ஆசைகள்
கேசவனுக்கு இப்போது பயம் கொஞ்சம் தெளிந்து விட்டிருந்தது. எதிரில் குத்துக்காலிட்டு உட்கார்ந்த பாம்பாட்டிக் கிழவன் மங்குணி தன் வெற்றிலைக் காவியேறிய பற்களைக் காட்டிச் சிரித்தபடி சொன்னான், "தகிரியமாயிருங்க தம்பி. அதுபாட்டுக்கு ஒங்க களுத்துல பூமாலையாட்டம் விழுந்து கிடக்கும். இந்தாங்க, கைக்கு ஒண்ணா இந்த ரெண்டு சாரையையும் புடிச்சுக்குங்க." மூடிக் கிடந்த இரண்டு கூடைகளைத் திறந்து அங்கே சுருண்டு படுத்திருந்த இரண்டு சாரையையும் எடுத்து ஏதோ கயிறுகளை நீட்டுவது போல் நீட்டினான் மங்குணி. மனசில் பயம் இருந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் தைரியமாக இருக்க முற்படுபவனைப்போல் அந்த இரண்டு சாரைகளையும் வாங்கிக் கொண்டான். அதே விநாடி அவற்றில் ஒன்று புஸ் என்று சீற, "ஆ" வென்று அலறியபடி அந்த இரண்டையும் தூக்கி எறிந்துவிட்டு வெளிறிய முகத்தோடு பின் வாங்கினான் கேசவன்.

"கலீர்" என்று யாரோ சிரிக்கும் சத்தம்.

திரும்பினான் கேசவன். குடிசையின் வாசலில் இடுப்பில் மண் குடத்தோடு மங்குணியின் மகள் அருக்காணி கீழ் வரிசைப்பற்கள் பளிச்சிடச் சிரித்தபடி நின்றிருந்தாள்.

”என்ன சாமி? வெஷம் இல்லாத சாரையைக் கையில புடிக்கறதுக்கு இத்தினி பயப்படறே நீ... எப்படித்தான் அம்பது நாளு கண்ணாடிக் கூண்டுக்குள்ளாற வெஷப் பாம்புகளோட இருக்கப் போறியோ?"

##Caption## மங்குணி தன் மகளை அதட்டினான். "ஏ சொம்மா இரு புள்ளே. தம்பியைக் கலாட்டாப் பண்ணிக் காரியத்தைக் கெடுத்துடாதே தம்பியோட கழுத்துல என்ன தொங்குது பாத்தியா? நம்ம மலையன்."

மண்குடத்தைக் குடிசையின் சுவரோரமாய் வைத்துவிட்டு மறுபடியும் கெக்கலிட்டுச் சிரித்தாள் அருக்காணி.

"கழுத்துல ஒரு துண்டைப் போட்டுக்கறதும் சரி. அந்த மலையனைப் போட்டுக்கறதும் சரி. அது ஏற்கனவே பாதி செத்தாச்சு, நயினா." கேசவனுக்கு அவமானமாய் இருந்தது. கூடவே ரோஷமும் பிறந்தது.

"மங்குணி, அந்த ரெண்டு சாரையையும் எடுத்துக் குடு. இருக்கிற பாம்பையெல்லாம் எடுத்து எம்மேலவுடு. என்ன ஆனாலும் சரி..." அவனுடைய கோபத்தைப் பார்த்து அருக்காணிக்கு இன்னமும் சிரிப்புப் பீறிட்டது. மங்குணியும் சிரித்தபடி சொன்னான்

"அவசரப்படாதீங்க தம்பி. அறிவுகெட்ட புள்ளே, அவ கேலி பண்ணினாங்கறதுக்காக மடத்தனமாத் தகிரியப்படறது ரொம்பவும் தப்பு தம்பி. ஏய் புள்ளே, வாயைப் பொத்திட்டு உன்னோட வேலையைப் பாரு."

