ஆவி வந்த அடை!
ஆவி மெதுவடை

தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு - 1 கிண்ணம்
மிளகாய் வற்றல் - 4
இஞ்சி - 4 துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - 1 மேசைக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை
உளுத்தம் பருப்பை ஒருமணி நேரம் ஊறவைத்து வடிகட்டி உப்பு, மிளகாய் வற்றல், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். ஒரு தட்டில் 1 தேக்கரண்டி எண்ணெய் தடவி அரைத்த விழுதை மெலிதாகப் பரப்பவும். குக்கரில் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். வாயகன்ற பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் விட்டு, அதன்மேல் விழுதைப் பரப்பிய தட்டை வைத்து குக்கரை மூடவும். சுமார் 15 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும். பிறகு குக்கரைத் திறந்து வெந்த விழுதை எடுத்து நன்றாகப் பிசைந்து கடுகு தாளித்து, பெருங்காயம், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து நன்றாகக் கலந்து (தேவையானால் சிறிது தண்ணீர் விட்டுக் கலக்கலாம்) சிறு உருண்டைகளாக உருட்டி வடைபோல் நடுவில் ஓட்டை போட்டு மீண்டும் குக்கரில் வேக விடவும். மிகவும் ருசியான, சத்தான ஆபத்தில்லாத ஆவி வடை தயார்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com