தென்கலிஃபோர்னியாவில் மஹாருத்ரம்
2010 மே 29 முதல் 31வரை நார்வாக் சனாதன தர்ம மந்திரில் ஸ்ரீ சக்ரேஸ்வரி மிஷன், கலிஃபோர்னியக் காஞ்சி காமகோடி மையம் ஆகியவை கோவில் நிர்வாகத்துடன் இணைந்து ஸ்ரீ மஹாருத்ரம் ஒன்றை நடத்தியது.

29ஆம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. அன்று பிற்பகலில் பாலவிஹார் குழந்தைகள் வழங்கிய சுலோகம், வேத பாராயணம் மற்றும் பஜனைகள் நடந்தன. அடுத்து நடந்த ஸ்ரீலலிதா லட்சார்ச்சனையுடனான விளக்கு பூஜையில் 140 மகளிர் கலந்துகொண்டனர். அர்ப்பணா நடனப் பள்ளியின் நாட்ய உபசாரம், ரம்யா ஹரிஷங்கரின் நடன அமைப்பில் ‘பஞ்சபூதங்கள்’ என்ற கருத்தில் நடந்தேறியது.

30 ஞாயிறன்று, 140 வேதவிற்பன்னர்களும் ரித்விக்குகளும் ருத்ரம் சமகம் ஆகிய்வற்றை உற்சாகத்தோடு ஓதினர். பண்டித சிவராமகிருஷ்ணன் இதற்கு முதன்மை ஆசார்யராக இருக்க, அவருக்கு சுப்ரமணிய சாஸ்திரிகள், சந்திரசேகர சாஸ்திரிகள், பகவதீஸ்வர சாஸ்திரிகள் ஆகியோர் திறம்படத் துணை புரிந்தனர். அதே நேரத்தில் சிவலிங்கத்துக்கு ருத்ராபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் நடந்த ஸ்ரீருத்ர ஹோமம் 11 ஹோம குண்டங்களில் நடந்தது. கலசாபிஷேகத்துக்குப் பின்னர் நடைபெற்ற சிருஷ்டி பரதநாட்டியப் பள்ளியினர் வழங்கிய நடன நிகழ்ச்சியில் சிவபிரானின் திருவிளையாடல்கள் சித்திரிக்கப்பட்டன. அனைவரும் சேர்ந்து சிவ சஹஸ்ரநாம அர்ச்சனை செய்தபின்னர் பண்டிதர் சிவராமகிருஷ்ணன் தேவாரப் பாடல்களை இசைத்தார்.

இறுதிநாளில் சண்டிகா பரமேஸ்வரி பூஜை, ஸ்ரீ சண்டி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. பூர்ணாகுதி, சதுர்வேத உபசாரம் ஆகியவற்றுடன் நிகழ்ச்சிகள் நிறைவெய்தின.

ஆங்கில மூலம்: டி.வி. கிருஷ்ணமூர்த்தி

© TamilOnline.com