அருக்காணி புடைவைத் தலைப்பை வாயில் திணித்தபடி சிரிப்பை அடக்கிக் கொண்டு அடுப்பருகே உட்கார்ந்து கொண்டாள். கேசவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அசிங்கமான மங்குணிக்கு இப்படி ஓர் அழகான பெண்ணா? அந்தத் திருத்தமான முகமும், பட்டாம் பூச்சிகளாய்ச் சிறகடிக்கிற அந்த விழிகளும் எள்ளுப்பூ மூக்கில் பளிச்சிடுகிற அந்த நத்தும் சதைப்பிடிப்பான அந்த இதழ்களும்..

"என்ன தம்பி, ரோசனை பண்றேங்க? என்னிக்குக் கண்ணாடிக் கூண்டுக்குள்ளாற போகப் போறீங்க." மங்குணி தன் பல நாள் தாடியைச் சொறிந்து கொண்டே கேட்டான்.

"அடுத்த வாரம் திங்கட் கிழமை."

"தகிரியமாப் போங்க, தம்பி உசிருக்கு ஒண்ணும் ஆவாது. அதுக்கு நான் க்யாரண்டி. நான் முந்திச் சொன்னமாதிரி எல்லா விஷப் பாம்புக்கும் அந்த மூலிகை வேரை அரைச்சுப் பால்லே கலந்து குடுத்து அதனோட வாயைக் கட்டினேன்... அதுங்க பாட்டுக்குச் சொம்மா ’பொசுக் பொசுக்’குன்னு சீறும். ஆனா, கொத்தாது. நீங்க பாட்டுக்கு அதுங்க கூடக் குளந்த மாதிரி விளையாடலாம். ஒங்க கையில வேரையும் கட்டிடறேன். அதுங்க பக்கத்திலேயே வராது. அப்புறமென்ன? அம்பது நாளென்ன அஞ்சு வருஷம்கூட அதுங்ககூட வாசம் பண்ணலாம்."

மங்குணியின் வார்த்தைகளைக் கேட்டுக் கேசவனுக்கு துணிவு பெருகியது. கம்மிய குரலில் சொன்னான் "மங்குணி, நான் எதுக்காக இந்தப் பாம்பு வேள்வியை நடத்தப் போறேன்னு உனக்குத் தெரியும். என்னோட தங்கச்சி மூணுபேர் கல்யாணத்தையும் முடிக்கிறதுக்கு குறைந்த பட்சம் எனக்கு ரெண்டு லட்ச ரூபா வேணும். நான் இன்னிக்கு இருக்கிற நெலைமையில அவ்வளவு பெரிய தொகையை உழைச்சுச் சேக்க முடியாது. இப்படி ஏதாவது ஸ்டண்ட் பண்ணி, ஊரை ஏமாத்தித்தான் பணம் சேர்க்கணும்."

"அதத்தான் அன்னிக்கே சொல்லிட்டீங்களே தம்பி! வர்றபணத்துல கால்வாசிப் பங்கு எனக்கு தர்றதாயும் சொல்லிட்டீங்களே! இனிமே நீங்க கண்ணாடி கூண்டுக்குள்ளாற போக வேண்டியதுதான் பாக்கி."

கேசவன் உணர்ச்சி மிகுதியில் மங்குணியின் கைகளைப் பற்றிக் கொண்டான். "மங்குணி. உன்னையே நம்பித்தான் இந்த வேள்வியில் நான் தைரியமா எறங்கறேன். கரப்பான் பூச்சியைப் பார்த்தாலும் பயந்து நடுங்கற ஆசாமி நான் பாம்புகளோட அம்பது நாள் வாசம் பண்ணப் போறதை நெனைச்சா மனசுக்கு உதறலா இருக்கு."

