பட்டிக்காடா? பட்டணமா?
என் அக்காவுக்குத் தலை தீபாவளி. கிராமத்திலேயே கொண்டாட ஏற்பாடு. எங்கள் தாத்தா, பாட்டி சிதம்பரம் அருகே கிராமத்தில் இருந்தார்கள். கடைசியில் சில காரணங்களால் சென்னையிலேயே எல்லாரும் இருந்ததால், அங்கேயே கொண்டாடி விடலாமே, தாத்தா பாட்டி மட்டும் வந்தால் போதுமே என்று தீர்மானித்தோம். தெரிந்த ஒருவரிடம் விஷயத்தைச் சொல்லி, தாத்தா பாட்டியை சென்னைக்கு முதல் நாளே வந்துவிடும்படிச் சொல்லி அனுப்பினோம்.

வீட்டுக்கு அவர் போன சமயம் பாட்டி கோயிலுக்குப் போயிருந்திருக்கிறார். தாத்தா திண்ணையில் அமர்ந்து கொண்டிருந்தார். அவரோ டமாரச் செவிடு. போன மனிதர் தாத்தாவிடம், "தீபாவளி பிளான் மாத்திட்டாங்க. எல்லோரும் அங்கே இருக்கிறதால சென்னைக்கு உங்களை வரச் சொல்லிட்டாங்க. அங்கேயே தீபாவளி கொண்டாடப் போறாங்களாம்" என்று கூறிவிட்டு, "அவசர வேலை இருக்கு. நான் போறேன். பாட்டியிடம் தகவல் சொல்லிடுங்க" என்று சொல்லிச் சென்றுவிட்டார். தாத்தாவும் பலமாகத் தலையாட்டியிருக்கிறார்.

பாட்டி கோயிலிலிருந்து வந்தவுடன், "எல்லோரும் தீபாவளிக்கு இங்கே வரத் தயாரா இருக்காங்களாம். நல்ல கிராண்டா நம்ம ரெண்டு பேரையும் ஏற்பாடு செய்யச் சொல்லிட்டாங்க. ஒரு ஆள்கிட்ட தகவல் சொல்லி அனுப்பியிருக்காங்க" என்று கூறியிருக்கிறார்.

பாட்டிக்குத் தலைகால் புரியவில்லை. உடனே இரண்டு சமையற்காரர்களை வரவழைத்து நிறைய ஏகப்பட்ட பட்சண வகைகளைச் செய்து விட்டார். மேளக்காரருக்கும் சொல்லி விட்டார். (கிராமங்களில் தீபாவளிக்கு வீடுகளில் நாதஸ்வரம் வாசிப்பது வழக்கம்). வாசலில் பந்தல். பூ, பழம் என்று வாங்கி வீடு நிறைய உறவுக்காரர்களையும் வரவழைத்து விட்டார். வீடு திமிலோகப்பட்டது.

##Caption## தீபாவளி நாளும் வந்தது. என்னடா வருவதாகச் சொன்னவர்களிடமிருந்து ஒரு தகவலும் இல்லையே என வாசலுக்கும் உள்ளுக்குமாய் நடந்து ஓய்ந்து போயிருக்கிறார் பாட்டி. அப்போது போன் வசதி கிடையாது. சென்னையிலோ நாங்கள் தாத்தா, பாட்டி ஏன் இன்னும் வரவில்லை, என்ன ஆயிற்று அவர்களுக்கு, எப்படித் தொடர்பு கொள்வது என்று தவித்துக் கொண்டிருந்தோம். உடம்பிற்கு ஏதும் முடியவில்லையோ என்று நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டே ஏனோதானோவென தீபாவளியைக் கொண்டாடினோம்.

பண்டிகை முடிந்ததும் அப்பா வருத்தமும், கவலையுமாய் டாக்ஸி பிடித்துக் கொண்டு கிராமத்திற்கு ஓடினார். அப்பாவைக் கண்டது பாட்டி ஒரேயடியாய் வசவும், திட்டுமாய்க் கூச்சல் போட்டிருக்கிறார்.

அன்று தாத்தா அடித்த கூத்தை இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

தங்கம் ராமசாமி,
நியூஜெர்ஸி

© TamilOnline.com