இரத்தக் கசிவு - உடனடித் தீர்வு
ஐம்பது வயதான கண்ணனுக்கு திடுமென்று இரத்தம் கழிவதைக் கண்டு அச்சம் ஏற்பட்டது. வயிற்று உபாதை என்று நினைத்துக் கழிப்பறைக்குச் சென்றவன் மலத்துடன் கலந்து இரத்தம் போனதில் சற்று நடுங்கிப் போனான். ஆனால் மற்றபடி வேறெந்த உபாதையும் இல்லாதது ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் மருத்துவரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டான். அப்போது நடந்த உரையாடல் கீழ் வருமாறு:

மருத்துவர்: வயிற்றுப் போக்கு இருக்கா?
கண்ணன்: இல்லை. சாதரணமாகத்தான் இருக்கு.
மருத்துவர்: வயிற்று வலி, அல்லது வாந்தி இருக்கிறதா? சாப்பிட முடியுதா?
கண்ணன்: அதெல்லாம் இல்லை. சாப்பிட முடியுது.
மருத்துவர்: காய்ச்சல் அல்லது அஜீரணம் இருக்கா?
கண்ணன்: இல்லை. மற்றபடிச் சரியாக இருக்கிறேன்.
மருத்துவர்: மலச்சிக்கல் உள்ளதா? முன்பு எப்போதும் இதுபோல் ஏற்பட்டதுண்டா?
கண்ணன்: இல்லை.
மருத்துவர்: குடும்பத்தில் யாருக்கேனும் பெருங்குடல் புற்றுநோய் உண்டா?
கண்ணன்: இல்லை


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajanஎல்லாக் கேள்விகளுக்கும் இல்லை என்று பதில் அளித்த பின்னரும் மருத்துவர் கண்ணனை அவசரச் சிகிச்சை பிரிவுக்குப் போகச் சொன்னார். அங்கே ஆசனவாய் பரிசோதனை செய்யப்பட்டது. அதற்குப் பின்னர் ரத்தப் பரிசோதனையில் சிவப்பணுவின் (hemoglobin) அளவு கணிக்கப்பட்டது. எட்டு மணி நேரத்துக்கு பின்னர் மீண்டும் இரத்தப் பரிசோதனை. கண்ணனின் சிவப்பணு அளவு குறையவில்லை என்று நிர்ணயம் செய்த பின்னர் வீட்டுக்கு அனுப்பினர். மூன்று நாட்களுக்குப் பின்னர் குடல் நிபுணர் மூலம் பெருங்குடல் நோக்கி (Colonoscopy) பரிசோதனை செய்து கொள்ளுமாறு ஆலோசனையுடன் கண்ணன் வீடு திரும்பினான்.

கொலனோஸ்கோபி பரிசோதனையின் அவசியம் பற்றியும், குடலில் இரத்தம் கசிவதற்கான காரணங்கள் பற்றியும் இங்கு அறிவோம்.

மலத்தில் இரத்தக் கசிவு ஏற்படுவதற்கான காரணங்கள்
  • மலச்சிக்கல்
  • ஆசனவாயில் மூலநோய் (Hemarroids)
  • பெருங்குடலில் சின்னப் பை போல விரிவடைந்து, அதில் அடைப்பு அல்லது நுண்ணுயிர்த் தொற்று (Diverticulitis).
  • Salmonella போன்ற நுண்ணுயிர் கிருமிகளினால் ஏற்படும் வாந்தி பேதி.
  • பெருங்குடலில் புண் (ulcer).
  • பெருங்குடலில் புற்றுநோய் (Polyp).


மலத்தில் இரத்தக்கசிவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடவும். காரணம் பலவாக இருக்கலாம். உடனடி மருத்துவத்தால் நோய் முற்றுவதைத் தவிர்க்கலாம். ரத்த ஓட்டம் சீராக இருக்க Aspirin எடுத்துக் கொள்பவர்கள் இரத்தக் கசிவு ஏற்பட்டால் அதை உடனே நிறுத்த வேண்டும். மேலும் Coumadin எடுத்துக் கொள்பவர்கள் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு செல்ல வேண்டும். அதைத் தவிர வலி நிவாரணிகளான Motrin, Advil போன்றவையும் ரத்தக் கசிவை அதிகமாக்கலாம்.

பெரும்பாலும் இதர அறிகுறிகள் மூலம் நோய் கண்டுபிடிக்கப் படலாம். உதாரணத்திற்கு வாந்தியுடன் பேதி அல்லது காய்ச்சல் இருந்தால் Salmonella நுண்ணுயிர்க் கிருமியினால் இருக்கலாம். அதற்கு மருந்துகள் நிவாரணம் தரும். மலச்சிக்கல் இருக்குமானால் அதற்கு உணவில் நார்ப்பொருளை (fiber) அதிகரிப்பதுடன் தண்ணீர் நிறையக் குடிப்பதின் மூலம் தீர்வு காணலாம். Hemarroids அல்லது மலச்சிக்கல் காரணமாக ஏற்படும் ரத்தக் கசிவு பெரும்பாலும் வலியுடன் இருக்கும். பெருங்குடலில் புண் அல்லது புற்றுநோய் இருந்தால் அதைப் பெருங்குடன் நோக்கி மூலம் கண்டு பிடிக்கலாம். பெருங்குடலில் புண் இருப்பவர்களுக்கு வயிற்று வலியும் இருக்கலாம். இவர்களுக்கு Pepcid அல்லது Prilosec என்ற மருந்து தேவைப்படலாம்.

