மூத்தோர் சொல் கேள்
அது ஒரு அழகான காடு. அந்தக் காட்டின் நடுவில் இருந்த பெரிய குட்டையில் மீன்களும், தவளைகளும் வசித்து வந்தன. அவற்றைத் தின்னக் கொக்குகளும், நாரைகளும் சுற்றிப் பறந்து கொண்டிருக்கும். அவற்றிடமிருந்து தப்பிப் பிழைப்பதே அவற்றிற்குப் பெரிய சவாலாக இருந்தது.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



ஒருமுறை இரண்டு காட்டெருதுகள் அந்தக் குளத்தருகே வந்துவிட்டன. அங்கே செழித்து வளர்ந்திருந்த புல்லையும் செடி கொடிகளையும் தின்றுகொண்டு அவை அங்கேயே தங்கிவிட்டன.



இப்படியே இருக்கையில் ஒருநாள் அவற்றுக்கிடையே யார் பெரியவன் என்று சச்சரவு ஏற்பட்டது. முதல் எருது நான்தான் பெரியவன் என்றது. இரண்டாம் எருதோ, இல்லை நான்தான் உன்னைவிடப் பெரியவன் என்றது. அந்தக் குட்டையைச் சுற்றிச் சுற்றி வந்து அவை சண்டை போட்டன.

குளத்தில் இருந்த சில தவளைகள் வெளியே வந்து இதை வேடிக்கை பார்த்தன. அவற்றில் மூத்த தவளை ஒன்று, “நாம் இப்போது இங்கே இருப்பது ஆபத்து. எப்போது வேண்டுமானாலும் அந்த எருதுகள் குட்டைக்குள் இறங்கிச் சண்டை போடலாம். ஆகவே நாம் எதிர்க்கரைக்குச் சென்று பாதுகாப்பாக இருப்பதுதான் நல்லது” என்றது. சில தவளைகள் அதற்கு உடன்பட்டன. ஆனால் மற்ற தவளைகளோ, “உனக்கு வேறு வேலையில்லை. நீ ஒரு சரியான பயந்தாங்கொள்ளி. வயது வேறு அதிகம் ஆகிவிட்டது. அதுதான் எல்லாவற்றிற்கும் பயப்படுகிறாய். நீ வேண்டுமானால் போ. நாங்கள் வரவில்லை. இங்கேயே ஆனந்தமாக சண்டையை வேடிக்கை பார்க்கப் போகிறோம்” என்றன. வேறு வழியில்லாமல் தன்னைப் பின்தொடர்ந்த சில தவளைகளுடன் எதிர்கரைக்குச் சென்றது மூத்த தவளை.

சற்று நேரம் சென்றது. சண்டை உக்கிரமானது. ஆத்திரம் கொண்ட எருதுகள் ஒன்றையொன்று முட்டித் தள்ளியபடி குட்டைக்குள் இறங்கி மோதிக்கொண்டன. அவற்றின் மோதலில் கால் குளம்புகளுக்கிடையே சிக்கிப் பல தவளைகள் உயிரிழந்தன. சில பெரும் காயமடைந்தன. “அய்யோ, மூத்த தவளை முதலிலேயே எச்சரிக்கை செய்ததே! கேட்காமல் போனதால் இப்படி ஆகிவிட்டதே” என்று புலம்பின தவளைகள். புலம்பி என்ன பயன், போன உயிர் வருமா? இல்லை, பட்ட காயம்தான் புலம்பலில் ஆறிவிடுமா?

அனுபவம் உள்ளவர்களின் சொல்லைக் கேட்டால் துன்பத்தைத் தவிர்க்கலாம். துன்பப்படாமலே கற்க முடிந்த பாடத்தைத் துன்பப்பட்டுதான் கற்பேன் என்று பிடிவாதம் பிடிக்க வேண்டியதில்லை. என்ன சொல்கிறீர்கள்?

சுப்புத்தாத்தா

© TamilOnline.com