தெரியுமா?: 'தென்றல்' குறித்து தினமணி
தனது நெடிய பாரம்பரியத் தரத்தைச் சற்றும் குறைவுபடாது பாதுகாத்து வரும் தினமணி நாளிதழ் ஏப்ரல் 11, 2010 தேதியிட்ட 'தமிழ்மணி' இணைப்பில் தென்றலைப் புகழ்ந்து எழுதியுள்ளது. பல

பிரபலங்கள் ஆர்வத்தோடு படிக்கும் இந்தப் பத்தியை எழுதும் கலாரசிகன் அதில் இவ்வாறு கூறியுள்ளார்:

"தமிழ் மண்ணைவிட்டு வெளியே போனால்தான் தமிழனுக்குத் தமிழுணர்வு வரும் போலிருக்கிறது. எங்கள் துணை செய்தி ஆசிரியர் முத்துக்குமரன் வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்காக நடத்தப்பட்டு வரும் "தென்றல்' என்கிற மாத இதழை எனது பார்வைக்குக் கொண்டு வந்தார். அதைப் படித்துப் பார்த்தபோது ஏற்பட்ட உணர்வுதான் நான் மேலே குறிப்பிட்டிருந்த கருத்து.

"வதனா எழுதிய 'அதிர்ஷ்டம்', சிகாகோவைச் சேர்ந்த கோமதி சுவாமிநாதன் எழுதிய 'விழிப்புணர்வு', கலிபோர்னியா கலா ஞானசம்பந்தம் எழுதிய 'விடியல்' இவையெல்லாம் 'தென்றல்' இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றிபெற்ற படைப்புகள். ஒவ்வொன்றும் நல்ல, தரமான கதைகள்.

பண்டிதமணி பற்றிய கட்டுரை, வெங்கட் சுவாமிநாதனுடன் நேர்காணல் என்று அசர அடித்திருக்கிறார்கள். பல்சுவை மாத இதழ் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இலக்கணம் பிசகாமல் இருக்கிறது அமெரிக்கத் 'தென்றல்'.

சமீபத்தில் 'யுகமாயினி' ஆசிரியர் சித்தனுடன் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கருத்தைக் கூறினார். "தமிழே பேசாத புறச்சூழலில் வாழும் தமிழர்கள் தமிழை நேசிக்கிறார்கள். நாம் தமிழை சுவாசித்தபடி இருந்தும் ஏன் தமிழைப் புறக்கணிக்கிறோம்?'' என்கிற சித்தனின் கேள்வியை நானும் மனதிற்குள் கேட்டுக் கேட்டுப் பார்க்கிறேன். விடை கிடைக்கவில்லை.

இதயத்தில் ஈசான மூலையில் நம்பிக்கை ஒளி-புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழையும், தமிழ்க் கலாசாரத்தையும் காப்பாற்றுவார்கள்!"

இதனை இணையத்தில் படிக்க

தென்றல் போட்டியில் தேர்வு பெற்ற இறுதிநிலைக் கதைகளே "நல்ல, தரமான கதைகள்" என்று விமர்சிக்கப்படும் தகுதியைப் பெற்றுள்ளன என்பதைப் பெருமையோடு பார்க்கிறோம்.

வாசகர்களே! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

ஆசிரியர் குழு,

© TamilOnline.com