மங்குணி கோபமாய்ச் சொன்னான் "அட இன்னா தம்பி நீ, சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லிட்டு எந்தப் பாம்பும் அதுவா ஆளுங்களைத் தேடிட்டு வந்து கடிக்காது. நாம ஏதாச்சும் பண்ணினால்தான் அது கடிக்கும் அதுவுமில்லாம, இந்த நாகவல்லி வேருக்கு எந்த வெஷப் பாம்பும் கட்டுப்படும். நான்தான் எல்லாத்துக்கும் அந்த வேரை அரைச்சுப் பால்லே கலந்து கொடுத்துடறேனே, அப்புறம் என்ன பயம்?"

கேசவனின் இதழ்களில் சந்தோஷப் புன்னகையொன்று மலர்ந்தது.

*****


ஊருக்கு மத்தியில் மொட்டைத்தலை மாதிரி இருந்த அந்தக் காலியான திடலில் சுற்றிலும் தட்டிகள் அடிக்கப்பட்டு அதற்கு நடுவே அந்தக் கண்ணாடிக் கூண்டும் தயாராகிவிட்டது. ஊரில் இருந்த கட்சித் தலைவர்கள், மன்றங்கள், பணக்காரக் கிளப்புகள், ஆர்வமுள்ள நண்பர்களின் உற்சாக உள்ளங்கள், இவைகள் ஒன்று சேர்ந்து பொருளைத் திரட்டி, கேசவன் பாம்புகளோடு வாசம் செய்யும் அந்தக் கண்ணாடிக் கூண்டைத் தயாரித்துக் கொடுத்தன. உள்ளூர்ப் பிரமுகர் ஒருவர் கலர் ரிப்பனை வெட்டி, கண்ணாடி கூண்டைத் திறந்து வைத்துக் கேசவனை உள்ளே அனுப்பி வைத்தார். பாம்பாட்டி மங்குணி ஏகப்பட்ட பாம்புக் கூடைகளோடு வந்து கூண்டுக்குப் பக்கத்தில் நின்றிருந்தான். கேசவன் உள்ளே போனதும் கூண்டின் ஒரு மூலையில் இருந்த கண்ணாடிக் கதவைத் திறந்து ஒவ்வொரு பாம்பாய் உள்ளே வீசினான். வீசிய வேகத்தில் தரையில் அடிப்பட்ட சில நாகங்கள் படம் எடுத்துக் கொண்டு ஆக்கிரோஷமாய் ஆடின. சில கோபமாய் விறுவிறுவென்று ஊர்ந்தன. சில வீசிய இடத்திலேயே அசையாமல் கிடந்தன. ஏறக்குறைய ஐம்பது பாம்புகள்.

கேசவனின் பாம்பு வேள்வியைப் பார்க்க வெளியே கூட்டம் அலை மோதியது. டிக்கெட் வாங்க க்யூ வரிசை பாம்பாய் நீண்டது. அன்றைய ஒரு நாள் வசூல் மட்டும் இருபதாயிரம் ரூபாய். கேசவன் பூரித்துப் போனான்.

நாட்கள் ஓடின. அன்றைக்கு நாற்பதேழாவது நாள். காலை ஆறுமணி, தூங்கி எழுந்து கண்ணாடிக் கூண்டை விட்டுக் குளிக்க வெளியே வந்தான் கேசவன். மங்குணி காத்திருந்தான்.

"என்ன மங்குணி, இந்த நேரத்தில்?" ஆர்வமாய்க் கேட்டான்.

"சொம்மா பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். சாமி" என்றான்.

"நீ சும்மா வரமாட்டியே என்ன விஷயம், சொல்லு." சிரித்தான் கேசவன்.

மங்குணி ஓர் அசட்டுச் சிரிப்போடு ஆரம்பித்தான். "ஏங்க, பாம்பு வேள்வி இன்னும் மூணு நாள்லே முடியப் போவுது, இல்லீங்களா?"

"ஆமா ஏன்?"

"இதுவரைக்கும் எத்தினி ரூபா சாமி சேர்ந்திருக்கும்?"

