப்ரீமாண்ட், கலி.

© TamilOnline.com