கலிஃபோர்னியாவின் சான் ரமோன் பகுதியில் உள்ள தி கேல் ரான்ச் மிடில் ஸ்கூல் (The Gale Ranch Middle School) சயன்ஸ் பௌல் அணியின் சரண் பிரேம்பாபு, அகஸ்டின் செம்பரத்தி, ரிஷி கிருஷ்ணன், ஆயுஷ் ராத், ஜேஸன் கிம் ஆகியோர் நேஷனல் சயன்ஸ் பௌல் (National Science Bowl) போட்டியில் தேசீய அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர். இவர்களைத் திருமதி மிஷல் ஒபாமாவும் ஸ்டீவன் சூவும் பாராட்டியுள்ளனர். இந்த ஆண்டின் இறுதிப் போட்டி ஏப்ரல் மாத இறுதியில் பெதஸ்டாவில் நடைபெற்றது.
கணிதம், அறிவியல் ஆகியவற்றில் விரைந்து விடையளிக்கும் இந்தப் போட்டி இரண்டு அணிகள் ஒன்றையொன்று எதிர்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்க அரசின் ஆற்றல் துறை 1991ல் இருந்து நடத்தி வருகிறது. கேல் ரான்ச் பள்ளியின் அணி 2009ல்தான் முதன்முதலாகப் பங்கு பெற்றது என்றாலும் அது போட்டியைப் பற்றி அறிந்துகொள்ளும் முயற்சியாகத்தான் அமைந்தது.
"இறுதிப் போட்டியில் எங்கள் இடத்தில் போய் உட்கார்ந்தோம். திருமதி ஒபாமா மேடைக்கு வந்தார். அவர் அருகே நான் இருக்கிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. எங்களை நோக்கி நடந்து வந்தார், அன்பாகப் புன்னகைத்தார், வெற்றிபெற வாழ்த்தினார். அவருடன் கை குலுக்கியபோது ஏற்பட்ட உணர்வுகளை விவரிப்பது மிகக் கடினம்" என்கிறார் சரண் பிரேம்பாபு. |