"ஆறு லட்ச ரூபா சேர்ந்திருக்கிறதாச் சிநேகிதங்க சொன்னாங்க."

மங்குணி தலையைச் சொறிந்தான். "அப்படீன்னா என்னோட பங்குக்கு ஒண்ணே காலு லட்சம் வரும் இல்லீங்களா சாமி?"

"கண்டிப்பா வேள்வி முடிஞ்சதும் மொதல் காரியமா உனக்குச் சேர வேண்டிய பங்கைக் கொடுத்துட்டுத்தான் மத்த வேலை." கேசவன் குரல் நெகிழச் சொன்னான்.

மங்குணி கன்னத்தைத் தேய்த்துக் கொண்டே கேட்டான். "ஏஞ்சாமி, இந்தப் பாம்பு வேள்விக்கு இத்தினி காசு சேரும்னு நீங்க எதிர்பார்த்தீங்களா?"

"இல்லே, ஏன்?"

"நானும் எதிர்பார்க்கல்ல. அதனாலத்தான் என்னோட பங்கைக் கொஞ்சம் ஜாஸ்தியாக் கேக்கலாம்னு எண்ணம்."

கேசவன் திகைத்தான். "என்ன சொல்கிறான் இந்த மங்குணி?"

மங்குணி கேசவனைப் பார்க்காமல் தரையைப் பார்த்துக்கொண்டு பேசினான். "மொதல்ல பேசின கால்பங்கு சமாச்சாரத்தை இந்த நிமிஷத்தோட மறந்துடுங்க தம்பி. இப்ப இந்த நிமிஷம் நான் கேக்கறது அரைப் பங்கு."

கேசவனுக்குக் கோபம் வந்தது. "என்ன மங்குணி, உளர்றே?"

"நான் உளறலீங்க, சாமி, உள்ளதைச் சொல்றேன்."

"உனக்கு அரைப்பங்கு குடுத்துட்டா இன்னொரு அரைப்பங்குல என்னோட சிநேகிதங்க எத்தினி பேருக்குப் பங்கு போடறதாம்?"

"அதப்பத்தி எனக்குக் கவலையில்ல, சாமி. நீங்க மத்தவங்களுக்குக் குடுப்பீங்களோ மாட்டீங்களோ எனக்குத் தெரியாது. எனக்கு அரைப்பங்கு வரணும்."

சில நிமிஷங்கள் வரை மங்குணியை முறைத்தான் கேசவன்.

"இல்ல மங்குணி அது முடியாது. நாம் முதல்ல பேசின மாதிரி உனக்குக் கால்பங்குதான் தருவேன்."

"அரைப் பங்குக்குக் கம்மியா நான் வாங்க மாட்டேன், சாமி."

"சரி சரி. அதை அப்புறமாப் பேசி முடிவு பண்ணிக்கலாம். நான் முதல்ல குளிச்சுச் சாப்பிட்டுக் கூண்டுக்குள்ளாற போகணும்."

குளியலறையை நோக்கி நடக்க முற்பட்டான் கேசவன். வழியை மறிக்கிற மாதிரி வந்து நின்றான் மங்குணி.

"சாவகாசமா முடிவு பண்ற விஷயம் இல்ல சாமி. இந்த இடத்திலேயே உங்க வாயாலேயே எனக்கு முடிவு தெரிஞ்சாகணும்."

கேசவனுக்குச் சுர்ரென்று கோபம் வந்தது.

"கையேந்திக்கிட்டுக் கடைகடையா வீடுவீடாப் பாம்பைக் காட்டித் திரிஞ்சுட்டிருந்த உனக்கு, இந்தக் கால் பங்கைத் தருவதே அதிகம். மரியாதையாகக் குடுத்த பணத்தை வாங்கிட்டுப் போய்ச் சேர். வீணா வம்பு பண்ணாதே."

மங்குணியின் கண்கள் சிவந்தன. உக்கிரமாய்க் கேசவனைப் பார்த்தான். பிறகு விருட்டென்று வெளியேறினான்.

