சூசி (வேதாந்தம்) நாக்பால் சாரடோகா நகர நிர்வாகக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கர் ஆவார். இவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதைக் கண்டுபிடித்த ஏழு மாதங்களில், மே 13, 2010 வியாழனன்று காலை, மரணமடைந்தார். அவருக்கு வயது 46.
"சூசி தன்னலமற்றவர். மிகுந்த நோய்வாய்ப்பட்டிருந்த போதும் அவர் மற்றவர்களைப் பற்றியே கவலைப்பட்டார்" என்று அவரது சகோதரி ஜயஸ்ரீ உள்ளால் சான் ஹோசே மெர்க்குரி செய்தித்தாளுக்குக் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார். வெளிப்படையாகப் பேசும், சொல்லாற்றல் மிக்க நபராக சூசியைப் பார்க்கும் அவரது நண்பர்கள், அவர் மற்றவர் திறமையைக் கண்டறிந்து வெளிக்கொணர்வதிலும் சிறந்தவர் எனக் கூறுகிறார்கள்.
ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiagarajan
அமெரிக்காவிலேயே சிறுவயதிலிருந்து வளர்ந்து வந்த போதும் நேர்காணலுக்காகத் தென்றல் சூசியை அழைத்துப் பேசியபோது அவர் முழுக்கத் தமிழிலேயே பேசினார் என்று நினைவுகூருகிறார் தென்றல் பதிப்பாளர் சி.கே. வெங்கட்ராமன். கனிவும் உற்சாகமும் சூசியோடு ஒட்டிப் பிறந்த குணங்கள். தனக்கு வந்த நோயை மன உறுதியோடு எதிர்கொண்ட அவர், இறப்பதற்கு ஒரு மாதம் முன்னர் நடந்த நகர்மன்றக் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.
வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாகப் பார்த்த அவர் மரணத்தையும் அப்படியே பார்த்தார் என்பது வியப்புக்குரியது. அதனால், மே 31, 2010 அன்று மாலை 4:00 மணிக்கு வில்லா மொண்டல்வோ (15400 Montalvo Road, Saratoga, CA 95070) என்ற இடத்தில் 'A Celebration of the life of Susie Vedantham Nagpal' என்ற நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.
அவர் நினைவாக ரத்த தானம் தரும் நிகழ்வு ஒன்று ஜூன் 8, 2010 அன்று மதியம் 12:00 முதல் 6:00 மணி வரை Federated Church of Saratoga, 14370 Saratoga Avenue, Saratoga, CA 95070 என்ற முகவரியில் நடைபெறும். இதற்கு இணையத்தில் பதிவு செய்துகொள்ள: www.redcrossblood.org
சூசி நாக்பால் தென்றலுக்கு அளித்த நேர்காணல் மார்ச் 2009 இதழில் வெளியானது. அதைப் படிக்க
அவர் நகர நிர்வாகக் குழுத் தேர்தலுக்கு நின்றபோது தென்றல் அவரைப்பற்றிய விரிவான வாழ்க்கைக் குறிப்பை வெளியிட்டது. அதைப் படிக்க
அவரை இழந்து வாடும் பெற்றோர், கணவர் அமித், மகன் இஷான், மகள் ஷ்ரியா மற்றும் நண்பர்களுக்குத் தென்றல் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
மதுரபாரதி |