நிஷாந்த் பழனிசாமி
நிஷாந்த் பழனிசாமி பிளெஸன்டன் ஃபுட்ஹில் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர். இவர் சமீபத்தில் ‘நைட்ஸ் ஆஃப் கொலம்பஸ்’ (Knights of Columbus) நடத்திய மாநில அளவிலான கூடைப்பந்து எறிதல் போட்டியில் (Basketball Free Throw Contest) முதலிடத்தைப் பெற்றுச் சாதனைப் புரிந்துள்ளார். இவருக்குக் கொடுக்கப்பட்ட 25 வாய்ப்புகளில், தனக்கு அடுத்தபடியாக வந்த மாணவரை விட 1 புள்ளி அதிகமாக, அதாவது 24 புள்ளிகள் பெற்று மாநிலச் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்.

ஃப்ரெஸ்னோ (Fresno, CA.) நகரில் மார்ச் 2010ல் மாநில அளவிலான போட்டிகள் நடந்தன.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



நிஷாந்த் பிளெஸன்டன் நகரம், மாவட்டம், மண்டலம் என்று ஒவ்வொரு சுற்றிலும் முதலிடம் பெற்று மாநில அளவிலான இறுதிச்சுற்றை அடைந்தார்.

##Caption## “மாநிலப் போட்டி மற்றப் போட்டிகளைக் காட்டிலும் சற்றுப் பதட்டமாக இருந்தது” என்றார் நிஷாந்த்.ஒவ்வொரு புள்ளியும் வெற்றியை நிர்ணயிக்கின்ற நிலையில் ஒவ்வொரு முறை பந்தை எறியும்போதும், அதை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டதற்கு நல்ல பலன் கிடைத்தது என்றும் கூறினார். தான் தவறவிட்ட ஒரு புள்ளியும் கிடைத்திருந்தால் 100% பெற்று இன்னும் இரு மடங்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்றார். கடுமையான, தொடர்ந்த பயிற்சியும், பெற்றோரின் ஊக்கமும் போட்டியில் தனக்கு உறுதுணையாக இருந்ததாகக் குறிப்பிடும் அவர், பயிற்சிகளின் போது பலமுறை 25 வாய்ப்புகளில் 25 முறையும் (100%) கூடையில் போட்டுத் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

நிஷாந்த் ஃபுட்ஹில் உயர்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்புக்கான கூடைப்பந்து அணியிலும், டென்னிஸ் அணியிலும் இடம் பெற்றுள்ளார். பிளெஸன்டன் ஹார்ட் நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் பள்ளி அளவில் நடைபெற்ற புவியியல் வினாடி வினாவில் (Geography Bee School Championship) முதல் இடம் பெற்றுள்ளார். மேலும் நகரின் CCOP நடத்தும் பள்ளி மாணவ, மாணவியருக்கான கூடைப்பந்து போட்டிகளுக்குப் பகுதிநேர நடுவராகவும் (Referee Volunteer) தொண்டு செய்து வருகிறார்.

நிஷாந்த் பிளஸென்டன் தமிழ்ப்பள்ளியில் வரும் ஆண்டிறுதி வகுப்பை (ஏழாம் வகுப்பு) படித்து தமிழில் பட்டப்படிப்பை முடிக்க இருக்கிறார். இவரது பெற்றோர்கள் பழனிசாமி மற்றும் கல்பனா பழனிசாமி CTA தமிழ்ப்பள்ளியில் பாடம் கற்பிப்பதுடன், வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். வாழ்த்துக்கள் நிஷாந்த்!

© TamilOnline.com