அன்புள்ள சிநேகிதியே,
என் ஒரே பிள்ளைக்கு இன்னும் மூன்று வாரத்தில் கல்யாணம். எவ்வளவு சந்தோஷமாகச் சொல்லவேண்டிய விஷயம்! ஆனால், நான் சோகமாகச் சொல்லுகிறேன். எத்தனை பிரச்சனைகள்; எதைத்தான் நினைத்துக் கவலைப்படுவது?
முதலில் வசதி. எனக்குப் பெரிய பதவி, சம்பளம் எதுவும் இல்லை. ஏதோ, நிரந்தர வருமானம். என் கணவருக்கு ஒரு நிலையில்லாத வேலை. ஒரு பெண் கல்லூரியில்; இன்னொருத்தி அடுத்த வருடம். என் கணவர் பிசினஸில் ஏமாந்து, நிறையக் கடன் இருக்கிறது. இந்த நிலையில் நான் ஏதாவது உதவுவேன் என்ற நம்பிக்கையில் இருந்த என் பிள்ளைக்குக் கோபம். ஏனென்றால் இரண்டு மாதத்துக்கு முன்பு அவனைப் பணிநீக்கம் செய்துவிட்டார்கள். திருமணத்தை நிறுத்திவிட நினைத்தான். அவன் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் அந்தப் பெண்ணோ அழுது கத்துகிறாள். அவள் குணம் எங்கள் யாருக்கும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
அவன்மீது ரொம்ப ஆதிக்கம் செலுத்துகிறாள். பார்ப்பதற்கும் கட்டையாக, குட்டையாக இருக்கிறாள். அவளிடம் எதில் மயங்கினான் என்று தெரியவில்லை. அவசர, அவசரமாக எங்களுக்குகூடச் சொல்லாமல் Propose செய்து விட்டிருக்கிறான்.
என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இதை எழுதும்போது நான் கண்ணீர் வடிக்கிறேன். நான் அவனை எதுவும் கேட்கும் நிலையில் இல்லை. அவனுக்கு ஒரு நல்ல தாயாக எந்த அரவணைப்பும் கொடுக்க முடியவில்லை. அவனுடைய சொந்த அப்பா, அதாவது என் முதல் கணவர் ஒரு குடிகாரர். கோபக்காரர். நான் ஒரு நல்ல பணக்காரக் குடும்பத்தில் பிறந்து, ரொம்பச் செல்லமாக வளர்க்கப்பட்டவள். அமெரிக்காவில் படிக்கும் மாப்பிள்ளை என்று என் அப்பா நான் காலேஜ்கூட முடிக்க விடாமல் அவசர, அவசரமாகக் கல்யாணத்தை ஆடம்பரமாகச் செய்து என்னை இங்கே அனுப்பினார். உலக அனுபவமே இல்லாத என்னை, மூன்று மாதக் குழந்தையோடு வெளியே தள்ளிவிட்டார் அந்தக் கணவர். 9 வருடம் 'ஒற்றைத் தாயாக' எங்கெங்கோ வேலை செய்து அவனைக் காப்பாற்றினேன். எனக்கும் சின்ன வயதுதானே! என்னுடைய தற்போதைய கணவர், என்னை மிகவும் விரும்பி, இவனைப் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதி கூறி என்னைத் திருமணம் செய்து கொண்டார்.
இவர் அவனுடன் பேசுவதில்லை. அவனுடைய திருமண விவரம் எதைப்பற்றிச் சொன்னாலும் கேட்டுக் கொள்வதில்லை. இவருக்கு தன்னை யாரும் மதிப்பதில்லை என்று ஒரே Complex.
