பரிசு
கைவிரலை உதட்டில் வைத்தபடி மாடிப்படியில் மெதுவாக இறங்கினாள் சுதா.

கீழே சுதாவின் தம்பிகள் மணியும் சீனுவும் அவளை ஆவலோடு பார்த்தார்கள்.

"பாட்டி முழிச்சிண்டாச்சா?" என்றான் சீனு.

"உஸ். சத்தம் போடாத. இப்ப கீழ வருவா. அம்மாவைக் கூப்பிடு" என்றாள் சுதா.

அடுத்த சில நிமிஷங்களில் பாட்டி பாகீரதி கீழே இறங்கி வந்தாள்.

எல்லோரும் அவளைச் சூழ்ந்து கொண்டு "ஹேப்பி பர்த் டே, பாட்டி" என்றார்கள் ஒரே குரலில்.

"பர்த்டேயா. அடுத்த வார வியாழக்கிழமைதான் நட்சத்திரப்படி எனக்கு பர்த்டே. அதுக்குள்ள நான் இந்தியால இருப்பேன். ஊர்ல போயி கோயில்ல சாமி பார்த்தாலே எனக்குப் பெரிய கொண்டாட்டம்தான். அது போதும்."


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



"இது இங்கீஷ் காலண்டர்படி பாட்டி. உன் பிறந்த நாள் இன்னிக்குதான்னு உன் பாஸ்போர்ட்ல இருக்கு. வா, வா. கேக் வெட்டலாம்"

"எனக்கு கேக்கெல்லாம் வேண்டாம். அதெல்லாம் உங்களுக்குதான்."

"இல்ல அம்மா. குழந்தைகள் எல்லாம் உனக்குன்னு காத்திண்டுருக்கு. கேக் நேத்திக்கே வாங்கி வெச்சாச்சு" என்றாள் ராதா.

"எனக்குப் போய் எதுக்கு இதெல்லாம். கேக்கை வெட்டறேன். ஆனா திங்க மாட்டேன். நீங்க தின்னா நான் தின்ன மாதிரி."

கேக் வெட்டி, ஹேப்பி பர்த் டே பாடியதும், "பாட்டி உனக்கு கிஃப்ட் வாங்கியிருக்கோம்" என்றான் மணி.

"எதுக்கு வீணா காசு செலவு உங்களுக்கு" என்றாலும் மனத்தில் இவர்களின் அன்பு மகிழ்வைத் தந்தது.

கலர் காகிதம் சுற்றப்பட்ட ஒரு பெட்டியைக் கொண்டுவந்து கொடுத்தாள் சுதா.

"பிரிச்சுப்பாரு பாட்டி"

##Caption## காகிதத்துக்கு வலிக்குமோ என்று அஞ்சுவது போல அதை மெதுவாகப் பிரித்தாள் பாட்டி. உள்ளே இரண்டு பெட்டிகள் இருந்தன. ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு ஜோடி செருப்புகள் இருந்தன.

என்னடி ரெண்டு ஜோடி வாங்கியிருக்கே. ஒரு ஜோடி போறாதோ. ஆமா இது என்ன விலை?"

"விலை கேட்டா இந்தியா பணத்தில இவ்வளவான்னு உனக்கு மயக்கம் வரும். ஒரு ஜோடி வாங்கினா இன்னொரு ஜோடி இலவசம்னு சொன்னான். அதான் ரெண்டு ஜோடி வாங்கியாச்சு. மாத்தி மாத்தி உபயோகிக்கலாம்"

"ஊரில இருக்கறச்சே நான் செருப்பே போடறதில்ல. அவசரமா ஏதோ தாங்க முடியாத வெய்யில்ல போகணும்னா போட்டுக்க உங்க தாத்தாவோட பழைய செருப்பு இருக்கு".

"பாட்டி புதுச்செருப்பை போட்டுண்டு ஸ்டைலா நடந்து காட்டு"

"சே. வீட்டுக்குள்ள செருப்பா. அதெல்லாம் வேண்டாம்" என்ற பாட்டி அவர்கள் நச்சரிப்பு தாங்காமல் போட்டுக்கொண்டு ஒரு பிரபல சினிமா நடிகைபோல நடந்து காட்டினாள்.

குழந்தைகள் கைதட்டினார்கள்.

பாகீரதி இந்தியாவுக்குத் திரும்பினாள். ராதா தன் தம்பி ரகுவுக்கு வாங்கிக்கொடுத்த பொருள்களைக் கொடுத்தாள்.

தனக்கு ராதா வாங்கிக்கொடுத்த செருப்புப் பெட்டிகளை எடுத்து வைத்தபோது மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.

ரகுவிடம், "ரகு, என்னை சாயங்காலமா பர்வதம் மாமி வீட்டுக்கு அழச்சிண்டு போறியா?" என்று கேட்டாள்.

"எதுக்கும்மா?"

"அவளைப் பார்த்துப் பேசி நாளாச்சு. அமெரிக்கா போறதுக்கு முன்னயே பார்க்கணும்னு நெனச்சேன்."

"சரிம்மா. சாயங்காலம் ரெடியா இரு. ஆட்டோ கொண்டு வரேன்"

அமெரிக்காவிலிருந்து கொண்டு வந்த செருப்பில் ஒரு ஜோடியைப் பையில் எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

பர்வதம் வீட்டில் சமையல்காரப் பெண்மணிதான் இருந்தாள். "பர்வதம் அம்மாக்கு உடம்பு சரியில்ல. பக்கத்துதெருல கமலா நர்சிங் ஹோமில இருக்காங்க" என்று செய்தி சொன்னாள்.

