அமெரிக்க மண்ணின் சுதந்திரத்திற்குக் குரல் கொடுத்த மாநகரம் ஃபிலடெல்பியா. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கத் தமிழர்கள் திரண்டு, தமிழகக் கிராமங்களின் கல்விச் சுதந்திரத்திற்குக் குரல் கொடுக்கும் திருவிழாவாக உருவாகி வருகிறது தமிழ்நாடு அறக்கட்டளையின் 35வது தேசிய மாநாடு. மே 28 முதல் 31 வரை நடைபெற இருக்கும் இம்மாநாட்டில் கலந்துகொள்ள தமிழக அரசின் பள்ளிக் கல்வி அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு, 'சொல்வேந்தர்' சுகி சிவம், 'கலைமாமணி' ஒய்.ஜி.மகேந்திரன் உட்படப் பல விருந்தினர்கள் தமிழகத்திலிருந்து வரவிருக்கிறார்கள்.
ராஜ் தொலைக்காட்சி 'அகட விகடம்' புகழ் வாணியம்பாடி பேரா. அப்துல் காதர் தலைமையில் "வாழ்க்கை என்பது வாழ்வதற்கா? வாழ வைப்பதற்கா?" என்ற பட்டிமன்றம், "மகிழ்வும் நிறைவும், மண வாழ்க்கைக்கு முன்பா, பின்பா?" என்ற 'நீயா, நானா' அமைப்பிலான நிகழ்ச்சி ஆகியவை அவையோரை சிரிக்கவும், சிந்திக்கவும் செய்யும் என்கிறார் நிகழ்ச்சி அமைப்பாளர் திரு. முருகன் கண்ணன். கவியரங்கம் ஒன்று பேரா. அப்துல் காதர் தலைமையில் நடக்கவுள்ளது. தமிழகத்தின் தலைசிறந்த பெண் பேச்சாளர்களான டாக்டர் சுதா சேஷய்யன், உமையாள் முத்து ஆகியோர் வழக்காடு மன்றம் நிகழ்த்த இருப்பது குறிப்பிடத்தக்க அம்சம். சுகி சிவம் அவர்களின் தமிழ் மழை மாநாட்டின் மூன்று நாட்களிலும் பொழியப் போகிறது. முத்தாய்ப்பாக, நிகழ்ச்சிகள் அனைத்தையும் கணீர்க்குரலில் தொகுத்து வழங்க வருகிறார் இலங்கை வானொலி புகழ் அப்துல் ஹமீது. தமிழகத்தில் சமுதாயப் பணிசெய்து வரும் அமெரிக்கரும் 'The weight of Silence: Invisible Children of India' என்ற நூலின் ஆசிரியையுமான ஷெல்லி ஸீல், தமது தமிழக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வருகிறார்.
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் புகழ்பெற்று வரும் நகைச்சுவை நாயகி விஜய் நாதன், தமிழகத்திலிருந்து 'சன் டிவி அசத்தப்போவது' புகழ் தேவகோட்டை ராமநாதன், மங்கையர் மலர் புகழ் உஷா ராம்கி, கலைமாமணி ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் நகைச்சுவை விருந்து வழங்குவார்கள்.
மாநாட்டின் இரண்டு நாட்களிலும் இரவில் லக்ஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவினருடன் மஹதி, மாலதி, கிருஷ், லக்ஷ்மண் ஆகியோர் இணைந்து வழங்கும் திரையிசை விருந்து உண்டு. ஞாயிறு காலையில் வயதுக்கும், விருப்பத்துக்கும் ஏற்றாற் போல சிறுவர், சிறுமியர், இளைஞர்கள், மருத்துவர்கள், தொழில் ஆர்வலர்கள், தமிழில் கணினி கற்க விரும்புவோர், மகளிர் ஆகியோருக்கான சிறப்பு அரங்கங்கள் நடைபெறும். மகளிர் அரங்கில் அழகுக் குறிப்புகள் முதல் பொருளாதாரம் வரை பல தலைப்புகளில் 'மங்கையர் மலர்' உஷா ராம்கி, சோபா சம்பத், சோனியா சிங் ஆகியோர் உரையாற்ற உள்ளனர். மதுரை தியாகராசர் ஆலையின் தொழிலதிபர் கருமுத்து கண்ணன் தொழில் அரங்கில் சிறப்புரையாற்றவிருக்கிறார்.
"மாநாட்டுச் செலவுகள் நன்கொடைகள் மூலம் சேர்ந்து விட்டன. தற்போது வந்து கொண்டிருக்கும் நன்கொடைகள், கட்டணங்கள் எல்லாம் அப்படியே தமிழகக் கிராமங்களில் ஏழைப்பிள்ளைகள் பள்ளிக் கல்வி தொடரப் பெருமளவு உதவும்" எனப் பெருமிதத்தோடு கூறுகிறார் தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ராம்மோகன். மாநாட்டில் தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு அறக்கட்டளையும் இணைந்து செயலாற்றும் பள்ளிக் கல்வி தொடர்பான திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (Memorandum of Understanding) கையெழுத்திட வருகிறார் தமிழகத்தின் பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு.
ஃபிலடெல்பியாவில், மே மாத இறுதியில் நடைபெறவுள்ள தமிழ்நாடு அறக்கட்டளையின் ஈகை மற்றும் கலை, இலக்கிய விழாவில் பங்கு பெற்று, தமிழகத்தின் கிராமங்களில் கல்வி வளர்ச்சிக்கு உங்கள் பங்கை அளித்துப் பெருமிதம் கொள்ளுங்கள்.
மாநாடு பற்றிய முழு விவரங்களுக்கு இணையதளம்: www.tnfusa.org மின்னஞ்சல்: convention@tnfusa.org தொலைபேசி: 610.444.2628 |