*****


##Caption## மங்குணியின் குடிசை.

"அப்படியா சொன்னான் அந்த ஆளு?" முகம் சிவக்கக் கத்தினாள் அருக்காணி.

"ஆமாம் புள்ளேங்கிறேன். அஞ்சு பைசாவுக்குக் கையேந்திக் கிட்டுக் கடைகடையா வீடு வீடாத் திரியற கூட்டமாம். நான் இல்லாட்டி, அந்தப் பய கண்ணாடிக் கூண்டுல ஒக்கார முடியுமா." சுவரில் சாய்ந்து மங்குணி கத்தினான்.

"நன்னியில்லாத ஜன்மம் காரியம் ஆறவரைக்கும் காலைப் புடிச்சான், காரியமானதும் காலை வாரிட்டான்."

விருட்டென எழுந்தான் மங்குணி.

"அவனோட காரியம் இன்னமும் பூர்த்தியாகல்ல, புள்ளே. அந்தப் பய, வேள்வி முடியறதுக்கு இன்னும் மூணு நாளு இருக்கு. அதுக்குள்ளாற அந்தக் பயலைப் பொணமாக்கிடறேன்."

"எப்படி நாய்னா, முடியும்?"

"ஏம் புள்ளே முடியாது? முந்தாநாள் சாயந்தரம் புதுசா ஒரு கொம்பேறி மூக்கனைப் புடிச்சுட்டு வந்தேன். அதை வெச்சே அவனைத் தீர்த்துக் கட்டப்போறேன். அந்தக் கொம்பேறி மூக்கனுக்கு இன்னும் மூலிகைப் பாலைத் தராம இருந்தது நல்லதாப் போச்சு. இன்னிக்குப் பூரா அதைப் பட்டினி போட்டு நாளைக்குக் காத்தாலே புதுசாப் பாம்பை மாத்தறமாதிரி கண்ணாடிக் கூண்டுக்குள்ளாற அந்தக் கொம்பேறி மூக்கனை விடப் போறேன்."

மகிழ்ச்சியில் கைகளைத் தட்டினாள் அருக்காணி. முகம் மலரச் சிரித்தாள்.

"கொம்பேறி மூக்கனையும், மத்தப் பாம்புங்க மாதிரி நெனைச்சுக் கிட்டுக் கையில வெச்சிகிட்டிருக்கிற குச்சியாலே சீண்டுவான் அவன். பசியோட இருக்கற மூக்கன் முகத்து மேலயே பாஞ்சு கொத்துவான்." மங்குணி முகம் இறுகச் சொன்னான்.

"அப்புறமா, எந்த டாக்டரு கொம்பனாலும் அவனைக் காப்பாத்த முடியாது."

"என்னிக்கு நாய்னா அந்தப் பாம்பை உள்ளாறவுடப் போறே."

"நாளைக்குக் காத்தாலே, பாம்புகளை மாத்த வேண்டிய நாளு. அப்பத்தான் விடப் போறேன்." மங்குணி காதருகே மறைத்து வைத்திருந்த பீடித்துண்டை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு தீக்குச்சியை உரசினான்.

"நாய்னா, நாய்னா நீ பாம்பை உள்ளாற விடறப்போ நானும் வர்றேன். அவன் அந்த கொம்பேறி மூக்கனாலே கடிப்பட்டுச் சாகிறதை நான் பார்க்கணும்." விழிகளில் வெறி மின்னச் சொன்னாள் அருக்காணி.

"ம். வா புள்ளே, தாராளமா வா. கூண்டுக்குப் பக்கத்திலேயே நின்னுக்க அவன் சாகறதைச் சந்தோஷமாய் பாரு." மங்குணி பீடிப் புகையைக் குப்குப்பென்று விட்டான்.

*****


இரவு பதினோரு மணி. கண்ணாடிக் கூண்டு.

