ஜூன் 2010: வாசகர் கடிதம்
தென்றல் இல்லாவிட்டால் எழுத்தாளர் பாமாவைப் பற்றி நான் அறிந்திருக்க மாட்டேன். அவரது வாழ்க்கைக் குறிப்பையும் சிறுகதையையும் படித்த பின்னர், இணையத்தில் அவரைக் குறித்த ஏராளமான செய்திகளை அறிய வந்தேன். பாமா மிகுந்த துணிச்சலுள்ளவர்.

தூய தமிழில் எழுதத் தென்றல் முயல்வதைக் காண்கிறேன். தென்றல் வாசகர்கள் ஆங்கிலமும் அறிந்தவர்கள்தாம் என்று நினைக்கிறேன். Sickle Cell Anemia என்று ஆங்கிலத்திலேயே எழுதுவது போல கொஞ்சம் மணிப்பிரவாளமான நடையை நான் பெரிதும் விரும்புகிறவன். இது விவாதத்துக்குரிய விஷயம் என்பதையும் நான் அறிவேன். (weekend போன்ற சொற்களைத் தவிர்த்து பிரெஞ்சுக்காரர்கள் தமது மொழியில் புதிய சொற்களை ஆக்கியது என் நினைவுக்கு வருகிறது.)

வாழ்த்துக்கள்.

சேகர்,
இண்டியானா.
(ஆங்கிலக் கடிதத்தின் தமிழாக்கம்)

*****


தென்றல் இதழ்களைப் படித்தேன். முன்னணி செய்தித்தாளான 'தினமணி'யின் திண்டுக்கல் நிருபராக நான் பணியாற்றியுள்ளேன். தென்றல் மிகச் சிறப்பாக உள்ளது. அதனைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது, சிறுகதைகளில் ஏதோ ஒரு நற்கருத்து உள்ளது, கட்டுரைகள் இந்தியக் கலை கலாசாரத்தைப் பேசுகின்றன; திறமைவாய்ந்த இளைஞர்களுக்குத் தென்றல் ஊக்கமளிக்கிறது. தமிழ் நாட்டில் இப்படி ஒரு நல்ல பத்திரிகை இல்லை என்பதை நினைத்துப் பார்க்கிறேன். பெரும்பாலான வார, மாத இதழ்கள் சமுதாயத்துக்குத் தேவையில்லாதவற்றைக் கொண்டுவரும் குப்பைத் தொட்டிகளாக உள்ளன.

ஒரு நல்ல இதழைக் கொண்டு வரும் உங்களைப் பாராட்டுகிறேன்.

ஜெயச்சந்திரன் எஸ்
(இணைய இதழில் இட்ட ஆங்கிலப் பின்னூட்டத்தின் தமிழ் வடிவம்)

*****


'தென்றல்' மே இதழில் பா.சு. ரமணன் எழுதி வெளியான அசீராவைப் பற்றிய கட்டுரை என் கவனத்தைக் கவர்ந்தது. கிட்டத்தட்ட 62 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் 'கிராம நண்பன்' என்ற பெயரில் ஒரு சங்கம் நடத்திக் கொண்டிருந்தோம். அதன் முதலாண்டு விழாவை அசீரா தலைமை தாங்கி நடத்தித் தந்தார். "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி” என்ற பாரதியாரின் கவிதைக்குச் சொல் வளத்துடனும், குரல் நயத்துடனும் விரிவாக அவர் விளக்கவுரை ஆற்றியபோது அங்கு குழுமியிருந்த மக்களின் கண்களில் கண்ணீர் மல்கி நின்றது. பாரதியாரின் கவிதைகளுக்கு 'அசீரா'வைப் போல் வேறு யாரால் அப்படி விளக்கம் தர முடியும்!

எங்கள் கல்லிடைக்குறிச்சியில் ராமலிங்க பாகவதர் ஓர் இசை விற்பன்னர். முத்துஸ்வாமி தீக்ஷிதர் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்தவர். ஆண்டுதோறும் தீக்ஷிதர் தினத்தை பெரிய வைபவமாகக் கொண்டாடுவார். அசீரா எங்கிருந்தாலும் இந்த விழாவில் கலந்து கொள்ள வந்துவிடுவார். ஆடல், பாடல் போன்ற மற்ற நிகழ்ச்சிகள் இருந்தாலும், அசீராவின் சொற்பொழிவைக் கேட்க மக்கள் பக்கத்துக் கிராமங்களிலிருந்து திரண்டு வந்துவிடுவார்கள். முத்துஸ்வாமி தீக்ஷிதர், அவரது கீர்த்தனங்கள், ராகங்களைக் கையாண்டிருக்கும் முறை, அதில் புதைந்திருக்கும் ஜோதிடம் முதலான விஷயங்களை எடுத்துக்காட்டி அசீரா பேசுவார். ஆடம்பரமில்லாமல் தமிழுக்குத் தொண்டாற்றிய வெகு சிலரில் பேராசிரியர் அசீராவும் ஒருவர். அவர் நினைவாகக் கட்டுரையைப் பிரசுரித்த 'தென்றல்' இதழுக்கு என் நன்றி!

டாக்டர் விஷ் ஐயா,
எல்டொராடொ, கலிஃபோர்னியா

*****


கடந்த ஏழாண்டுகளாகத் தென்றலை (சு)வாசித்து வருகிறேன். மற்ற தமிழ்க் குடும்பத்தினர்களோடு பகிர்ந்தும் கொள்கிறேன். மிக அருமையான கதைகள், கட்டுரைகள் - தேடித் தேடிக் கண்டுபிடித்துத் தரமாக வெளியிடுகிறீர்கள். இலக்கியவாதிகள், பேராசிரியர்கள், கதாசிரியர்கள், பாரம்பரிய கர்நாடக இசை வல்லுனர்கள் பற்றிய உரைகள் மிகவும் பாராட்டத்தக்கன.

மருத்துவ மாணவர் இந்த ஊரில் பிறந்து வளர்ந்த ஹரி பிரபாகர் செய்யும் Sickle Cell Anemia பற்றிய விழிப்புணர்வும் சேவையும் மகத்தானது. தேவையானால் தன்னார்வத் தொண்டராக என்னால் ஆன எந்த மருத்துவ உதவியும் செய்யத் தயாராக இருக்கிறேன். தமிழ்நாட்டு வார, மாத இதழ்களில் சினிமாக்காரர்களின் அட்டைப்படத்தையே பார்த்துச் சலித்த நமக்கு, சாதனை செய்கின்ற, உண்மையான மதிப்பிற்கு உரியவர்களின் படங்களை மட்டுமே வெளியிடும் தென்றலுக்கு நன்றி, நன்றி.

டாக்டர் அனு மணி M.D.,
இல்லினாய்ஸ்

*****

© TamilOnline.com