சிகாகோ தியாகராஜ உற்சவம்
சிகாகோ தியாகராஜ உற்சவம் மே 29, 30, 31 ஆகிய தினங்களில் லெமாண்ட் ராமர் கோவில் கலையரங்கில் நடந்தது.

காலை 8 மணிக்கு சகஸ்ரநாம பாராயணத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. குழந்தைகள், இளைஞர்கள், இசையாசிரியர்கள், இசை பயின்ற பெண்டிர் இவர்களுடன் திருமதி காயத்ரி வெங்கட்ராகவன், ரவிகிரண், சீதா நாராயணன், கணேஷ் பிரஸாத் போன்ற இசைக் கலைஞர்களும் கலந்து கொள்ள பஞ்சரத்ன கீர்த்தனைகள் திருவையாற்றைப் போலவே புல்லாங்குழல் இசையுடன் ‘சேதுலார’ எனும் பைரவி ராக கிருதியுடன் துவங்கியது. சிறுவர், சிறுமிகள் ‘துடுகு கல’ (கௌள) கிருதியைப் பாட, ‘கனகன ருசிர’ (வராளி) என்ற கிருதியை ஆண்கள் மட்டும் பாட, முடிவில் ‘எந்தரோ’ (ஸ்ரீ) கிருதிக்கு ஆத்ரேயும் (ஸ்ரீ முஷ்ணம் சீடர்) சஞ்சயும் (குருவாயூர் சீடர்) தாள, லய வின்யாஸம் செய்து அனைவரையும் வியப்பிலாழ்த்தினர்.

இவ்வருடம் 50க்கும் மேற்பட்ட இசைப்பிரியர்கள் ‘நௌகா சரித்ரம்’ எனும் இசைநாடகப் பாடல்கள் 14ஐப் பாடி யாவரையும் மகிழ்வித்தனர். ‘சிருங்காரிந்தஸூ’ (சுரடி), ‘ஓடனு ஜரிபே’ (சாரங்கா), ‘கந்தமு புய்யருகா’ (புன்னாக வராளி) ஆகியன நெஞ்சை விட்டு அகலாதவை. தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட 5 முதல் 18 வயதுவரையான சிறார்கள் இசைப்பள்ளியில் பயின்ற கிருதிகளைச் சேர்ந்து பாடினர். மாலை 5.30 ஆன பிறகும் கூட பல இளைஞர்களும், முதியவர்களும் நிகழ்ச்சியில் பாடக் காத்துக்கொண்டிருந்து பாட நேரமில்லாமல் போனதில் அவர்களுக்கு ஏமாற்றம்தான்.

முதல் நாள் (மே 29) அன்று இரவு 8.30க்கு தெய்வீகச் சமன்பாடுகள் எனும் தலைப்பில் ஒரு புதிய இசை நடன நிகழ்ச்சி நடைபெற்றது. ஊத்துக்காடு வேங்கட கவியின் கண்ணன் மட்டுமல்லாது விநாயகர், முருகன், சிவன் ஆகியோர் மீதான பாடல்களை மாலைபோல் கோத்து நடன ஜதிஸ்வரம் பிரத்தியேகமாகச் செய்திருந்தார் ரவிகிரண். அதற்கேற்ப 30க்கும் மேற்பட்ட தனது நடனக்குழுவினரைக் கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்புற வடிவமைத்திருந்தார் ஹேமா ராஜகோபாலன்.

மறுநாள் காலை 8 மணிக்கே அரங்கத்தில் கலைஞர்கள் நிரம்பி விட்டனர். அது வயலின், மிருதங்கம், வீணை என பக்கவாத்தியங்களுடன் கூடிய அஞ்சலி நேரம். அநேகர் இளம் சிறார்கள். பெரிய வித்வான்கள் (சுகுணா வரதாச்சாரி, சூர்யப்ரகாஷ், ஸ்ரீ முஷ்ணம், குருவாயூர், கல்பகம் சுவாமிநாதன், உமையாள்புரம், கன்யாகுமரி, கணேஷ் பிரஸாத், விட்டல் ராமமூர்த்தி என்ற) பட்டியலில் பயிற்சி பெறுபவர்கள்.

