ஒரு காட்டில் எலி ஒன்று வசித்து வந்தது. அருகில் உள்ள வயல்களுக்குச் சென்று அங்கு நெல் போன்ற தானியங்களை உண்டு வாழ்க்கை நடத்தியது. உணவுக்குப் பஞ்சமில்லாததால் அது உடல் கொழுத்திருந்தது.
ஒருநாள் அந்த எலியைக் காண்பதற்காக அருகில் உள்ள நகரத்தில் வசிக்கும் நாட்டு எலி ஒன்று வந்தது. அதனை வரவேற்ற காட்டு எலி, அதற்குத் தான் சேமித்து வைத்திருந்த தானியங்களையும், காய்கறிகளையும் விருந்தாக அளித்தது. நாட்டு எலிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அதுவரை அது இந்த மாதிரி தானியங்களையோ காய்கறி, பழங்களையோ உண்டதில்லை. எனவே அது காட்டு எலியின் வாழ்க்கையை நினைத்துப் பொறாமைப்பட்டது.
ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiagarajan
மறுநாள் இரவு காட்டு எலி, நாட்டு எலியை அழைத்துக் கொண்டு உணவு வேட்டைக்குப் புறப்பட்டது. வயலில் எலிகள் இங்கும் அங்கும் ஓடி உணவுப் பயிர்களை நாசப்படுத்திக் கொண்டிருந்தன. அங்கே வந்த சில பாம்புகள் எலிகளைப் பிடித்து விழுங்கின. விவசாயிகள் உணவுப் பண்டங்களில் கலந்து வைத்திருந்த விஷத்தை விழுங்கிச் சில எலிகள் செத்து விழுந்தன. அதைக் கண்ட நாட்டு எலிக்குக் கிலியாகி விட்டது. "அடேயப்பா, ஒரு வேளை உணவுக்கு இவ்வளவு போராட்டமா? உயிருக்கு உத்தரவாதமில்லாத இந்த வாழ்க்கைக்கு நமது நகர வாழ்க்கை எவ்வளவோ சிறந்ததே!" என்று நினைத்தது.
மறுநாள் காட்டு எலியைத் தன்னோடு நகருக்கு வருமாறு அழைத்தது நாட்டு எலி. நகரத்துக்கு வந்து சேர்ந்த காட்டு எலிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அது வீட்டுக்குள் இங்கும் அங்கும் ஓடியது. பரணில் ஏறிக் குதித்தது. புத்தகங்களைக் கடித்தது. துணிகளைக் குதறியது. 'கீச் கீச்' என்று கத்தியது. "இப்படிக் கத்தினால் அவ்வளவுதான். பூனை வந்து லபக்கென்று விழுங்கிவிடும்" என்று சொன்னது நாட்டு எலி.
இரவு வந்தது. உணவு வாசனை மூக்கைத் துளைத்தது. ஆனாலும் பசித்த நேரத்திற்கு காட்டு எலிக்கு உணவு கிடைக்கவில்லை. "எப்போது சாப்பாடு கிடைக்கும்?" என்று கேட்டது அது, நாட்டு எலியிடம். எல்லாரும் சாப்பிட்டு முடித்துத் தூங்கச் சென்ற பின்னர்தான் உண்ண முடியும் என்றது நாட்டு எலி. வேறு வழியில்லாமல் பசியோடு காத்திருந்தது நாட்டு எலி.
எல்லோரும் உறங்கச் சென்ற பின்னர் மெல்லச் சமையலறையை நெருங்கியது நாட்டு எலி. காட்டு எலியும் பசியோடு அதனைப் பின் தொடர்ந்தது. மேடையில் ஏறி உணவுப் பாத்திரத்தை நெருங்கும்போது 'மியாவ்' என்ற குரல் கேட்டது. அவ்வளவுதான். தப்பித்தோம், பிழைத்தோம் என நாட்டு எலி பரணுக்குள் ஓடி ஒளிந்தது. காட்டு எலியும் முட்டி மோதிக் கொண்டு அங்கங்கே காயங்களுடன் அதனைப் பின்தொடர்ந்தது. ஆனாலும் பருமனான உடலைக் கொண்டு அதனால் வேகமாக ஓட முடியவில்லை. அதற்குள் அங்கே வந்த பூனை காட்டு எலியைப் பார்த்து விட்டுப் பாய்ந்தது. எப்படியோ அதனிடமிருந்து தப்பிப் பிழைத்து வெளியே ஓடியது காட்டு எலி.
"அப்பப்பா.... போதும் இந்த நகர வாழ்க்கை. காட்டில் அங்கே தினம் தினம் செத்துப் பிழைக்கிறோமென்றால் இங்கே ஒவ்வொரு நிமிடமும் அல்லவா செத்துப் பிழைக்க வேண்டியிருக்கிறது. இதற்கு அந்த காட்டு வாழ்க்கையே தேவலாம் போலிருக்கிறதே" என நினைத்த காட்டு எலி, நாட்டு எலியிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் காட்டுக்கு ஓடிப்போனது.
குழந்தைகளே, இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது இதுதானா?
சுப்புத்தாத்தா |