ஆனால் நடைமுறையில் அது ஒத்துவரவில்லை. அவனும் வளர்கிற பையன். இவருக்கும் அவ்வளவு ஒட்டுதல் இல்லை. ஆகவே சாதாரண பேச்சு வார்த்தைகளைக் கூட இருவரும் தவறாகப் புரிந்துகொண்டு சண்டை போட்டுக் கொள்வார்கள். எனக்கு மேலும் இரண்டு குழந்தைகள் பிறக்க, இவன் பேரில் கொஞ்சம் கூட இவர் அக்கறை காட்டவில்லை. பையன் தனியனாக வளர்ந்ததால் கல்லூரி படிப்பைக் கூடத் தானே பார்த்துக் கொண்டான். எப்போதாவதுதான் வீட்டுக்கு வருவான். அவ்வப்போது அவன் நிலையைப் பற்றி எண்ணி வருத்தப்படுவேன்.
இவன் இந்தப் பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொள்ளப்போகிறேன் என்றபோது, எனக்குப் பிடிக்கவில்லையென்று சொன்னதற்கு அவன் "அம்மா, எனக்கென்று யாரும் இல்லை. Feel Lonely" என்றான். "சரியப்பா, உன் இஷ்டம்" என்று விட்டுவிட்டேன். தனக்குத் தெரியாமல் தானே திருமண விஷயத்தை முடித்துக் கொண்டான் என்று இவர் அவனுடன் பேசுவதில்லை. அவனுடைய திருமண விவரம் எதைப்பற்றிச் சொன்னாலும் இவர் கேட்டுக் கொள்வதில்லை. இவருக்குத் தன் வேலை நிரந்தரமாக இல்லை, தன்னை யாரும் மதிப்பதில்லை என்று ஒரே Complex. நான் இரண்டு பக்கமும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறேன். இதற்கு நடுவே, நேற்றைக்கு என் பையன், "அவள் ரொம்ப முரட்டு சுபாவமாக இருக்கிறாள். ஏன் இதில் மாட்டிக் கொண்டேன் என்று தெரியவில்லை. உன்னிடம் $10000 இருக்கிறதா? நான் பாதி செலவைப் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னேன்" என்று திருப்பிப் பணம் கேட்கிறான்.
இந்தத் திருமணத்தை நிறுத்த முடியுமா? எப்படி முடியும்? அப்படியே நடந்தாலும் அவன் சந்தோஷமாக இருப்பானா? என் பையனுக்கு ஏன் இப்படி ஒரு விதி? இந்தத் திருமணத்தை நிறுத்தினால் பழி என் மேல் வந்து விடுமோ என்று வேறு பயமாக இருக்கிறது. என்ன செய்வது?
இப்படிக்கு ..................
அன்புள்ள சிநேகிதியே,
நீங்கள் எழுதியதில் நான் உங்கள் மனநிலையைப் பற்றிக் கவலைப்படவில்லை. தந்தையின் பாதுகாப்பும், தாயின் அரவணைப்பும் இல்லாமல் வாழ்ந்து, தனக்குத்தானே முனைந்து வேலை செய்து, படித்து தனியனாக இருக்கும் அந்த மகனைப் பற்றித்தான் நினைக்கிறேன். தண்ணீர் எப்போதும் பள்ளத்தை நோக்கிப் பாய்வது போல, மனிதமனம் எப்போதும் பாசத்தை நோக்கித்தான் பாயும். அந்தப் பாசவெறிக்கு முன்பு, அதாவது அந்தப் பாச வெறுமைக்குப் பின்புதான் பணவெறி, பதவிவெறி எல்லாமே!
உங்கள் மகனுக்கு பணத்தால் ஆதரவு கொடுக்க முடியவில்லையென்றாலும், மனதால் கொடுங்கள். உங்கள் மருமகளைப் பற்றி நல்லவிதமாகவே பேசுங்கள். வேறு எந்த வழியில் எல்லாம் உங்களால் முடியுமோ, அங்கெல்லாம் உதவி செய்யுங்கள்.
