FeTNAவின் 23வது தமிழ் விழா
2010 ஜூலை 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (Federation of Tamil Associations of North America-FeTNA) 23வது தமிழ் விழா வாட்டர்பரியில் (கனெக்டிகட்) உள்ள பேலஸ் தியேடரில் நடக்கவிருக்கிறது. சென்ற ஆண்டு அட்லாண்டா நகரில் அருமையாக நடத்தியிருந்தார்கள்.

இந்த விழாவில், அமெரிக்க மண்ணில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தமிழினம் தனக்கென ஓர் அடையாளத்தை ஆழமாகப் பதிக்க கலை, இலக்கிய நிகழ்ச்சிகளை இந்திய, அமெரிக்க வல்லுனர்களையும், கலைஞர்களையும் வரவழைத்துக் கொண்டாட இருக்கிறார்கள். கனெக்டிகட் தமிழ்க் குழந்தைகள் ‘சங்கே முழங்கு’ என்ற பாட்டுக்கு, படியெடுத்து நடந்து சிறப்பு விருந்தினர்களை வரவேற்றுத் தொடங்கவிருக்கிறது.

இயக்குனர் சிகரம் பாரதிராஜா, நடிகர் விக்ரம், பிரபல நடிகை த்ரிஷா, சேவைக்கும், சனாதன தர்மத்துக்கும் பெயர் போன தவத்திரு மருதாசல அடிகளார் இளைய பட்டம், சிரிக்க வைக்க நடிகர் சந்தானம், சிந்திக்க வைக்கப் பேரா. பர்வீன் சுல்தானா, கவிதை வழங்கக் கவிஞர் தாமரை என்று சிறப்பு விருந்தினர்கள் இந்தியாவிலிருந்து வருகிறார்கள்.

##Caption## ஜூலை 3 அன்று புதுச்சேரி தலைக்கோல் குழுவினர் ‘மதுரை வீரன்’ என்ற தெருக்கூத்தை அமெரிக்க அரண்மனை அரங்கத்துக்குக் கொண்டுவருகிறார்கள். மறுநாள் மாலை மெல்லிசை மன்னர் ஹாரிஸ் ஜெயராஜ், கார்த்திக், சாதனா சர்கம் ஆகியோருடன் இணைந்து இன்னிசை அளிக்கவிருக்கிறார்.

இவற்றைத் தவிர்த்து அந்தந்த மாநிலங்களிலிருந்து தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், தொடரும் மருத்துவக் கல்வி, வாழ்க்கைத் துணை சந்திப்பு, தொழிலதிபர்கள் வரவேற்பு என்று பல நிகழ்ச்சிகள் உள்ளன.

20 திருமணங்களைக் கூட ஒன்றாக நடத்தி விடலாம். ஆனால் இது போன்ற எல்லா தமிழர்களின் ஆர்வத்துக்கும் திறமைக்கும் வயதுக்கும் கலையுணர்ச்சிக்கும் முக்கியத்துவத்துக்கும் ஏற்ப ஒரு விழா நடத்தப் பொறுப்பேற்க விரும்பும் மனிதருக்கு ஒரு அசாதாரணத் திறமையும், தன்னம்பிக்கையும் வேண்டும். அதற்குச் சொந்தமானவர் முனைவர் பழனி சுந்தரம். அவர்தான் விழாவின் ஒருங்கிணைப்பாளரும், FeTNAவின் செயலாளரும். விரைவில் தலைவராகப் பொறுப்பேற்க இருக்கிறார். தற்போது தலைவர் முனைவர் முத்துவேல் செல்லையா, சுந்தரத்துக்கு பலத்த ஆதரவு கொடுத்து இந்த விழாவின் வெற்றிக்கு முழு மூச்சுடன் முனைந்து பாடுபடுகிறார்.

சரி, வாசகர்கள் என்ன செய்யலாம்? கீழே கண்ட வலைதளத்துக்குச் செல்லவும். எல்லா விவரங்களையும் அதில் காணலாம். அங்கே பதிவு செய்து கொள்ளவும். ஆசையிருந்தும் உங்களால் வர முடியாவிட்டாலும் அமெரிக்காவில் உள்ள உங்கள் உறவினர்/நண்பருக்குத் தெரிவியுங்கள். அப்படியும் இல்லையென்றால், உங்கள் வாழ்த்துக்களையாவது FeTNAவுக்கு அனுப்புங்கள்.

இணையதளம்: www.fetna.org

தொடர்புக்கு:
டாக்டர் பழனி சுந்தரம் 203-271-2064
டாக்டர் முத்துவேல் செல்லையா 443-538-5774

டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்

© TamilOnline.com