வணக்கம்
இந்த இதழுடன் 'தென்றல்' தொடங்கி ஆறு ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. நமது சமுதாயத்தை ஒன்றிணைப்பது, அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது, வெளிமண்ணில் நமக்கு ஓர் ஆதரவு மேடையை, தரமானதோர் பத்திரிகை வாயிலாக அமைப்பது ஆகியவை நமது இயக்கு விசையாக இருந்து வந்துள்ளன. 9/11, பொருளாதாரத் தொய்வு (recession) ஆகியவற்றைக் கடந்து வந்திருக்கும் நமக்கு இன்னும் பல ஆண்டுகளைக் கடக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஒருங்கிணைத்த வலைதளத்திற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விரைவில், தென்றல் உங்களுக்கு வலையில், அதுவும் புத்தகத்தில் பார்ப்பது போலவே, கிடைக்கும்.
படைப்பாளிகள், உங்கள் அருகிலிருக்கும் கடைக்குத் தென்றலைக் கொணர உதவும் நண்பர்கள், இத்தனை ஆண்டுகளில் இதழ்களுக்குப் பொறுப்பேற்று நடத்திய ஆசிரியர்கள் - அனைவருக்கும் எனது நன்றிகள். உயர்வோ தாழ்வோ, பனியோ மழையோ வெயிலோ, இடமாற்றமோ, இழப்போ, குடும்ப விரிவோ - எல்லாவற்றையும் எதிர்கொண்டு அவர்கள் தம்மாலானதைத் தென்றலுக்குச் செய்துள்ளனர். அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் இந்த முயற்சி வெற்றிபெற்றிருக்காது.
விளம்பரம் தந்து ஆதரிக்கும் எல்லோருக்கும் எனது நன்றியைச் சொல்லியாக வேண்டும். தென்றலின் முதற் குடிமகன் என்ற முறையில், எனக்கு ஒரு பொருளோ சேவையோ தேவையென்றால் முதலில் தென்றல் விளம்பரதாரரிடம் அது கிடைக்குமா என்று பார்ப்பேன். உணவகமோ மளிகைக் கடையோ எதைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றாலும் தென்றல் உதவுமா என்று முதலில் சோதிப்பேன். வாசகர்களும் அவ்வாறு செய்து தென்றல் விளம்பரதாரரை ஆதரிக்க வேண்டுகிறேன். தென்றலின் நீண்ட பயணத்திற்கு உங்கள் இந்த ஆதரவு மிகவும் உதவும்.
இந்த இதழில் திருமதி செல்வி ஸ்டானிஸ்லாஸ் (கலிஃபோர்னியா வரித்துறையின் முதல் பெண் தலைவர்) அவர்களுடனான நேர்காணலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். தனது நம்பிக்கைகளைத் தளரவிடாமல் முயல்வதன் வெற்றியை அவரது சாதனை காட்டுகின்றது.
இந்த இதழ் உங்கள் கையில் கிடைக்கும்போது இடைத்தேர்தல் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கும். உள்ளூர், நாடு மற்றும் உலக அளவிலான பிரச்னைகளின் அடிப்படையில் சிந்தித்து, நடந்தவற்றை, மறக்காமல், கருத்தில் கொண்டு, ஒவ்வொரு தகுதியுள்ள வாக்காளரும் தமது வாக்கை நிச்சயம் அளிக்கவேண்டும்.
அண்மையில் நான் இந்தியாவுக்குச் சென்றிருந்தேன். அங்கே எல்லா மதத்தினரும் நேசத்தோடு ஒன்றிணைந்து வாழ்வது என்னைக் கவர்ந்தது. ஒருவர் மற்றவரின் விழாவை (தீபாவளி, ரம்ஜான்) மதிப்பதும், அதே வாரத்தில் கொண்டாடுவதும் பார்க்க ஓர் அற்புதமான அனுபவம். நான் அங்கே வளர்ந்த நாட்களிலிருந்தே அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கிறேன். மதங்களிடையேயான மாறுபாடுகளை இங்கே வெளிச்சமிட்டுக் காட்டுவது மனிதரைப் பிரிக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது.
'நன்றி நவிலல்' நாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் சி.கே. வெங்கட்ராமன் பதிப்பாளர் - தென்றல். நவம்பர் 2006 |