கோம்ஸ் கணபதி கவிதைகள்
சந்திரனுக்கு ஒரு சவால்
கிண்ணத்தில் இட்ட
அன்னத்தை உண்ண
மறுத்திடும் சேய்க்கு,
பண்ணொடு அன்னை
அழைத்திட
விண்ணிறங்கி
மண்ணுக்கு வந்திடும்
வெண்ணிலவே!
சந்திரனே!
உனக்கொரு சவால்!

ஈசனார் தலையில்
அரைச் சந்திரன்!
நோன்பிருந்த இசுலாமியர்
ஈதுப் பெருநாளுக்காய்
வானில் பார்ப்பது
பிறைச் சந்திரன்!
இமையோர் துயர்
துடைத்திட்ட இராமனும்
ஓர் சந்திரன்,
அவன் இராமச் சந்திரன்!

எங்கும் இருக்க
இடம் கொண்ட
மறைச் சந்திரனே!
மறையாச் சந்திரனே!
குறைவதும், நிறைவதும்,
'நீலவான் ஆடைக்குள்
முகம் மறைத்துக்
காட்டுவதும்' என
சித்து விளையாடல்களில்
சிலம்பாடும் நிறைச் சந்திரனே!
உனக்கொரு சவால்!

மதத்தின் பெயரால்
மதம் கொண்டலையும்
மனிதர் இங்கு
'மானுடம்' என்னுமோர்
மதம் படைத்திட
மார்க்கம் ஒன்று
சொல்ல வல்லாயோ?

*****


காதலியின் தலை வகிடு
'.......காதலியின் தலை வகிடு?'
தலைப்பினைத் தந்த கையோடு,
'கவிதை படைத்திடு!'
எனப் பணித்திட்ட தமிழன்ப!
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர்
இதைக் கேட்டிருப்பாயெனில்
ஒரே போடாய் போட்டிருப்பேன்!
என்னவென்று?.....
"சூல் கொண்ட கருமேகத்தின்
வயிற்றைக் கிழித்துப் பிரசவிக்கும்
வீறு கொண்ட மின்னல் கீற்று"
மன்னா! இந்த தருமிக்கு இன்று
பொருளுக்கு வறுமையில்லை;
பொருள் பொதிந்த கற்பனைக்கு
பெரும் வறுமை.
'.......காதலியின் தலை வகிடு?'
...ம்ம்ம்..
'நான் முத்திட்டு, முத்திட்டு,
உச்சி முகர்ந்திட்டு வந்திட்ட
வடு, அய்யா! அது வகிடல்ல,
வெண் பஞ்சு மேகத்திடையே
என் இதழிட்ட வடு!'

*****


எண்ணும் எழுத்தும்....
ஈரடியில் சீரடி
வனைந்திட்ட ஏந்தலே!
ஈரேழு புவனங்களையும்
ஓரேழு சொல்லுக்குள்
ஒடுக்கிய ஞானியே!
அகரத்துக்கு ஆதி பகவன்
அந்தஸ்து வழங்கிய வள்ளலே!
வள்ளுவ!
உன்னோடு எனக்கொரு
வழக்குண்டு!

எண்ணுக்கு முதலிடம்
கொண்டது பொறியியல்
பொன்னுக்கு வேண்டிப்
பொறியாளனாய்ப் போன
எனக்கு, உன்னோடு
வழக்கொன்று உண்டு!

எண்ணும் எழுத்தும் இரு
கண்ணெனத் தகுமெனச்
சொன்னாயே!
எண்ணுக்கு முதலிடம் தந்தாயே!
என் போல் நீயும் ஓர்
பொறியாளனோ?

*****


ஓலைச் சுவடி குறுந்தகடாகிறது
ஒரு வரியில் சொல்லி வைக்கக்
குறுங்கவிதை இது!
ஆனால்...
ஓராயிரம் ஆண்டுகள்
எங்கெங்கோ ஓளிந்திருந்த
ஓலைச் சுவடிகளின்
சுவடுகளை ஓயாது ஓணி,
ஒழியாது தேடி, ஒன்றாய்த்
திரட்டும் வேள்வித் தீயில்
தன்னை நெய்யாய் வார்த்து
ஓலையாய் எரித்து, அன்று
தமிழைக் காத்தோனே!
தமிழ் தாத்தா என்னுமோர்
சாமி நாதய்யனே!
உன்னை வாழ்த்திப் பாடிட
என் தமிழ் போதாதய்யனே!
ஆதலினால்...
சாமியைப் பாடிய
மாணிக்க வாசகனும்
சாமிக்கு நாதனைப் பாடிய
அருணகிரியும், கூடி இங்கு
உன் வாசல் வந்து
இன்று, இக்கணமே
பாடிடப்
பணிக்கின்றேன்!


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



கோம்ஸ் கணபதி

© TamilOnline.com