தமிழ் நாடு அறக்கட்டளை தனது 35வது ஆண்டுவிழாவை மே மாத இறுதியில் ஃபிலடெல்ஃபியாவில் கொண்டாடிய போது அங்கே மெல்லிசை விருந்தளிக்க வந்திருந்தது ‘லக்ஷ்மன் ஸ்ருதி’.
பள்ளிக் கல்வியைப் பாதியில் நிறுத்திய சிறாருக்குக் கல்வி பெற உதவும் வகையில் ‘ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்பதை மையக் கருத்தாகக் கொண்டு இந்த ஆண்டின் விழா நடைபெற்றது. இந்த நற்பணிக்கு நிதி திரட்டும் நோக்கில் அமெரிக்காவின் 10 மாநிலங்களில் லக்ஷ்மன் ஸ்ருதியின் மெல்லிசை நிகழ்ச்சிகள் வெவ்வேறிடங்களில் மே, ஜூன் மாதங்களில் நடைபெற்றன. அற்புதமான இசை விருந்து தந்ததோடு நில்லாமல், அறக்கட்டளையின் பேரிகையாகவே அர்ப்பணிப்போடு செயல்பட்டது லக்ஷ்மன் ஸ்ருதி என்கிறார்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்தவர்கள்.
“இந்த மிக நல்ல பணிக்கு நிகழ்ச்சியை வழங்க லக்ஷ்மன் ஸ்ருதியை அறக்கட்டளை நிர்வாகிகள் அழைத்ததில் எங்களுக்குப் பெருமை” என்கிறார்கள் இதன் நிறுவனர்கள் லக்ஷ்மன், ராமன் இருவரும். “நிகழ்ச்சியின் வெற்றிக்கு அமெரிக்காவின் பல பகுதிகளிலும் இருந்து தமிழர்கள் ஒருசேர உழைத்ததைப் பார்க்க எங்களுக்குப் பெருமகிழ்ச்சியாக இருந்தது” என்று தயங்காமல் கூறுகிறார்கள்.
எவ்வளவு நேரம் ரசிகர்கள் விரும்பினார்களோ அவ்வளவு நேரம் சளைக்காமல் பாடிய குழுவினரின் பாங்கும், அறக்கட்டளையின் குறிக்கோளைத் தமது நோக்கமாகவே வரித்துக் கொண்ட ஈடுபாடும் எல்லோரையும் கவர்ந்தன என்றால் மிகையல்ல. |