மே 2010: வாசகர் கடிதம்
நாகநந்தி அவர்களைப் பற்றிய ஹரி கிருஷ்ணனின் (ஹரிமொழி) கட்டுரைத் தொடர் அற்புதம். ஏதோ நாகநந்தி என்பவரைப் பற்றிய கட்டுரை என்றதும் (அவரது பெயர் எனக்குத் தெரிந்ததாக இல்லை) அப்புறம் படிக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஏப்ரல் இதழில் நேராகக் கேமராவை நோக்கும் ஒரு முதியவரின் படத்தைப் பார்த்ததும், இவர் ஏ.எம். ஜெயின் கல்லூரியில் எனக்குக் கற்பித்த அன்புக்குரிய தமிழ்ப் பேராசிரியர் என்று அடையாளம் கண்டேன். உடனே ஆன்லைனில் பதிவு செய்துகொண்டு இதுவரை வந்த 3 கட்டுரைகளையும் படித்தேன். பத்து ஆண்டுகளுக்கு முன்னரே அவர் மறைந்துவிட்டார் என்பது வருத்தமளிக்கிறது. பலகாலத்துக்கு முன்னரே காசிக்கு 'ஓடிப்போன' வயதான சில 'சுமங்கலிகளின்' கணவன்மாரைப் போல, இவர் எனது கற்பனை உலகத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டிருந்தார்.

நாத்திகரான அவர் (1987-90 காலத்தில்) அறுவை சிகிச்சைக்குப் போனபோது பிரசாதம் அணிய மறுத்தார். அரிய நேர்மையாளர்! எனது பாடத்திட்டத்தில் 'குயில் பாட்டு' இருந்தது. அதை அவரிடம் கற்க நேர்ந்தது என் அதிர்ஷ்டம். முழுப் பாட்டையும் மனப்பாடமாகவே அவர் சொல்வதைக் கேட்டு அசந்து போனேன். உங்கள் கட்டுரையிலிருந்துதான் நான் எல்லாவற்றையும் (அவர்தான் நாகநந்தி என்பது, நாடகம், கதைகள், விருதுகள் போன்றவை) அறிந்துகொண்டேன். எங்களுக்குப் பாடம் கற்பித்த காலத்தில் அறிந்திருக்கவில்லை. அபூர்வமான குணம்தான். எனக்குக் கொஞ்சம் பாரதியைத் தெரியுமென்றால் அதற்கு நான் அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

பாலாஜி கே,
(இணையதளத்தில் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழ் வடிவம்)

*****


ஏப்ரல் 2010 'தென்றல்' இதழில் பேராசிரியர் சி. இலக்குவனார் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை கண்டேன். மகிழ்ந்தேன். நூற்றாண்டு விழாக் காணும் பேராசிரியர்க்குத் 'தென்றல்' தந்த மதிப்பு, மரியாதை, அஞ்சலி கண்டு நெஞ்சம் நெகிழ்கின்றேன். இலக்குவனார்க்குத் தென்றல் சூட்டிய மணிமகுடம் கண்டு வணங்குகிறேன்.

நாகர்கோவில் தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி முதல்வாராகப் பேரா. இலக்குவனார் பணியாற்றியபோது அவரோடு தமிழ்த்துறையில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றவன் நான் என்பதால் அவரைப்பற்றி மலரும் இனிய நினைவுகளில் உலா வருகின்றேன். உலகத் தமிழர் சார்பில் நன்றி செலுத்துகிறேன்.

பேரா. டாக்டர். ப. ஓம்பூதலிங்கம்,
லில்பேர்ன், ஜார்ஜியா (அட்.)

*****


தென்றல் மின்னிதழ் கண்டேன். தென்றலின் அழகான கைதொட்டுப் பேசுகின்ற நயமும் கண்டேன். தென்றல் காற்று முகம் தொட்டு, மெல்லியதாய் கண்களை வருடி, காதில் வந்து சொன்ன சேதியாய், விவரங்கள்; மிகவும் அருமை. குறிப்பாக, கவிஞர் பூவை செங்குட்டுவனைப் பற்றிய அரவிந்த் சுவாமிநாதனின் நேர்காணல் அற்புதம். புதுவையில் சென்ற ஆண்டு, அந்தக் கவிஞரின் தலைமையிலே 'பெண்ணே நீயும் புறப்படு' என்ற தலைப்பில் கவிதை வாசித்ததை எண்ணி மிகவும் பெருமைப்படுகிறேன். உங்கள் இதழில் ஹரிமொழியை மீண்டும் காணும்போது நிரம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. மற்றைய வார/திங்கள் இதழ்களைப் போலன்றி மிகவும் கவனமாகப் பின்னப்பட்டு, எல்லா அகவையினரும் படிக்கும் வகையில், நல்ல தமிழைத் தரும் உங்களைப் போன்றவர்களின் தமிழ்ப்பணியை அவசியம் பாராட்ட வேண்டும்.

இராஜ. தியாகராஜன்,
புதுச்சேரி, இந்தியா.

*****


விஜி திலீப் (சாதனையாளர், ஏப்ரல் 2010) பற்றிய கட்டுரை மிகச் சிறப்பு. பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு அவர் நிறையச் செய்திருக்கிறார். கடவுள் அவருக்கு இன்னும் அதிகம் செய்வதற்கான வலுவைத் தரட்டும்.

T.G. வெங்கடேஷ்
(இணையதளத்தில்)

*****


அற்புதம் இந்த சரணாலயம் பாட்டு. அதைப்பாடியவர் குரல் இனிமையோடு கேட்கையில் ரொம்ப இதம்! வாழ்க.

உதயகுமார்,
(இணையதளத்தில்)

*****


ஏ.என்.சிவராமன் அவர்களின் திறமையால் சிறப்புற்று, பிரபலமாகி இன்றும் அவர் வகுத்த பாதையிலேயே வெற்றிநடை போட்டு வரும் தினமணி போன்ற ஒரு நாளிதழ், தென்றல் மாத இதழைப்பாராட்டி ஒரு கட்டுரை வெளியிட்டிருப்பது தென்றலுக்கு ஓர் உண்மையான, விருப்பு வெறுப்பற்ற, நியாயமான, நடுநிலைப் பாராட்டு என்றே சொல்லவேண்டும்.

பத்திரிகையின் தரத்தைப் பாராட்டும் தினமணி போன்ற பத்திரிகையாளர்களுக்கு, தென்றல் இதழுக்குப் பின்னால் அதன் நிர்வாகிகளின் உழைப்பும் முயற்சியும் எந்த அளவிற்கு உள்ளது என்பதும், கடல்கடந்து சென்று வாழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்கத் தமிழ் மக்களுக்கு எந்த அளவுக்குத் தமிழ்த்தொண்டு செய்து வருகிறார்கள் என்பதும் தெரியவரும். கோவையில் நடைபெற உள்ள செம்மொழி மாநாட்டில் இத்தொண்டினைக் குறித்துப் பாராட்டப்பட வேண்டும். என்பதும் எதிர்பார்க்கப் படவேண்டிய ஒன்று.

டாக்டர். அலர்மேலு ரிஷி

*****

© TamilOnline.com