சமயபுரம் மாரியம்மன்
உலகில் அனைத்து சக்திகளுக்கும் காரணமாக இருப்பவள் அன்னை ஸ்ரீ ஆதிபராசக்தி. நாம் அவளை அன்னை, தேவி, துர்கா, குமுதா, சண்டி, சாமுண்டி, மாரி எனப் பல பெயர்களால் அழைத்து வழிபடுகிறோம்.

தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள மாரியம்மன் திருத்தலங்களில் தலையாயது சமயபுரம் மாரியம்மன் கோவில். கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகக் காட்சி தரும் மாரியம்மனுக்கு உலகெங்கிலும் பக்தர்கள் உண்டு. திருச்சி-சென்னை சாலையில் திருச்சியிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது சமயபுரம். காவிரிக்கு வடகரையில் சுமார் 7 மைல் தூரத்தில் மகாசக்தி பீடமாக மாரியம்மன் கோயில் கொண்டுள்ளாள்.

கோவில் அமைந்துள்ள பகுதிக்கு கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்ற வரலாற்றுப் பெயர்களும் உண்டு. கி.பி. 1706ல் உருவான இக்கோவில் இன்று மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. கோவிலின் தலவிருட்சம் வேம்பு. தீர்த்தம் பெருவளை வாய்க்கால், பள்ளி தீர்த்தம் (தெப்பக் குளம்). அம்பாள் மீது அருட்பாக்கள் பாடிக் கண்ணொளி பெற்றவர் அமரர் சிவந்தலிங்க சுவாமிகள்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்த 'வைஷ்ணவி' விக்ரகத்தில் உக்கிரம் அதிகமாக இருந்ததால், அக்காலத்தில் வாழ்ந்த ஸ்ரீரங்கம் அய்யர் சுவாமிகள் அந்த விக்ரகத்தை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்தார். பணியாளர்ர்கள் அந்த விக்ரகத்தை எடுத்துக் கொண்டு வடபுறமாகச் சென்று ஓரிடத்தில் இளைப்பாறினார்கள். பின்னர் விக்ரகத்தை எடுத்துக்கொண்டு தென்மேற்காகச் சென்று கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். அவ்வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள் திடீரென்று தோன்றிய இந்த அம்பாள் விக்ரகத்தைக் கண்டு அதிசயப்பட்டு, அக்கம்பக்கத்திலுள்ள மக்களைக் கூட்டி, அம்மனை வழிபட்டுக் கண்ணனூர் மாரியம்மன் என்ற பெயரிட்டனர்.

பூச்சொரிதல் திருநாளுக்கு முந்தைய 28 நாட்களுக்கு தளிகை, நைவேத்யம் அம்பாளுக்குக் கிடையாது. அம்பாள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பதால் மாவிளக்கு, இளநீர், பானகம் நீர்மோர் ஆகியவை மட்டுமே இந்த நாட்களில் நைவேத்யம் செய்யப்படுகிறது.


இதே காலத்தில் வடக்கே உள்ள விஜயநகரத்து அரசர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்தார். வரும் வழியில் கண்ணனூரில் முகாமிட்டார். அரண்மனை மேட்டில் உள்ள மாரியம்மனை தரிசித்துவிட்டுத் தென்னாட்டில் தங்கள் அரசு வெற்றிபெற்றால் கோயில் கட்டி வழிபடுவதாக வேண்டிக் கொண்டார். அவ்வாறே வெற்றி பெற்றதும், வேண்டிக் கொண்டபடி கோவில் எடுத்து, பரிவார தேவதைகளாகப் பிள்ளையாரையும், கருப்பண்ண சுவாமியையும் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகமும் செய்து, ஆலய பூஜைகளுக்காக, திருவானைக்கா ஆலய வழிவந்த அர்ச்சகர்களை நியமித்து, கோவில் நிர்வாகத்தையும் திருவானைக்கா ஆலயத்துடன் சேர்த்தார்கள். இதன் நினைவாக இன்றும் அம்பாள் திருத்தேர் விழா அன்று திருவானைக்காவிலிருந்து பிரசாதம் வந்து நைவேத்யம் செய்கிறார்கள். பிற்காலத்தில் ஆலய நிர்வாகம் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சேர்ந்து விட்டது. 1984ம் ஆண்டு ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்தில் இருந்து பிரிந்து தனி நிர்வாகத்திற்கு வந்தது.