"அட அருக்காணி, நீயா இதென்ன இந்த ராத்திநேரத்துல வந்திருக்கே?" கண்ணாடிக் கூண்டுக்குள் அமைக்கப்பட்டிருந்த சற்று உயரமான மேடையில் பாயை விரித்துத் தூங்குவதற்கு ஆய்த்தம் செய்து கொண்டிருந்த கேசவன், கண்ணாடி கூண்டுக்கு வெளியே தெரிந்த அருகாணியைப் பார்த்துக் கேட்டான். பார்க்க வந்த கூட்டம் சுத்தமாய் வடிந்து விட்டிருந்தது. நண்பர்கள் சாப்பிடப் போயிருந்தனர். அருக்காணி மெல்லிய குரலில் அழைத்தாள்.

"சித்த நேரம் வெளியாற வர்றியா, சாமி."

கேசவனுக்கு குழப்பமாய் இருந்தது. இந்த நேரத்தில் எதற்காக வெளியே வரச் சொல்கிறாள்? ஒன்றும் புரியாதவனாய்க் கண்ணாடிக் கூண்டைத் திறந்து கொண்டு வெளியேவந்தான். அருக்காணியை நெருங்கினான். "என்ன விஷயம், அருக்காணி."

அருக்காணி குரலைத் தாழ்த்திக் கொண்டாள் "ஏஞ் சாமி, என்னோட நாய்னாவுக்கும் உனக்கும் ஏதாச்சும் தகராறா?"

"ஆமா, அருக்காணி உன்னோட அப்பனுக்குப் பேராசை வந்துடுச்சு. முன்னே பேசின மாதிரி கால் பங்கு வாங்கிக்க மாட்டாராம். அரைப்பங்கு வேணுமாம். உங்கப்பன் கேக்கிறது நாயமா, அருக்காணி?"

"அது ஒரு காசுப் பிசாசு சாமி. அதைவுட்டுத் தள்ளுங்க. நீ அரைப்பங்குக்கு ஒத்துக்காததுனாலே அந்த கிளம் உம்மேல ரொம்பவும் காட்டமா இருக்கு. நாளைக்குக் காத்தாலே பாம்புகளை மாத்தறப்போ வாயைக் கட்டாத கொம்பெறி மூக்கனை உள்ளாற விடப்போவுதாம்."

அருக்காணி சொன்னதைக் கேட்டு அதிர்ந்தான் கேசவன். முகம் வெளுத்து வியர்வை அரும்பியது.

"வாயைக்கட்டாத... கொ... கொ... கொம்பேறி மூக்கனா...."

"அட, ஏஞ்சாமி இதுக்கு போயி இப்படி பயப்படறே! நான் உட்டுடுவேனா? இன்னிக்கு ராத்திரி என்னோட நாய்னா தூங்கின பின்னாடி, அந்தக் கொம்பேறி மூக்கன் இருக்கற கூடையை எடுத்துக்கிட்டுப் போயி, குடிசைக்குப் பக்கமா ஒடற ஆத்துல கடாசப் போறேன். முந்திய வாயக் கட்டின இன்னொரு கொம்பேறி மூக்கனை அதே கூடைக்குள்ளாற விட்டுடப் போறேன். கிளம் அந்தப் பாம்பைத்தான் உன் கூண்டுல விடும்."

"அரு...க்...காணி..." நாத் தழுதழுத்தது கேசவனுக்கு. "சரியான நேரத்தில் காப்பாத்த வந்திருக்கிற உனக்கு, நான் பிரதியுபகாரமா என்ன பண்ணப் போறேன்."

அருக்காணி மென்மையாய் நாணம் கலக்கப் புன்னகை பூத்தாள். "உன்னோட மூணு தங்கச்சிக்கும் கண்ணாலம் ஆயிட்ட பெறகு, உனக்குன்னு ஒருத்திய நீ தேடற சமயத்துல இந்த அருக்காணி நியாபகம் வந்தாப் போதும்." சொல்லிவிட்டு வேகமாய் நடந்து மறைந்தாள்.