பெருங்குடல்நோக்கி (Colonoscopy)
##Caption## இந்தப் பரிசோதனையை ஐம்பது வயதானவர்கள் அனைவரும் ஒரு முறையாவது செய்துகொள்ள வேண்டும். பரிசோதனையின் முடிவில் மருத்துவர் 3, 5 அல்லது 10 வருடங்களுக்கு ஒருமுறை செய்யுமாறு ஆலோசனை சொல்வார். இதைக் குடல் நிபுணர்கள் மட்டுமே செய்வர். உங்களின் முதன்மை மருத்துவர் குடல் நிபுணர்களுக்கு ஆலோசனைக்கு அனுப்பி வைப்பது ஐம்பதாவது வயதுக்கான பரிசு என்று சொல்லலாம். குடும்பத்தில் புற்றுநோய் இருக்குமானால் இந்தப் பரிசோதனையைச் சற்று முன்னதாகவே செய்ய வேண்டி வரலாம். குடும்பத்தில் பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட்டவர்களின் வயதுக்குப் பத்து வயதுக்கு குறைவாக இந்த பரிசோதனை செய்வதின் மூலம் புற்று நோய் இருந்தால் நோய் முற்றுவதற்கு முன்னரே கண்டுபிடிக்க வசதியாகும்.

பரிசோதனை முறை
இந்த பரிசோதனை செய்வதற்கு முன்னர் குடலைச் சுத்தப்படுத்த மருந்து கலந்த திரவம் கொடுக்கப்படும். பரிசோதனைக்கு முன்னிரவு திரவ உணவு உட்கொள்ளுமாறு மருத்துவர் சொல்லக்கூடும். பரிசோதனை தினத்தன்று காலையில் வெறும் வயிற்றுடன் மருத்துவமனை செல்ல வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதற்கான மருந்துகளைத் தவிர்க்க வேண்டி வரலாம். ஆனால் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து அல்லது தைராய்டுக்கான மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம். எந்தெந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம் எதைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

குடும்பத்தில் இருந்து ஒரு நபரோ அல்லது நண்பரோ உடன் செல்ல வேண்டும். இந்தப் பரிசோதனைக்கு முன் மயக்க மருந்து தரப்படுவதால் அன்று வாகனம் ஓட்ட இயலாது. மருத்துவர்கள் பரிசோதனைக்கு முன்னரே பெருங்குடலில் ஏதேனும் புண் அல்லது Polyp இருந்தால் அதிலிருந்து தசையை எடுத்துப் பரிசோதிக்க அனுமதி பெறுவர். கூடுமானவரை இந்தப் பரிசோதனையின் முடிவில் ரத்தக் கசிவின் காரணம் கண்டறியப்படும். பல வேளைகளில் தீர்வும் கிடைக்கும். ரத்தம் கசியும் இடத்தில் மின்சாரம் அல்லது சூடு வைத்தியம் மூலம் ரத்தக் கசிவை நிறுத்திவிட முடியும். பெரும்பாலும் மருத்துவமனையில் இரவு தங்க வேண்டி வராது. ஆனால் ஒரு சிலருக்கு அதிக ரத்தக் கசிவு ஏற்பட்டால் மருத்துவமனையில் தங்க நேரிடலாம். பலருக்கு வெளி மருத்துவப் பரிசோதனையாகச் செய்யப்படும் இது, தீவிரமாக ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளுக்கும் செய்யப்படலாம். இந்தப் பரிசோதனையில் எடுக்கப்படும் தசைப் பரிசோதனை முடிவுகள் வரத் தாமதமாகலாம். இந்தப் பரிசோதனை முடிந்து மயக்கம் தெளிந்த பின்னர், ஆகாரம் கொடுத்து வாந்தி வராமல் இருந்தால் அன்றே வீட்டுக்கு அனுப்பிவிடுவர்.

எந்த ஒரு பிரச்சனையும் இல்லாதபோதும் ஐம்பது வயதிற்கான பிறந்த நாள் பரிசாக இந்தப் பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும். புற்றுநோய் தவிர்ப்பு முறைகளில் பலத்த ஆதாரங்களுடன் திகழ்வது இந்த பரிசோதனை. அதனால் அச்சம், வெட்கம் என்று ஏதேதோ காரணம் சொல்லாமல் இந்தப் பரிசோதனை செய்து கொள்வதின் மூலம் பெருங்குடல் புற்றுநோயைத் தவிர்ப்போம்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com