2010 மார்ச் 27 அன்று நடந்த கலிஃபோர்னியா வருடாந்திர 'Odyssey of the Mind' என்னும் அறிவாற்றல் போட்டியில் கூப்பர்டினோ, மில்லர் மிடில் பள்ளி 6, 7வது வகுப்பு மாணாக்கர்களான அமித் பசுபதி, ஆத்ரே கோச்சே, ஸ்நேஹா மோகிதேக்கர், நுமேர் பசீர், அன்ஷுல் ஷா, தீரஜ் நல்லபோத்துலா, ஹிமா ரஜனா ஆகியோர் கலந்துகொண்டு மாநில அளவில் இரண்டாவது பரிசைப் பெற்றுள்ளனர். .
1978ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போட்டியில் கிண்டர்கார்ட்டன் முதல் கல்லூரிவரை உள்ள மாணவர்கள் அமெரிக்கா மற்றும் உலக அளவில் 30 நாடுகளிலிருந்து வந்து கலந்து கொள்கின்றனர். மாணவ, மாணவிகளின் மூளையின் கற்பனைத் திறன், உழைப்பு, கடினமான வினாக்களுக்குச் சிந்தித்து விடை கூறும் திறன், குழு உறுப்பினர்களோடு இணக்கமாகச் செயல்படுவது, ஊக்கப்படுத்துவது போன்றவற்றில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த வருடப் போட்டியில், மனித சக்தியால் இயக்கப்படும் கருவிகள் மூலம் தடைகளைத் தாண்டி சுற்றுப்புறத்தைத் தூய்மை செய்தல், புதைபொருள் பொக்கிஷங்களை வெளிப்படுத்துதல் என்பது போட்டியின் சாரம். இந்தக் குழு மாநில அளவில் இரண்டாவதாக வந்ததை அடுத்து, 2010 மே மாதம் 26 முதல் 29 வரை மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உலக அளவில் நடக்க இருக்கும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்கின்றனர். அதிலும் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்!
சீதா துரைராஜ், சான்ஹோசே, கலிஃபோர்னியா |