அங்கு கேட்ட ‘க்ஷீரஸாகர’வும் (தேவகாந்தாரி), சாக்ஸபோனில் தன் பிஞ்சுக்கைகளால் வாசித்த 'நாதலோலுடை'யும் (கல்யாண வசந்தம்) வியப்பில் ஆழ்த்தின. புல்லாங்குழலில் ‘நகுமோமு’ வாசித்த விதம் வெகு சிறப்பு. நானும் ‘எவரிச்சிரா’ (மத்யமாவதி) பாடி மகிழ்ந்தேன்.

காயத்ரி வெங்கட்ராகவன் கச்சேரியைக் கேட்கப் பகல் 11 மணிக்கே கூட்டம் அலைமோதியது. இவர் ஸ்யாமா சாஸ்திரி கிருதிகளில் ஊறித் திளைத்தவர். நமது உற்சவத்தில் பாடுவது இதுவே முதல்முறை. ‘கருண ஜூடவம்மா’ (வராளி) எனும் கிருதியைப் பாடி அவையோரின் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து சுவாமிகளின் ‘சாலகல்ல’ எனும் ஆரபி ராகக் கீர்த்தனையைப் பாடிய விதம் சிறப்பு. ’ரங்கபுர விஹார’ (பிருந்தாவன ஸாரங்கா) வெகு நேர்த்தி. கணேஷ் பிரஸாத்தின் வயலினும், பாபுவின் மிருதங்கமும் சிறப்பாக இருந்தன.

மே 30 அன்று மாலை விஜய் சிவாவின் கச்சேரி. நமது உற்சவத்தில் அவர் பாடும் முதல் கச்சேரி இது. பக்கவாத்திய உறுதுணை ஸ்ரீராம்குமார் மற்றும் ஜே.வைத்யநாதன். சிவா தீக்ஷிதர் சம்பிரதாய கிருதிகளின் வாரிசு என்றால் மிகையல்லை. சுவாமிகளின் ‘சீதாபதே’ (கமாஸ்), ‘சக்கனிராஜ’ (கரஹர ப்ரியா) ஆகிய கிருதிகளை விஜய் சிவா நெக்குருகப் பாடினார். இவரது வழி பழைய ஆலத்தூர் சகோதரர்களையும், மதுரை ஐயரையும் நினைவுறுத்தியது. சிவாவின் ‘ஸூவக்‌ஷோப கும்பாம்’ (ராகமாலிகா), ‘மாமவ பட்டாபிராம’ (மணிரங்கு), ‘சீதா கல்யாண’ (நவரோஜ்) ஆகியன அருமை.

இளவரசர் ராமவர்மா ஸ்வாதித் திருநாள் வம்சத்தில் வந்து எம்.டி.ராமநாதனின் இசையால் ஈர்க்கப்பட்டு, பாலமுரளி கிருஷ்ணாவின் நேர் சிஷ்யராக இருப்பவர். இவருக்கு சுகமான சாரீரம், சௌகத்தில் பிரியம், உச்சரிப்பில் தெலுங்கர்கள் வியக்கும் சுத்தம். ‘சரஸிஜநாப’ என்னும் ஸ்வாதித் திருநாள் மஹாராஜாவின் அட தாள வர்ணம் (காம்போதி) நல்ல ஜமாவை வயலின் வரதராஜன், மிருதங்கம் சதீஷ்குமார் ஆகியோரிடம் வரவழைத்தது.

தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தும் இந்நிகழ்ச்சியில் பாடிய அனைத்து வித்வான்களுமே மிகுந்த பக்தியும், ஆழ்ந்த பணிவும் கொண்டு நெஞ்சு நெக்குருக சுவாமிகளின் பாடல்களைப் பாடியது மறக்க இயலாதது.

பேராசிரியர் T.E.S ராகவன்,
இல்லினாய்ஸ்

© TamilOnline.com