தென்றல்' மார்ச் இதழில் 'ஒரே ஒரு சின்ன உதவி' சிறுகதை படித்தேன். கடைக்குப் போதல், சமையல் என்று எல்லாவற்றையும் கணவனைச் செய்யச் சொல்வது சுவையாக இருந்தது. கதையில் வரும் மனைவி கணவனிடம் "மறந்து போச்சு, இதையும் பண்ணிடறீங்களா?" என்று சொல்கிறாள்!
இப்படி சொல்வதையெல்லாம் செய்யும் கணவன் எங்காவது இருக்கக்கூடுமா என்று வியந்தேன்.
பிரஹதா மோஹன் லாஸ் ஏஞ்சலஸ், கலி. *****
பிப்ரவரி மாதத் தென்றல் இதழைப் படித்தேன். ரசித்தேன்.
தாய்மொழிக்கும், இங்குள்ள தமிழ்ச் சமுதாயத்திற்கும் நல்ல பணி செய்து கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் தொண்டு மேன்மேலும் சிறக்க அன்னை காமாட்சி அருள் புரிவாளாக.
தேவகுமார் ·ப்ரீமாண்ட், கலி. *****
'தென்றல்' மார்ச், 2006 இதழில் திலகவதியுடனான நேர்காணலை மிகவும் ரசித்தேன். அற்புதமான பெண்ணான அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
கீதா பென்னட் லாஸ் ஏஞ்சலஸ், கலி. *****
நான் என் மகனுடன் நியூயார்க்கில் இருக்கிறேன். ஓய்வு நேரம் அதிகம் கையில் இருப்பதால், எங்களைச் சுற்றி கவனிக்க நேரம் உள்ளது. அதன் விளைவு மனதில் தோன்றியதை எழுதும் பழக்கம். எழுதியதைத் தபாலில் சேர்க்காமல் நானே அனுபவித்ததுடன் சரி. உங்கள் பத்திரிகையைக் கண்டவுடன் என் எண்ணங்களை அனுப்பலாம் எனத் தோன்றியது. அனுப்பி வைத்திருக்கிறேன்.
லலிதா பாலசுப்பிரமணியம் யான்கர்ஸ், நியூயார்க். *****
கிளீவ்லாந்தில் (ஒஹையோ) தென்றல் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அமெரிக்கா மற்றும் கானடாவில் வசிக்கும் இந்தியர் களுக்குத் 'தென்றல்' ஒரு வரப்பிரசாதம்! அருமையான விஷயங்கள், கதைகள். இதயத்துக்கும், அறிவுக்கும் உற்சாகம் தருகின்றன.இத்துடன் $20 ஒரு வருட சந்தா அனுப்புகிறேன்.
சரஸிராஜ் தியாகராஜன் குபெக், கானடா. *****
மார்ச் 2006 இதழில் திலகவதி ஐபிஎஸ் அவர்களுடன் நேர்காணல் பார்த்தேன். உயர்ந்த கருத்துகளையும் தீவிரமான விஷயங்களையும் ஆமோதிக்கக்கூடிய வகையில் அவர் கூறியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஏற்றுக் கொண்டு இருப்பதோ பெரிய பொறுப்பான பதவி. அப்படியும் தீவிரமாகப் படித்து, எழுதுகிறார் என்பது சாதாரண காரியமல்ல. டெல்லியில் உயர் போலீஸ் அதிகாரியாகக் கிரண் பேடி சேவை செய்வதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதேபோல் சென்னையில் ஒரு பொறுப்புள்ள பெண்மணி உயர்ந்த இடத்தில் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சிதான். அதிலும் சாகித்ய அகடமி விருது பெற்று இருக்கிறார் என்பதைக் காணப் பெருமையாக இருக்கிறது.
பங்கு முதலீட்டைப் பற்றிச் சுருக்கமாகவும், உபயோகமுள்ளதாகவும் எழுதி இருக்கிறார்கள் சிவா மற்றும் ப்ரியா. தங்கம் ராமஸ்வாமியின் கதை பேச்சு மொழியில் இருப்பதால் ரசிக்க முடிகிறது. இசைமாமணி சீர்காழி படத்தைப் பார்த்ததுமே அவரது கணீரென்ற குரல் காதில் ஒலிக்கிறது.
