CTS லக்ஷ்மண் ஸ்ருதி இசை விழா
மே 22, 2010 அன்று தமிழ்நாடு அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் பொருட்டு சிகாகோ தமிழ்ச் சங்கம் லக்ஷ்மண் ஸ்ருதி இசை நிகழ்ச்சியை சிகாகோ வாழ் தமிழர்களுக்காக லெமாண்ட் இந்துக் கோவில் அரங்கில் ஏற்பாடு செய்திருந்தது. முதன்முறையாக நிகழ்ச்சிக்கு முன்பே சங்க நிர்வாகிகள் இலக்கான 500க்கும் மேற்பட்ட டிக்கெட்டுக்களை விற்று விடவே காட்சி அரங்கம் நிரம்பியதாக இருந்தது.

திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் கிருஷ், டி.எம்.எஸ். செல்வகுமார், பாடகிகள் மஹதி, மாலதி லக்ஷ்மண் ஆகியோர் லக்ஷ்மண் ஸ்ருதியின் திறமையான இசைக்கலைஞர்களுடன் இணைந்து மிகப்பெரிய இசை விருந்தை அளித்தனர். புதிய பாடல்கள் முதல் பழைய பாடல்கள் வரை மக்கள் விருப்பத்திற்கிணங்கச் சளைக்காமல் பாடியதோடல்லாமல், பாடகர்கள் எல்லோரும் மக்களோடு பேசி பாடல்களின் பின்னணியையும் எடுத்துச் சொன்னது பார்வையாளர்களைக் கவர்ந்தது. பலகுரல் நிகழ்ச்சி, டிரம்ஸ் வாத்திய நிகழ்ச்சி எல்லாம் கூடுதல் சிறப்பம்சம்ங்கள். சிகாகோ தமிழ் தம்பதிகளான டாக்டர் சுப்ரமணியன், டாக்டர் சுசிலா சுப்ரமணியன் தம்பதியினர் சில பாடல்களுக்கு நடனமாடினார்கள்.

சங்கத் தலைவர் திரு. டோனி சூசை வரவேற்புரையும், திருமதி ஸ்ரீ குருசாமி TNF முகவுரையும், ஆனந்தன் லக்ஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவின் அறிமுகவுரையும், சங்கச் செயலாளர் சோமு நன்றி நவிலலும் அளித்தனர். சிறந்த பொழுதுபோக்கு அம்சத்தோடு, தமிழ்நாடு அறக்கட்டளைக்குச் சமூகசேவை நிதி உதவியும் அளித்தது மகிழ்ச்சி தருவதாக அமைந்தது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com