திருக்குறளை மகாத்மா காந்தி விரும்பிப் படித்தது குறித்து எனது தாய் என்னிடம் கூறிய தகவலைக் கூறுகிறேன். திருவள்ளுவரைப் பற்றி காந்தி அறிந்து, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளைப் படித்து வியந்தார். திருக்குறளை அதன் மூலமொழியான தமிழிலேயே படித்தால் இன்னம் சுவையாக இருக்கும். தனக்கு மறு ஜென்மம் ஒன்று இருந்தால் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று கூறினார் காந்தி.
மனோரமா, நடிகை, உலக வள்ளுவர் பேரவையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...
*****
ஒரே கட்சி தொடர்ந்து ஐந்தாண்டுகள் ஆட்சியில் தொடருமானால் அந்தக் கட்சிக்கு ஆணவம் அதிகரிக்கும். பயம் போய்விடும். எனவே, ஒவ்வொரு தேர்தலிலும மாற்றம் கொண்டு வருவது ஜனநாயகத்திற்கு நல்லது. தமிழகத்தில் மாற்று ஆட்சி அவசியம் என்பது எங்கள் கட்சியின் முடிவு.
தா. பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர், செய்தியாளர்களிடையே பேசியது...
*****
ஆசை, விருப்பம், எதிர்பார்ப்பு எல்லாம் இருக்க வேண்டியதுதான். ஆனால், அது குறுகிய கால வளையத்திற்குள்ளோ அல்லது உடனடி பலனைக் காணும் விதத்திலோ இருக்கக்கூடாது. கட்சி அமைப்பில் ஏதேனும் வாய்ப்புக் கிடைத்தால் சந்தோஷம். ஆனால், நமது நோக்கம் தமிழகத்தில் கட்சி வளரணும்; அரசாங்கத்தில் காங்கிரஸ் பங்கு பெறணும். அதற்கேற்றபடி நம் உழைப்பு அமையணும் என்றுதான் இருக்க வேண்டும்.
கார்த்தி சிதம்பரம், மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன், பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில்...
*****
குடும்பத்தில் உள்ளவர்களின் கருத்துக்களை நான் கட்சியில் திணித்தது கிடையாது. என் மகன் வையாபுரி ம.தி.மு.க. அலுவலகத்திற்கு வந்ததே கிடையாது. எனக்கு எது சந்தோஷமோ அதைத்தான் என் தாய் செய்வார். அதற்குள் 'தாய் சொல்லைக் கேட்காதவன்' என என்னைச் சித்தரித்து விட்டனர். என் தாயைச் சர்ச்சைக் குரியவராக ஆக்கியதால் மனக்கவலை அடைந்தேன்.
வை.கோ., ம.தி.மு.க. பொதுச்செயலர், பத்திரிகையாளர்களிடம்...
*****
வளர்ந்த நாடுகளில் சுமார் 90 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். இந்தியாவில் 35 சதவீதம் பேர் எழுத, படிக்கத் தெரியாமல் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் எழுத்தறிவு புகட்ட வேண்டும். அதற்கு மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும். இயற்கை வளங்கள், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், மனிதவளம் ஆகியவற்றைச் சார்ந்தே ஒரு நாட்டின் வளர்ச்சி அமையும்.
இதில் 65 சதவீத வளர்ச்சி மனித வளத்தில்தான் அடங்கியுள்ளது. இளைஞர் கள் அதிகமுள்ள இந்தியாவில் மனித வளத்தின் மூலம் மட்டுமே எதிர்பார்க்கும் வளர்ச்சியை விரைவில் அடைய முடியும்.
வி.என். ராஜசேகரன், பல்கலைக்கழக மானியக்குழு துணைத்தலைவர், சென்னை கிரெசன்ட் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பேசியது...
*****
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெறும் 63 ரன்களையே சேர்த்தார் சச்சின். இதனால் அவரது ஆட்டம் முடிந்துவிட்து என்றுகூட பலர் எழுதினர். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. ஏன், கராச்சி டெஸ்ட் முடிந்ததும் 'சச்சின் நிலை குறித்து கவலைப்படுகிறீர்களா?' என என்னிடம் கேட்டனர். அப்போதுகூட இல்லை என்றுதான் உடனடியாக பதில் அளித்தேன். அதன்பிறகு இரண்டாவது இன்னிங்ஸில் அவரது ஆட்ட நுணுக்கத்தை அறிந்தவர்கள் அந்தக் கருத்திலிருந்து பின் வாங்கியிருக்க முடியும். ஷோயப் அக்தர் வீசிய பந்துகளை சச்சின் எதிர்கொண்ட விதம் அற்புதமாக இருந்தது. அப்போதே நினைத்தேன் அவருக்கு இன்னும் மிகப் பெரிய இன்னிங்ஸ் இருக்கிறது என்று.
கிரேக் சேப்பல், இந்திய அணியின் பயிற்சியாளர்...
*****
ஒரு வழக்கறிஞரை நீதிபதியாக நியமிப்பது அவரது திறமைக்கும் தகுதிக்கும் அளிக்கப்படும் கெளரவம் ஆகும். இதில் அரசியலுக்கு இடமில்லை. தகுதி மட்டுமே பரிசீலிக்கப்படும். விளம்பரத்துக்காகத் தொடரப்படும் பொதுநல வழக்குகளை நீதிமன்றங்கள் விசாரிக்கக்கூடாது. இதனால் நீதிமன்றத்தின் பொன்னான நேரம் வீணாகும்.
ஒய்.கே. சபர்வால், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, விழா ஒன்றில் பேசியது...
*****
தொகுப்பு:கேடிஸ்ரீ |