குடிப்பெயர்ச்சி
புறப்பட்டு விட்டோம்
புதியதொரு வீட்டுக்கு
பல நாட்களாய்
புழங்கிப் பழகிப்போன
பழைய வீட்டிலிருந்து

பொருட்களையெல்லாம்
பெட்டிகளிலடக்கி
பக்குவமாய் படிகளிலிறக்கி
வாயிலில் காத்திருந்த
வண்டியிலேற்றிய பிறகும்

வீடெங்கும் விரவிக்கிடந்தன
பிரித்தெடுக்க முடியாதபடி

நல்லதும் கெட்டதுமாய்
நினைவுகள் மட்டும்
ஜன்னல்களிலும் சுவர்களிலும்
பல்வேறு கோணங்களிலும்
சித்திரங்களாய் சிதறியபடி


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajanஆவன்னா

© TamilOnline.com