கோயிலில் உள்ள மாரியம்மன் உற்சவச் சிலை விஜயநகரத்து மன்னர்களால் வழிபாடு செய்யப்பட்டதாகும். விஜயநகரப் பேரரசுக்கு ஆபத்து ஏற்பட்டபோது, அம்மனின் உற்சவச் சிலையை தங்கப் பல்லக்கில் தூக்கி வந்தனராம். பல்லக்கைத் தூக்கி வந்தவர்கள், அம்மன் சிலையைச் சமயபுரத்தில் இறக்கி வைத்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு வந்து பின் பல்லக்கைத் தூக்க முற்பட்டபோது தூக்க முடியாததால் அங்கேயே விட்டு விட்டுச் சென்றனராம். பின்னர் விஜயரங்க சொக்கநாதர் ஆலயத்தில் அம்மனுக்குத் தனிக்கோவில் அமைத்துப் பிரதிஷ்டை செய்தார்கள் என வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற்காலத்தில் மாரியம்மன் பேரில் பெரும்பக்தி கொண்ட சூரப்ப நாயக்கர் என்னும் தனவந்தர் அம்பாள் விக்ரகம் பழமையாக இருந்ததால் பதிலுக்குப் புதிய விக்ரகம் பிரதிஷ்டை செய்தார். ஆனால் அம்பாள் அதற்கு உத்தரவளிக்கவில்லை. சூரப்ப நாயக்கர் மனம் உருக அம்பாளை வேண்டினார். இதன் பயனாக அந்த மாரியம்மன் விக்ரகம் ஒவ்வொரு திருவிழாவின் போதும் 9ஆம் நாள் திருவீதி உலா வருகிறது.

சமயபுரம் கோவிலில் ஆண்டுதோறும் நான்கு விதத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. முதல் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசத்தன்று நடக்கிறது. அன்று அம்பாள் ஸ்ரீரங்கம் வடகாவிரியில் (கொள்ளிடம்) எழுந்தருளித் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இரண்டாவது திருவிழா மாசி மாதத்துப் பூச்சொரிதல் விழா. மூன்றாவது சித்திரை மாதத்தில் நடக்கும் சித்திரைப் பெருவிழா. இது தேரோட்டம், தெப்பம் என்று மிகச் சிறப்பாக 13 நாட்கள் நடைபெறும். திருவிழாவின் போது முடிகாணிக்கை, ஆடு, மாடு, கோழி காணிக்கை, தீச்சட்டி எடுத்தல் ஆகிய பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன. நான்காவது திருவிழா வைகாசி மாதம் முதல் தேதியன்று பஞ்சப் பிரகாரத் திருவிழா. அன்றைய தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

பூச்சொரிதல்
அம்பாள் மகிஷனை வதைத்த பாவம் தீரவும், தன் சினம் தணியவும் சோழவள நாட்டில் திருச்சிக்கு வடக்கே வடகரையில் வேம்புக் காட்டில் கௌமாரி என்னும் பெயருடன் சிகப்பு நிறம் கொண்டு, மஞ்சள் உடை உடுத்தித் தன் உடல் முழுதும் வாசனை மலர்களை மலைபோல் குவித்து உண்ணா நோன்பிருந்து கடுந்தவம் செய்தாள். பின் சாந்த சொரூபிணியாகி, சமயபுரம் பெருவளை ஆற்றங்கரையில் மாரியம்மன் எனும் பெயர் கொண்டு தேவர்களுக்கும், பூலோக மக்களுக்கும் அருள் பாலித்தாள். அதனைக் கொண்டாடும் இந்தத் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து அம்மனுக்கு மலர் தூவி வழிபாடு செய்கின்றனர். பூச்சொரிதல் திருநாளுக்கு முந்தைய 28 நாட்களுக்கு தளிகை, நைவேத்யம் அம்பாளுக்குக் கிடையாது. அம்பாள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பதால் மாவிளக்கு, இளநீர், பானகம் நீர்மோர் ஆகியவை மட்டுமே இந்த நாட்களில் நைவேத்யம் செய்யப்படுகிறது.

சமயபுரம் மாரியம்மனின் அழகு தெய்வீகமானது. அம்பாள் எட்டுக் கைகளுடன் தலைமாலை, சர்ப்பக் குடையுடன் ஐந்து அசுரர்களின் தலைகளைக் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அழகைக் காண மனம் உருகி, மாசு அகன்று ஒருமைப்படும். அன்றாடம் இவ்வாலயத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அம்மனுக்கு கண்மலர் செலுத்துதல், உடல் உருவங்கள் வாங்கிச் செலுத்துதல் யாவும் அன்றாடம் காணும் காட்சிகள். அம்மனின் ஆடி வெள்ளி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

சீதா துரைராஜ்,
சான்ஹோஸே, கலிபோர்னியா

© TamilOnline.com