அருக்காணியின் காதல் கிட்டிய மகிழ்ச்சியில் இதயம் விம்ம நின்றான் கேசவன்.

ஒலிபெருக்கியில் குரல் ஒலித்தது. "பாம்பு வேள்வியைக் காண வந்திருக்கும் அன்புள்ளம் கொண்டவர்களே இன்றைக்கு நாற்பத்தெட்டாவது நாள். வேள்வி பூர்த்தியடைய இன்னமும் இரண்டே நாட்கள்தாம் உள்ளன. பாம்பு வீரர் கேசவன் இன்று வரை மிகவும் உற்சாகமாகவே காணப்படுகிறார். இதுவரை பார்த்து ரசித்த கண்கள் இரண்டு லட்சத்துக்கு மேல். வசூலான தொகை ஆறு லட்சத்துக்குமேல். இன்றைய தினமும், நாளையும் பாம்புகள் மாற்றப்படும். புதிதாகப் பிடிக்கப்பட்ட கொடிய நாகங்கள் உள்ளே விடப்படும். டிக்கட்டுகளைப் பெற்றுக் கொண்டு விரைந்து வாரீர்."

ஒலிபெருக்கியில் தொடர்ந்து இந்த அறிவிப்புக் கேட்டுக் கொண்டேயிருக்க கண்ணாடிக் கூண்டுக்குள் உட்கார்ந்திருந்த கேசவன், கூண்டுக்கு வெளியே நின்றிருந்த அருக்காணியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அருகே மங்குணி பாம்பு கூடைகளோடு விறைப்பாய் உட்கார்ந்திருந்தான். அருக்காணி கண்ணாலேயே சைகை காட்டினாள், "பயப்பட வேண்டாம்" என்று. நேற்றைக்கு இரவு அவள் ஆற்றில் வீசியெறிந்த கொம்பேறி மூக்கன் இந்நேரம் எங்கே ஒதுங்கி கிடக்கிறதோ?

"மங்குணி, பாம்புகளை உள்ளாற விடு நேரமாவுது?" கேசவனின் நண்பர்களில் ஒருவன் சொன்னான்.

மங்குணி எழுந்தான். கூடைகளை நகர்த்தி வைத்துக்கொண்டான். ஒவ்வொன்றாய் உள்ளே விட ஆரம்பித்தான். கடைசியாய் அந்தக் கூடை.

மங்குணி அதைக் கையில் எடுத்துக் கொண்டான். அருகில் சிரித்தபடி நின்றிருந்த அருக்காணியைப் பார்த்தான். கூண்டுக்குள் இருந்த கேசவனைப் பார்த்தான். தனக்குள் மர்மமாய்ப் புன்னகை பூத்தான்.

"ஏ புள்ளே, அருக்காணி, உன்னைப் பெத்த அப்பனையே நீ ஏமாத்தப் பார்த்தே. அது என்கிட்ட நடக்காது புள்ளே. நேத்து ராத்திரி நீ அவன்கிட்டப் பேசியதை நானும் கேட்டுட்டேன், புள்ளே. நேத்தைக்கு ராத்திரி நீ விசியெறிஞ்சது வாயைக்கட்டின கொம்பேறி மூக்கனை. கூடைகளை நான்தான் மாத்திவச்சேன். ஏமாந்துட்டியே, அருக்காணி."

தனக்குள் பேசிக்கொண்டே அந்தக் கூடையை லேசாய்த் திறந்து கண்ணாடிக் கதவின் வழியே வாயைக் கட்டாத அந்தக் கொம்பேறி மூக்கனை உள்ளே விட்டான் மங்குணி. அது கேசவனை நோக்கி ஊர்ந்து போக ஆரம்பித்தது.

ராஜேஷ்குமார்

© TamilOnline.com