அட்லாண்டா ராஜன் *****
கடந்த இதழ்களில் கலி·போர்னியா பாடநூல் சர்ச்சை குறித்த மணிவண்ணன் கட்டுரைகள் இந்தப் பிரச்சனையின் அடிப்படையை முழுவதும் வெளிக்காட்டுவதாக அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
பிரச்சனையின் வேர் இதுதான்: கலி·போர்னியா பாடத்திட்ட அடிப்படை வரையறையான "பாடங்களில் மாணவர்களுக்கு அவரவர்களது மதம் மற்றும் கலாச்சாரம் குறித்த சிறுமைப்படுத்துதல்களோ தாழ்வுணர்த்துதல்களோ இருக்கலாகாது" என்பது யூத மற்றும் இஸ்லாமியப் பாடங்களுக்குக் கடைப்பிடிக்கப்படுவது போல இந்துமதம் குறித்த பாடங்களில் கடைப்பிடிக்கப் படுவதில்லை" என்பதுதான் இப்பிரச்சினையின் ஆணிவேர். கட்டுரை ஆசிரியர் கூறுவதுபோல் "ஏனைய வரலாறுகளை" வெளிச்சம் போடுவது இந்து அமைப்புகள் மற்றும் இந்துப் பெற்றோர்களின் வேலையல்ல. 'பாடத்திட்ட வரையறைகள் பிற மதங்களுக்குப் பின்பற்றப்படுவதுபோல் இந்து மதத்திற்கும் பின்பற்றப்படவேண்டும்; கல்விக்கூடங்களில் இந்து மதம் கேலிச்சித்திரமாகவும் பிழையாகவும் சித்தரிக்கப்படும் நிலை மாறவேண்டும்' என்பதுதான் அவர்கள் கோரிக்கை. ஆனால் இந்திய அரசியல் நிலைப்பாடுகளை அமெரிக்கப் பின்னணிக்கு இடமாற்றம் செய்து இதற்கு அரசியல் சாயத்தை ஏற்றியது இங்குள்ள மைக்கேல் விட்ஸல் தலைமை இந்து எதிர்ப்புக் குழுக்கள்தாம்.
தீண்டாமை போன்ற பிறப்பின் அடிப்படையிலான அனைத்துக் கொடுமைகளும் முழுமையாகக் களையப்பட வேண்டும் என்பதில் மானுடத்தை மதிக்கும் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அந்தப் போராட்டத்தின் களன் கலி ·போர்னியா பாடநூல் அல்ல. பாடநூல்களுக்கான வரையறையை மாற்றியமைத்து அவற்றை அனைத்து மதங்களுக்கும் ஒருபோலச் செயல்படுத்த வேண்டும் என்று நீங்கள் குறிப்பிட்ட ஓர் அமைப்பினராவது--மைக்கேல் விட்ஸல், ஸ்டீவ் ·பார்மர் உட்பட--தீவிரமாகப் போராடுகிறார்கள் என்று சொல்ல முடியுமா? இத்தனை வருடங்கள் இந்து மதம் கேவலமாகக் காட்டப்பட்ட போது இடிபோல மௌனம் காத்த இந்த அமைப்புகள், மேற்கூறிய இருவர் உட்பட, இத்தகைய பிழையான பாரபட்ச அணுகுமுறை நீக்கப்பட வேண்டும் என்ற குரல் எழுகையில் மட்டும் பொங்கி எழுந்து அதனை எதிர்த்துப் போராடுவதைப் பார்க்கையில், இவர்கள் யாருக்காக உண்மையில் குரல் கொடுக்கிறார்கள் என்ற கேள்விதான் எழுகிறது.
ஆசிரியர் அசோகன் எழுதியது மிகச் சரிதான்--நம் குழந்தைகள் வளர்ந்தபின் எத்தகைய அமெரிக்கா/இந்தியாவில் வாழ நேரிடும் என யோசிக்க வேண்டும். இரண்டாம் தரக் குடிகளாகவா அல்லது ஏனைய குடிமக்கள் போலத் தமது வரலாறு குறித்த பெருமிதம் அளிக்கும் ஒரு கல்விச் சூழலிலா எனச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
வே. சுந்தரேஷ் ·ப்ரிமான்ட், கலி. |