உங்கள் வருங்கால மருமகள் தன் அன்பை, காதலைக் காட்டும்போது தங்கள் மகன், "தனக்கும் ஒருவர் இருக்கிறார்" என்ற ஒட்டுதல் உணர்வு கை கொடுத்திருக்கிறது. காதல், அன்பு, பாசம் இவையெல்லாம் வெளிப்படும் வகைகள், அவரவர் இயல்பைப் பொறுத்தது. 'Possessiveness' is a form of love.. உங்கள் மருமகள் அந்த வகையைச் சேர்ந்தவரோ என்று நினைக்கிறேன். எப்படி இருந்தாலும், இந்தத் திருமணம் நடக்கும். ஒரு வருடமாகத் திட்டமிட்டு, ஒரு வாரத்தில் நீங்கள் இதைத் தவிர்க்கப் பார்த்தால், பழி கண்டிப்பாக இருக்கும். நல்லவரோ, கெட்டவரோ - உங்கள் மகளைக் காதலித்து இருக்கிறார். அந்த மகனுக்குள் ஒரு நம்பிக்கையை வளர்த்து விட்டிருக்கிறார். இந்தப் பணப் பிரச்சனையால், இந்தத் திருமணத்தைத் திட்டமிட்டபடி நடத்த அவர்களுக்குள் நிறைய வாக்குவாதங்கள் இருக்கலாம். இருந்தாலும் இரண்டு வருடங்களாவது ஒருவரையொருவர் நேசித்து, எதிர்காலத்தைப்பற்றி நன்றாகச் சிந்தித்திருக்கிறார்கள். இந்தத் திருமணம் நடந்து அவர்களுக்குள் உரசல், மோதல் எல்லாம் முடிந்து ஒருவரையொருவர் அனுசரித்துப் போய் ஒரு 'Ideal Family' ஆகவும் இருக்கலாம். இல்லை முயற்சியெடுத்து, முடியவில்லையென்று என்று பிரிந்தும் போகலாம். இல்லை தினம் ஏதாவது சச்சரவும் இருக்கும். அதோடு காதலும் இருக்கும். குழந்தைகளும் இருக்கும். 'you neither make or break but keep pushing it' துவந்த யுத்தம் போலவும் இருக்கும். பின்னால் எப்படி என்பதைப்பற்றி இந்த நேரத்தில் ஆராய்ந்து பயனில்லை.
உங்கள் மகனுக்கு பணத்தால் ஆதரவு கொடுக்க முடியவில்லையென்றாலும், மனதால் கொடுங்கள். உங்கள் மருமகளைப் பற்றி நல்லவிதமாகவே பேசுங்கள். வேறு எந்த வழியில் எல்லாம் உங்களால் முடியுமோ, அங்கெல்லாம் உதவி செய்யுங்கள். முக்கியம், உங்கள் மருமகளை எந்தக் குறையும் சொல்லாதீர்கள். அவளை நீங்கள் அன்பாக கவனிக்க, கவனிக்க அவள் உங்களிடம் ஆசையாக இருப்பாள். கொஞ்சம் dominating nature இருந்தால் என்ன செய்வது? அது எல்லாம் தெரிந்துதானே Propose செய்திருக்கிறான். இதில் முக்கியம் உங்கள் மகனின் சந்தோஷம். இந்தத் திருமணம் முறிந்து போய், வேலையும் இல்லாமல் இருந்தால் அவன் நிலைமையை எண்ணிப் பாருங்கள். இரண்டாவது முக்கிய விஷயம், உங்கள் மருமகளை ஆசையாகப் பாருங்கள். இந்தத் திருமணத்தை 'யார் மதிக்கிறார்கள் நம்மை' என்ற எண்ணத்தைத் தவிர்த்து, ஒரு தாயாக முன்னிருந்து நடத்திவிட்டு வாருங்கள். உங்கள் கணவர் எந்தக் கோபம் உள்ளுக்குள் இருந்தாலும் நிச்சயமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.
நிச்சயம் எல்லாம் மிக நன்றாகவே நடந்தேறும். அனுபவத்தில் சொல்கிறேன். Enjoy the Happy Moment.
வாழ்த்துக்கள் சித்ரா வைத்தீஸ்வரன் |