தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் புதுமைப்பித்தன் தொடங்கி க.நா.சு., நகுலன், தமிழவன் என்று பலர் பல கால கட்டங்களில் பரிசோதனை முயற்சிகளைச் செய்து பார்த்து வெற்றி கண்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாகத் தமக்கெனத் தனி ஆளுமையோடு காத்திரமான படைப்புகளைத் தருபவர் எம்.ஜி. சுரேஷ்.
1953ம் ஆண்டு மதுரையில் எம்.ஜி. சுரேஷ் பிறந்தார். ஆரம்பத்தில் மரபுக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவர் பின்னர் புதுக்கவிதையின்பால் ஈர்க்கப்பட்டார். அடுத்து சிறுகதைகளின் மீது கவனம் சென்றது. முதல் சிறுகதை கார்க்கி இதழில் வெளியானது. தொடர்ந்து சிறுகதை, கட்டுரை, நாவல், விமர்சனம் என்று பல படைப்புத் தளங்களிலும் தீவிரமாக இயங்க ஆரம்பித்தார். உலக இலக்கியங்களின் மீதும், இலக்கியக் கோட்பாடுகளின் மீதும் அதிக கவனம் செலுத்தி, அவைகுறித்த முக்கியமான பல கட்டுரைகளை இலக்கிய இதழ்களில் எழுதத் தொடங்கினார். ரியலிஸம், சர்ரியலிஸம், ஸ்ட்ரக்சுரலிஸம், நேச்சுரலிஸம் என்ற பல்வேறு வகை இலக்கியக் கோட்பாடுகளில் போஸ்ட் மார்டனிஸம் எனப்படும் பின் நவீனத்துவக் கோட்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனைப் பரவலாக வாசக உலகுக்கு அறியத் தந்தவர் சுரேஷ்.
ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiagarajan
1981ல் 'இரண்டாவது உலகைத் தேடி' என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியானது. 1984ல் 'தாஜ்மஹாலுக்குள் சில எலும்புக் கூடுகள்' நாவலும், 1985ல் 'கான்கிரீட் வனம்' நாவலும் வெளியாகிப் பிரபலமாயின. 'கான்க்ரீட்' வனம் நூலின் முன்னுரையில் க.நா.சு., "சுரேஷின் நடையும், பாஷையும் அவருக்கே சொந்தமானவையாக இருக்கின்றன. அதுகூட பாரதியாரைப் போலத் தெளிவாகவும், வேகத்துடனும், வலுவுடனும் காணப்படுகிறது" எனக் குறிப்பிட்டார்.
##Caption## "கான்க்ரீட் வனம் படிக்க நேர்ந்தபோதே தமிழுக்கு ஒரு அசாதாரணமான, சிறப்பான படைப்பாளி கிடைத்திருப்பதாகத் தோன்றியது. சுரேஷுக்கு எதிலும் ஒரு சுயமான, தனித்துவமான பார்வை இருக்கிறது" - இது அசோகமித்திரன். இவ்வாறு பிரபல எழுத்தாளர்களால் பாரட்டப் பெற்ற சுரேஷ் தொடர்ந்து பல கோட்பாடுகளை மையமாக வைத்து வித்தியாசமான பல படைப்புகளைத் தர ஆரம்பித்தார். 'கனவுலகவாசியின் நனவு குறிப்புகள்', 'அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்', 'அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும்', 'சிலந்தி', 'யுரேகா என்றொரு நகரம்', '37' போன்றவை இவரது படைப்புகளில் முக்கியமானவை.
குழப்பமில்லாத நடை, பிரதியை மீறி ஆங்காங்கே வெளிப்படும் நகைச்சுவை, தெளிவான படைப்பாக்கம், வாசகனையும் பிரதியையும் ஒன்றிணைத்து அவனைப் படைப்பின் மையத்தோடு ஒன்றச் செய்யும் வல்லமை--இவை சுரேஷ் எழுத்தின் தனித்துவமாகும்.
"புதுமுறை எழுத்துகளில் நம்பிக்கை வைத்திருக்கும் எம்.ஜி. சுரேஷ் பல நாவல்கள் எழுதியிருக்கிறார். நான் படிக்க நேர்ந்த அவரது மூன்று நாவல்களுமே சாகித்ய அகாடமி பரிசு பெறத் தகுதியானவைதான்" என்கிறார் சுந்தர ராமசாமி. நகுலன், சுந்தர ராமசாமி, தமிழவன், ஜெயமோகன், எம்.ஜி. சுரேஷ் ஆகியோரின் எழுத்துகள் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதுத்தொகுதியாகும் என்பது கவிஞர் ஞானக்கூத்தனின் கருத்து.
'அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்' நூலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருது கிடைத்தது. இந்நூலும், 'அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும்' என்ற நூலும், சென்னை தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி மற்றும் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரிகளில் எம்.ஏ., பட்டப் படிப்புக்குப் பாடமாக வைக்கப்பட்டன. இவரது நூல்களை அடிப்படையாக வைத்து எம்.ஃபில்., பிஎச்.டி. பட்ட ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவருடைய 'பின்வீனத்துவம் என்றால் என்ன?' என்ற நூல் பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டதுடன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தால், "ஏலாதி" விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்நூல் பின்நவீனத்துவ சூழலையும், மொழி, அதிகாரம், இலக்கியம், உளவியல், பெண்ணியம், ஓவியம், திரைப்படங்கள் உடனான பின்நவீனத்துவ உரையாடல்களையும் அதன் சிந்தனையுலகையும் எளிமையாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. "இந்த நூல் பத்து வருடங்களுக்கு முன்பு வந்திருக்குமேயானால் தமிழ்ச் சிந்தனைச் சூழலே மாறியிருக்கும்" என்கிறார் சுந்தர ராமசாமி.
பின்நவீன எழுத்தை வெளியிடுவதற்கும், அதன் கோட்பாடுகளை அறிமுகம் செய்வதற்கும், விவாதிப்பதற்கும் சுரேஷ் தொடங்கிய தீவிர இலக்கியக் காலாண்டிதழ் 'பன்முகம்'. தமிழின் மிக முக்கிய இலக்கிய இதழான அதில் யுவன் சந்திரசேகர், ரமேஷ் பிரேம், மாலதி மைத்ரி, பாவண்ணன், லதா ராமகிருஷ்ணன் போன்றோர் பல கனமான படைப்புகளைத் தந்தனர். செப்டம்பர் 2001 முதல் செப்டம்பர் 2005 வரை வெளிவந்த அவ்விதழில் டாடாயிசம், சர்ரியலிசம், கியூபிசம் போன்ற பல்வகை இலக்கியக் கோட்பாடுகள் பற்றி விரிவான பல கட்டுரைகளைத் தந்திருக்கிறார் சுரேஷ். இஸங்களைப் பற்றிய போதிய புரிதல் தமிழ்நாட்டில் இல்லை என்பதாலும், அதுபற்றிய சரியான புரிதல் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் இவர் எழுதிய நூல்தான் 'இஸங்கள் ஆயிரம்'. "கோட்பாடுகள் (இஸங்கள்) தமிழில் ஒதுக்கப்படுகிறது. இலக்கியத்திற்குத் தொடர்பு இல்லாதது என்று ஒதுக்கிவிடும் பொறுப்பற்ற தன்மை தமிழில் உள்ளது. உண்மையான இலக்கியம் என்பது கோட்பாடுகளை மீறி நிற்பது என நினைக்கிறார்கள். கோட்பாடு பற்றிய உணர்வு வேண்டும் என்பதால்தான் இவற்றை எழுதினேன்" என்கிறார் சுரேஷ்.
##Caption## இவர் எழுதிய 'அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலர்' நாவலைக் கடந்த நூறு ஆண்டுகளில் தமிழில் எழுதப்பட்ட சிறந்த 10 பரிசோதனை நாவல்களில் ஒன்று என்கிறது தமிழ் இனி-2000 வெளியிட்ட உலகத் தமிழ் இலக்கிய வரலாற்று நூல். '37' நூல், தமிழ் இலக்கியச் சூழலில் முதன்முதலில் பல குரல்களில் (Polyphony) வெளியான ஒர் அறிவியல் புனைகதை நூலாகும். பல பின்நவீனத்துவ அறிஞர்களைப் பற்றி இவர் எழுதி அடையாளம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் அறிமுக நூல்கள் மிக முக்கியமானவை. 'டாவின்சி கோடும் டெளன்லோட் பிரதிகளும்', 'படைப்பும் பன்மையும்', 'எம்.ஜி.சுரேஷ் கட்டுரைகள்' எனப் பல தலைப்புகளில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் இவர்.
பாரதியார் நினைவுப் பரிசு உட்பட பல்வேறு பரிசுகளை வென்றிருக்கும் சுரேஷ், திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் உதவி இயக்குநராகப் பணி புரிந்திருக்கிறார். தற்போது மத்திய அரசின் திரைப்படத் தணிக்கைக் குழுவின் ஆலோசனை உறுப்பினராக இருக்கிறார். அரசு சுகாதாரத் துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர், தற்போது முழுநேர இலக்கியவாதியாக இயங்கி வருகிறார். மகள் ஸ்வேதா சிங்கப்பூரிலும், மகன் பிரவீண் லண்டனிலும் பணியாற்றி வர, மனைவி நிர்மலாவுடன் சென்னையில் வசிக்கிறார்.
கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாகக் கதை, கட்டுரை, திறனாய்வு, பின் நவீனத்துவம் சார்ந்த அறிமுக நூல்கள் போன்றவற்றை எழுதிக் கொண்டிருக்கும் எம்.ஜி. சுரேஷ், தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் தனித்துவமிக்க, தவிர்க்க முடியாத படைப்பாளிகளுள் ஒருவர்.
அரவிந்த் |