பல்லவிதா வழங்கிய விவ்ரிதி
2010 ஏப்ரல் 10 மற்றும் 11 தேதிகளில் பல்லவிதா வழங்கிய விவ்ரிதி சிறப்பாக நடந்தேறியது. பல்லவிதா நிறுவனம் இளைய சமுதாயத்தினர் கர்நாடக இசையை பாரம்பரிய முறையில் பாடுவதற்கும் அதன் நுணுக்கங்களைக் குழந்தைகள் நன்கு கற்கவும் வழிசெய்யும் அமைப்பு. இந்நிறுவனம் நடத்திய விவ்ரிதி என்ற இரண்டு நாள் விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக டி.எம்.கிருஷ்ணா, சங்கீத ரத்னகாரா குருவாயூர் துரை மற்றும் சான் ரமோன் மேயர் ஆப்ரஹாம் வில்ஸன் ஆகியோர் வந்திருந்தனர். பல்லவிதா நிறுவனர் லதா ஸ்ரீராமின் மகள் பல்லவி ஸ்ரீராம் சிறப்புரையாற்றி விழாவைத் துவக்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவிகள் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி விழாவிற்கு ஸ்ருதி சேர்க்க ஆரம்பித்தனர். பின்னர் பல்லவி ஸ்ரீராம் திவ்யா ராமச்சந்த்ரன் (வயலின்), கார்த்திக் கோபாலரத்னம் (மிருதங்கம்), கணேஷ் ராமச்சந்திரன் (கஞ்சிரா) ஆகியோரின் பக்கவாத்தியத்துடன் சிறப்பாகப் பாடினார்.

திரு டி.எம்.கிருஷ்ணா தனது சிறப்புரையில் கர்நாடக சங்கீதத்தின் நுணுக்கங்களைப் பல கோணங்களில் விவரித்தார். மதிய உணவிற்குப் பின் சிறார்கள் எம்.எஸ். பாடிய சுலோகங்களைப் பாடி அசத்தினார்கள். ரூபா மகாதேவனின் செம்மையான குரலோடு லக்ஷ்மி பாலசுப்ரமண்யா (வயலின்), பி.கே. பாபு (மிருதங்கம்), ஏ.மகாதேவன் (மோர்சிங்) இணைந்து இனிமை சேர்த்தனர்.

மாலையில் சங்கீத ரத்னகாரா குருவாயூர் துரை அவர்களும், டி.எம்.கிருஷ்ணாவும் சேர்ந்து லயமும் சங்கீதமும் எப்படிப் பின்னி பிணைகின்றன என்றும் அக்ஷரம், களை, களையின் வகை, நிரவல், சவுக்க கால வர்ணம் எனப் பல விஷயங்களை உதாரணங்களுடன் விவரித்தனர்.

ஏப்ரல் 11 ஞாயிற்றுக்கிழமை கணபதி ஸ்துதியுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. எம்.எஸ். கிருதிகளுடன் திருப்புகழையும் பாடி அசத்தினர் மாணவ மணிகள். கிருஷ்ணா அவர்களது மாணவி வித்யா ராகவன் பாடல்களைத் திருத்தமாகவும், திறமையாகவும் பாடினார். கார்த்திக் கோபால கிருஷ்ணன் (மிருதங்கம்), லக்ஷ்மி பாலசுப்ரமண்யா (வயலின்) ஆகியோரின் பக்கவாத்தியங்கள் சிறப்பு. சிந்து நடராஜன், அவரது பெற்றோர் திருமதி சாந்தி நாராயணன் (வயலின்), திரு நாராயணன் (மிருதங்கம்) திரு மகாதேவன் (மோர்சிங்) ஆகியோருடன் பாடி மனதைக் கவர்ந்தார்.

ஸ்ரீராமின் மகன் சித்தார்த்தின் ஆலாபனை வெகு சிறப்பாக இருந்தது. ரவீந்திர பாரதி ஸ்ரீதனம் (மிருதங்கம்), அஜய் நரசிம்ஹா (வயலின்), கணேஷ் ராம்நாராயண் (கஞ்சிரா) ஆகியோரும் அபாரமாகப் பக்கம் வாசித்தனர்.

சுஜாதா ஐயர்,
ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com