"ரகு, வந்தது தான் வந்தோம் நர்சிங் ஹோமில போயி பர்வதத்தைப் பார்த்துட்டுப் போகலாம். நீ கடையில நாலு ஆப்பிள், வாழைப்பழம் வாங்கிக்கோ. உடம்பு சரியில்லாதவரை பார்க்கப் போகும்போது கையில பழம் எடுத்துண்டு போகணும்."

நர்சிங் ஹோமில் பர்வதம் படுக்கையில் இருந்தாள். கழுத்து வரை போர்த்தி இருந்தது.

ஆப்பிளையும் செருப்புப் பெட்டியையும் பக்கத்தில் ஸ்டூலில் வைத்தாள்.

"என்ன பர்வதம். என்னாச்சு உனக்கு?"

"பாகீரதி, என் கர்மாவை அனுபவிக்கிறேண்டி. டையாபிட்டீஸ் அதிகமாகி கால்ல புண் வந்து காலையே எடுத்துட்டாடி" என்று அழுதுகொண்டு போர்வையை மேல் நோக்கி இழுக்க அவளது கால் முழங்காலுக்கு கீழ் ஒன்றுமில்லாமல் இருந்தது.

பாகீரதி பர்வதத்தை அணைத்துக் கொண்டு ஆறுதல் சொன்னாள்.

பர்வதம் விக்கி விக்கி அழுதுகொண்டே "பாகீரதி, உனக்கு அஞ்சுவருஷம் முன்னால நடந்தது நெனைவு இருக்கா. நீ என் வீட்டுக்கு வந்திருந்தபோது, எங்கிட்ட இருவது ஜோடி செருப்பு இருக்குன்னு பெருமையா உனக்குக் காண்பிச்சேன். எனக்கு ஒரு ஜோடி தருவியான்னு நீ கேட்டே. என் உயிரை வேணா கேளு, செருப்பை மட்டும் கேக்காத. இன்னும் பல கலர்ல நெறய செருப்பு வாங்கப்போறேன்னு உங்கிட்ட சொன்னேன். இன்னிக்குக் கடவுள் என் காலையே பிடுங்கிட்டான் பாத்தியா" என்றாள்.

"என்ன பர்வதம் இது. குழந்தை மாதிரி. இந்த பிரச்னை யாருக்கு வந்தாலும் இப்படித்தான் வைத்தியம் செய்வா. ஒழுங்கா மருந்து மாத்திரை சாப்பிட்டு டையாபிட்டீசை குணப்படுத்தறதுதான் முக்கியம். நீ மனசை அலட்டிக்காதே. தைரியமா வெச்சிக்கோ. அடுத்த தடவை வரச்சே உனக்கு ஸ்லோக காசெட் எடுத்துண்டு வந்து தரேன். அதைக் கேட்டாலே நிம்மதியா இருக்கும். அப்புறம் வரேன்."

பெட்டியை மட்டும் கையில் எடுத்துக் கொண்டாள். பாகீரதி.

"அது என்ன பெட்டி?" என்றாள் பர்வதம்.

"அதுவா அமெரிக்கால இருக்கிற என் பொண்ணு ராதா ஜாக்கெட் தைச்சுக் கொடுன்னு அளவு ஜாக்கெட் கொடுத்திருக்கா. தையல்காரரைப் பார்க்க போகணும்" என்று சொல்லிவிட்டு வெளியேறினாள்.

ஆட்டோவில் போகும்போது ரகு கேட்டான், "பொட்டிய அவங்ககிட்ட ஏதோ கிஃப்ட் கொடுக்க எடுத்துண்டு வந்தேனு நெனச்சேன்..."

"வரும்போது அவளுக்கு இந்த மாதிரி பிரச்னைன்னு தெரியல. அவளுக்கு செருப்புன்னா பிடிக்குமேனு, உங்கக்கா வாங்கிக் கொடுத்த ரெண்டு ஜோடி செருப்புல ஒர் ஜோடி அவளுக்குப் பரிசாத்தரலாம்னு வந்தேன். இந்த நிலைமையில நான் செருப்பு கொடுத்தா அவ மனசு புண்படும். ஏற்கனவே எப்பவோ நான் விளையாட்டாக் கேட்டதை நெனச்சு அழறா. அதுனாலதான் பெட்டியில ஜாக்கெட்னு சொல்லி திருப்பி எடுத்துண்டு வந்திட்டேன். ஒரு பழமொழி சொல்லுவா தெரியுமா ரகு உனக்கு. எனக்கு செருப்பு தரலயேனு கடவுள்கிட்ட கோவிச்சிண்டேன், காலே இல்லாத மனிசனைப் பார்க்கற வரைக்கும்னு.... என்னைக் கால் கையோட இந்த அளவு ஆரோக்யமா வெச்சிருக்கான்னு கடவுளுக்கு நான் நன்றி சொல்லணும். இது இல்ல அது இல்லனு புகார் சொல்லிண்டே வாழ்க்கையைக் கழிக்கக்கூடாது."

எல்லே சுவாமிநாதன்

© TamilOnline.com