மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்
2010 மே, ஜூன் மாதங்களில், ‘அம்மா’ ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் சான் ஃபிரான்சிஸ்கோ, வளைகுடா பகுதி, லாஸ் ஏஞ்சலஸ், ஆல்பகர்க்கி, டாலஸ் ஆகிய இடங்களுக்கு வருகை தந்திருந்தார். அம்மா தம்மைக் காணவந்த ஒவ்வொருவரையும் பரிவோடு அரவணைத்து, தமது அளவற்ற அன்பை வழங்கினார். தினமும் ஆன்மீகச் சொற்பொழிவு, தியானம், பஜனை மற்றும் தரிசனம் நடைபெற்றன. ஆன்மீக முகாமில் (retreat) ஆன்மீக, தியான வகுப்புகள், சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாறல், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெற்றன.

உலகம் முழுவதும் அம்மா செய்து வரும் மனிதநேயத் தொண்டைப் பாராட்டும் வகையில், ஸ்டேட் யுனிவர்ஸிடி நியூயார்க் (SUNY) மே மாதம் 25ம் தேதி, அம்மாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளித்தது. இந்தப் பல்கலையின் தலைவர் டாக்டர் ஜான் சிம்சன் தமது உரையில், "மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள், உலகப்புகழ் பெற்றவர், உலக மக்களால் விரும்பப்படும் ஒருவராவார். பாரதத்தில் மட்டுமல்லாமல், இவ்வுலகம் முழுவதும் அமைதி நிறையவும், கல்விவளம் ஓங்கவும், ஏழ்மையை அகற்றவும், மனிதகுலத் துயர்களை நீக்கவும் இடைவிடாது முயன்று வருகிறார். தனிச்சிறப்புமிக்க அமிர்தா விஸ்வ வித்யாபீடத்தின் தலைமை வேந்தரும், முதன்மையான மனிதநேயத் தொண்டுகளை நடத்துபவரும், பெருமதிப்பிற்குரிய ஆன்மிகத் தலைவியுமான அம்மாவுக்கு இந்த கெளரவ டாக்டர் பட்டத்தை அளிப்பதன் மூலம் எங்கள் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

அம்மாவின் அமுத மொழி: "நம்முடைய வாழ்விற்கு அவசியமானது பொறுமையாகும். ஏனெனில், வாழ்வின் அஸ்திவாரம் பொறுமையாகும். ஒரு பூச்செடியிலுள்ள மொட்டை நமது விரல்களால் மலரச் செய்தால், அந்த பூவின் மணத்தையும், அழகையும் முழுமையாக அறிய முடியாது. இயல்பாக மலர அனுமதித்தால் மட்டுமே அதைச் சரியாக அறிய முடியும். அதுபோல், வாழ்வின் அழகை அனுபவிக்க வேண்டுமெனில் பொறுமை தேவை. வாழ்வை சந்தோஷம் நிறைந்ததாகச் செய்ய முயல்பவர்களுக்குத் தேவையான முதல் குணம் பொறுமையாகும்."

ஜூலை மாதத்தில் அம்மா வருகைதர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:
சிகாகோ 06.30 - 07.02
நியூயார்க் 07.04 - 07.06
வாஷிங்டன் டி.சி. 07.09 - 07.11
பாஸ்டன் 07.13 - 07.16
டொரன்டோ, கனடா 07.19 - 07.22

மக்களின் மேம்பாட்டுக்காக அம்மா ஆற்றும் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: www.amritapuri.org

மேலும் விபரங்களுக்கு: www.amma.org, www.amritapuri.org

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com