GATS சித்திரைத் திருவிழா
மே 9, 2010 அன்று அட்லாண்டா மாநகர தமிழ்ச் சங்கத்தின் சித்திரைத் திருவிழா ராஸ்வெல் கலாசார மற்றும் கலை மையத்தில் 'சகானா ட்ரீம்ஸ்' குழுவினரின் இன்னிசையோடு நடத்தப்பட்டது. அன்னையர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீநாத்தின் 'அம்மா என்றழைக்காத' என்ற பாட்டோடு நிகழ்ச்சி தொடங்கியது. சூர்யா மற்றும் தேவாவின் நட்பைப் பிரதிபலிக்கும் 'காட்டுக் குயிலு' பாடலை ஸ்ரீநாத் மற்றும் மஞ்சுநாத், 'ரோஜாப் பூ' போல ஆடிப்பாடிய ஜெயஸ்ரீ, 'காற்றில் எந்தன் கீதம்' பாடி ஜானகியை நினைவூட்டிய அர்ச்சனா, 'மலைக்கோயில் வாசலில்' பாடலைப் பாடிய சிவா மற்றும் ஐஸ்வர்யா, 'உனக்கென நான்' பாடிய திவ்யா, 'முதல் நாள் இன்று' பாடிய ஸ்ரீநாத் மற்றும் ஷெரின், 'திம்சு கட்ட' பாடலைப் பாடிய மஞ்சுநாத் மற்றும் ராதிகா என எல்லோரும் அசத்தினார்கள். ஜிஜோ தாமஸின் கீபோர்ட் மற்றும் ஆதியின் கிடார் இசையில் பாடகர்கள் எல்லோரும் பாடிய 'Unplugged' பாடல்கள் ரசிகர்கள் அனைவரையும் இருக்கையில் கட்டிப்போட்டது.

இரண்டாம் பாதியில் பன்னிரண்டு வயதேயான ஜோஷ் மார்டின் தபலா வாசிக்க ஸ்ரீநாத் 'கலைவாணியே' பாடியது அருமை. 'மாசிலா உண்மைக்காதலே', 'வாராயோ வாராயோ', 'சொர்க்கமே என்றாலும்', 'மானூத்து மந்தையிலே', 'கரிகாலன் கால போல', 'ராசாத்தி என் உசுரு' என அனைத்துப் பாடல்களும் அருமை.

கீ போர்ட் வாசித்த ஜிஜோ தாமஸ், ஆஷா, திவ்யா, கிடார் வாசித்த ஆதி மற்றும் ஜார்ஜ், ட்ரம்ஸ் வாசித்த அஷ்வின், ரிதம் பேட், டோலக் மற்றும் டபுள் பாங்கோஸ் வாசித்த சிவகுமார் அர்ஜுனன், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பேரா. வ. கணேசன், ஐஸ்வர்யா மற்றும் ராதிகா என்று எல்லோரது திறமையும் நிகழ்ச்சியில் பிரதிபலித்தது.

அன்று அட்லாண்டா தமிழ்ச் சங்க உறுப்பினர் பொதுக்குழு கூட்டமும் நடந்தது. செயலாளர் அனுராகா ரகுராஜ் வரவேற்புரை ஆற்ற, தலைவி இந்திரா பாலகிருஷ்ணன் சங்கத்தின் சாதனைகளைப் பட்டியலிட, 2009 ஆம் ஆண்டிற்கான நிதி அறிக்கையை சென்ற ஆண்டிற்கான பொருளாளர் சிவஷண்முகம் வாசிக்க, ஃபெட்னா பற்றிய தகவல்களுடன் முன்னாள் தலைவர் சாந்த் குப்புசாமி உரையாற்றினார். பொருளாளர் தங்கமணியின் நன்றியுரைடன் விழா இனிதே முடிந்தது.

க்ரிஷ்,
அட்லாண்டா, ஜார்ஜியா.

© TamilOnline.com