கனெக்டிகட்டில் FeTNA தமிழ் விழா-2010
தமிழ் மொழி, இனம், பண்பாடு போன்றவற்றைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில் அமெரிக்காவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னோடித் தமிழ் அமைப்பாகும் அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA). இதன் தேசீய அளவிலான 23-ஆம் ஆண்டு விழாவைக் கனெக்டிகட் (Connecticut) மாநிலத்தில் அமைந்துள்ள வாட்டர்பரி (Waterbury) நகரின் எழில் மிகுந்த அரண்மனை அரங்கில் (Palace Theater) ஜூலை 3-5, 2010 தேதிகளில் கொண்டாட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான FeTNA முடிவெடுத்துள்ளது. இந்த மூன்று நாள் பெருவிழாவுக்கு அமெரிக்கா, கனடா உட்பட உலகெங்கும் வாழும் தமிழ் அன்பர்கள் குடும்பத்தோடு வந்து கலந்து கொள்ள உள்ளனர்.

##Caption## 'செந்தமிழால் சேர்ந்திணைவோம்; செயல்பட்டே இனம் காப்போம்!' என்ற மையக்கருத்தில் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் முக்கிய நோக்கமான தமிழ் மொழி, இனம், பண்பாடு போன்றவற்றைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலும் மறக்கப்பட்ட பல தமிழ்க் கலைகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையிலும் இப்பெருவிழா அமையும். தமிழின் எதிர்காலம், உலகத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், வரும் தலைமுறைகளுக்கான வழிகாட்டுதல் போன்ற கருத்துக்களை உள்ளடக்கியதாக நிகழ்ச்சிகள் இருக்கும். அதே வேளையில் களிப்பூட்டும் இதர பல நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

புதுச்சேரி தலைக்கோல் வழங்கும் 'மதுரை வீரன்' தெருக்கூத்து, இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் சிறப்புச் சொற்பொழிவு, திரைப்பட நடிகர் விக்ரம், நடிகை திரிஷா, நகைச்சுவை நடிகர் சந்தானம் ஆகியோர் பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சி, திரைப்பட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், பின்னணிப் பாடகர்கள் கார்த்திக், சாதனா சர்கம் இணைந்து வழங்கும் இன்னிசை இரவு, கவிஞர் தாமரை தலைமையில் 'வேர்கள் தமிழில்; விழுதுகள் உலகெங்கும்' கவியரங்கம், பேராசிரியர் பர்வீன் சுல்தானா தலைமையில் 'புலம் பெயர்ந்து வாழும் தமிழ்க் குடும்பங்களில், வரும் தலைமுறைகளில்-தமிழ் வாழும்! வாழாது!' பட்டிமன்றம், மருத்துவர்கள் மற்றும் வணிகப் பெருமக்களுக்கான தனித்தனிக் கருத்தரங்குகள்; இளைஞர்களுக்கான இனிய நிகழ்ச்சிகள்; வட அமெரிக்காவின் அனைத்து மாநிலத் தமிழ்ச் சங்கங்களின் சிறப்புக் கலை நிகழ்ச்சிகள்; கண்டு மகிழ எண்ணற்ற நிகழ்ச்சிகள்; உண்டு மகிழ அறுசுவை உணவு என இன்னும் ஏராளம்!

இந்த 23ஆம் ஆண்டு விழா அமெரிக்கத் தமிழ் மக்களின் வரலாற்றிலேயே பெரியதொரு விழாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவுக்கு 2,000க்கும் அதிகமானோர் வருவார்கள் என்று கணிக்கப்படுகிறது.

மாநாட்டின் இணையதள முகவரி:

www.fetna2010.org

விழாவுக்கு இணையத்தில் பதிவு செய்யலாம். பதிவு/நன்கொடை கட்டண விவரங்களைக் காண:

registration.fetna.org

நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களையும், முன்பதிவு தொடர்பான விவரங்களையும் காண:

fetna.org

முனைவர் பழனி சுந்தரம், ஒருங்கிணைப்பாளர், தமிழ் விழா 2010 மற்றும் செயலர், FeTNA, தொலைபேசி: 203-494-6707

முனைவர் முத்துவேல் செல்லையா, தலைவர், FeTNA, தொலைபேசி: 443-538-5774

அருள் வீரப்பன்

© TamilOnline.com