குமாரி நந்திதா ஸ்ரீராம் பரதநாட்டியம்
மே 1, 2010 அன்று கான்கார்ட் சிவமுருகன் ஆலயத்திற்கு நிதி திரட்டுமுகமாக டிஆன்ஸா கல்லூரி காண் கலைகள் மையத்தில் குமாரி. நந்திதா ஸ்ரீராம் வழங்கிய நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. தோடய மங்களத்துக்குப் பின் புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி துவங்கியது. எஸ்.கே. ராஜரத்னம் இயற்றிய கணபதி கவுத்துவத்தில் நந்திதா இயற்றிய 'ஏக தந்தம்' ஸ்லோகத்துக்கு விநாயகனையும், வேல்முருகனையும் கண்முன் நிறுத்தியது கச்சிதம். தஞ்சை சங்கர ஐயர் இயற்றிய ரஞ்சனமாலாவின் ரஞ்சனி, ஸ்ரீரஞ்சனி, மேகரஞ்சனி, ஜனரஞ்சனி ஆகிய ராகங்களில் அமைந்த பாடலில் ஜனரஞ்சனிக்கு நந்திதா ஆடியது அருமை.

ஸ்வாதித் திருநாளின் 'பாவயாமி ரகுநாமம்' (ராகமாலிகை) பாடலில் ஜதி, ஸ்வரம், ஸஞ்சாரம் யாவும் நன்கு வெளிப்பட்டன. ராமன் வில் ஒடித்தது, அகல்யை சாப விமோசனம், ஓடத்தில் துறை கடந்தது, பரதனுக்குப் பாதுகை அளித்தது, மாருதியை சூடாமணி அளிக்க அனுப்புவது, சேது கட்டிய பின் ராவண வதம், பட்டாபிஷேகம் என முழு ராமாயணத்தையும் அவையினர் கண்முன் கொண்டுவந்து காட்டியது அற்புதம். தொடர்ந்து கோபாலகிருஷ்ண பாரதியின் 'நந்தி வழி மறைத்த” பாடலை நந்திதா அனுபவித்து ஆடியது உள்ளத்தை உருக்குவதாக இருந்தது. அடுத்து வந்த 'விஷமக்காரக் கண்ணன்' என்னும் ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் பாடலில் கண்ணனின் துடுக்குத்தனம் யாவற்றையும் தத்ரூபமாகக் கண்முன் காட்டியது அபாரம். பேகடா ராகத்தில் சுப்பராம ஐயர் இயற்றிய 'யாருக்கும் எனக்கு பயமில்லை' பாடலில் பெண்மணியின் மிடுக்கை வெளிப்படுத்தியது சிறப்பு.

நிறைவாக லால்குடி ஜயராமனின் மாண்டு ராக தில்லானாவுக்கு துரிதகதியில் ஆடி, காஞ்சி காமாட்சியே காத்தருளும் என முடித்தது சிறப்பு. திருப்புகழோடு முடித்தது பொருத்தம். திருமதி ஆஷா ரமேஷ் (பாடல்), குரு வித்யா சுப்ரமணியம் (நட்டுவாங்கம்), சாந்தி நாராயணன் (வயலின்), நாராயணன் (மிருதங்கம்) யாவும் நிகழ்ச்சிக்கு சிறப்புச் சேர்த்தன.

குமாரி நந்திதா லாஸ்யா டான்ஸ் கம்பெனி நிறுவனர் திருமதி வித்யா சுப்ரமண்யம் அவர்களின் மாணவி. தந்தை ஸ்ரீராம் லலிதகான நிலையம் இயக்குநர் திருமதி ஜயஸ்ரீ வரதராஜன் அவர்களிடம் இசை பயின்றவர். தாய் பிரேமா ஸ்ரீராம் கர்நாடக இசை, ஹிந்துதானி இசை, பரதம் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீதா துரைராஜ்,
சான்ஹோசே

© TamilOnline.com