UCBயின் 6வது தமிழ் மாநாடு
2010 ஏப்ரல் 24, 25 தேதிகளில் பெர்க்கலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தெற்கு, தென்கிழக்கு ஆசியக் கல்வி மையமும், தமிழ்த் துறையும் இணைந்து 'காலம்' என்ற பொதுத் தலைப்பில் 6வது தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தியது.

ஏப்ரல் 24ம் நாள் காலையில் தெற்கு தென்கிழக்கு ஆசியக் கல்வி மையத் தலைவர் அலெக்ஸாண்டர் வான்ரோஸ்பட் மாநாட்டைத் துவக்கி வைத்தார். டொரண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் செல்வ கனகநாயகம் 'பல்லவர் கால இலக்கியங்களின் வழி, அக்காலச் சமுதாயம் மற்றும் பண்பாட்டுக் கூறுகள்' குறித்த ஆய்வுக் கட்டுரையை வழங்கினார். இங்கிலாந்தைச் சேர்ந்த அறிஞர் விண்ட்னி கோக்ஸ், முதலாம் குலோத்துங்க சோழ மன்னனின் ஆட்சிச் சிறப்பு, பல்துறைப்புலமை, கட்டிடக்கலை வளம் உள்ளிட்ட பல சிறப்புக்களைத் தொகுத்து வழங்கினார்.

மௌண்ட் ஹோல்யோக் கல்லூரியைச் சேர்ந்த இந்திரா பீட்டர்சன் எழுதிய 'தஞ்சாவூர் சரபோஜி மன்னர் ஆட்சிக் காலத்தில் தமிழ் மருத்துவ முறைகளும் தமிழ் சித்த மருத்துவ மரபும்' என்ற ஆய்வுக் கட்டுரை வாசிக்கப்பட்டது. கோல்கேட் பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருந்த பேராசிரியர் பத்மா கைமல் காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயத்தில் அம்பிகையின் திருக்கோலம், தேவி மகாத்மியத்தை ஒத்திருப்பதை தம் ஆய்வுக் கட்டுரையில் சுட்டிக்காட்டினார். கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ரீஷாலி, தமிழ்நாட்டு ஆலயங்களின் அமைப்பு நூற்றாண்டுகள் தோறும் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளமையைத் தம் கட்டுரையில் விவரித்தார். பெர்க்கலி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த எலிசபெத் ஸிக்ரன் புறநானூறு காட்டும் பேராண்மைத் திறம் குறித்துத் தம் ஆய்வுக்கட்டுரையில் விளக்கினார்.

யேல் பல்கலைக்கழக அறிஞர் பிளாக்வெண்ட்வோர்த், பதினேழாம் நூற்றாண்டுக் கவிஞர்களான, இரட்டையர் அந்தகக் கவி வீரராகவ முதலியார், கவிராச பிள்ளை ஆகியோரது புலமைத் திறத்தையும், மொழி வளத்தையும் தெளிவுபடுத்தினார். சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் சாஷா எபிலிங், இலங்கையில் போர்க்காலங்களில் இயற்றப்பட்ட கவிதைகளின் உள்ளடகத்தையும் பொருள் ஆழத்தையும் திறம்பட எடுத்தியம்பினார். ஃபுளோரிடா பல்கலைக்கழகப் பேராசிரியர் வசுதா நாராயணன், நவராத்திரி கொலு கலாசாரத்தின் தோற்றம், தற்கால நிகழ்வுகளின் அடிப்படையில் கொலுவின் அமைப்பு குறித்த தம் ஆய்வுத் தொகுப்பை வழங்கினார். பிரின்ஸ்டன் பல்கலையின் இசபெல் க்ளார்க் தமிழ்நாட்டில் உறவுமுறைத் திருமணங்கள் குறித்து விளக்கினார்.

மைக்கேல் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கேத்தரின் யங், தற்கால தமிழ்ச் சமுதாயத்தில் நிகழும் சமயம் மற்றும் அரசியல் மாற்றங்கள் குறித்த தம் களப்பணி ஆய்வை விரித்துரைத்தார். பெர்க்கலி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிரண் கேசவ மூர்த்தி, நாவலாசிரியர் ஜெயகாந்தன் படைப்புகளில் ஆண்-பெண் நட்பின் எல்லை, திருமணம், குடும்ப உறவுகள் பற்றிய தம் ஆய்வுக் கட்டுரையை வழங்கினார்.

ஆய்வுக்கட்டுரைகள் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களும், விவாதங்களும் நடைபெற்றன. 'காலம்' தமிழ் ஆர்வலர்களை இணைத்த 'பாலம்'.

டாக்டர் கோமதி இலட்சுமணசுவாமி,
சான்டா கிளாரா

© TamilOnline.com