மருமகள், மகன், நான்
சமையலில் இயந்திரத்தனமாக இயங்கிக்கொண்டு இருந்த வசுமதியின் மனம் காலையில் மகன் தீபக் சொன்னதையே நினைத்துக் கொண்டு இருந்தது.நவீனமாக கட்டப்பட்ட சமையல் அறையில் ஒரு அலமாரிக் கதவை திறந்த பொழுது மூலையில் இருந்த பழைய வெண்கலப் பானை கண்ணில் பட்டது. ஒரு வேளை தானும் இதுப் போலத்தான் ஒதுக்கப் பட்டுவிட்டோமோ என்று நினைத்தாள்.எலெக்ட்ரிக் அவனும் குக்கரும் வந்த பிறகு இந்த வெண்கலப் பானையை யார் ஆளப் போகிறார்கள்? அது போலத்தான் மகனுக்கு கல்யாணம் ஆகி மருமகள் வந்த பிறகும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் அந்த வெண்கலப் பானைப் போல, முக்கியமான முடிவு எடுக்கும் இடத்தில் தான் இல்லாமல் முடிவு எடுத்தப், பின் தெரியப்படுத்திய வேண்டிய இடத்தில் இருந்தால் போதும் என்று நடத்திய விதம் மனதை வலிக்கச் செய்தது. விழி ஓரம் நீர் கசிந்தது.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



நடந்தது இதுதான். தீபக் காலையில் இட்லி சாப்பிட்டுக் கொண்டே சர்வ சாதாரணமாக,"அம்மா, இன்று இரவு நானும் மாலினியும் கைனக் டாக்டரிடம் போகிறோம். அதனால் எங்களுக்காக எதுவும் செய்யாதே. வெளியில் சாப்பிட்டுக் கொள்கிறோம்" என்றான்.மனம் அதிர்ந்தது."எதற்கு டாக்டர்?" கேட்காமல் இருக்க முடியாமல் வினவினாள். "ஒன்றும் பெரியாதாக இல்லை. கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் ஆகிறதே. அதான். சரி நான் வர்ரேன். மாலினி நீ ரெடியா?"என்றான். அங்கே காபி சாப்பிட்டுக் கொண்டிருந்த மாலினி தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாததுபோல் நடந்து கொண்டதுவேறு மனதை உறுத்திற்று.இருவரும் சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள். ஒரு சமையல்காரியிடம் காட்டப்படும் மரியாதைபோல் பட்டது வசுவிற்கு. மனம் அலுத்துக் கொண்டது.

பின், நான் வேறு யார்? சமையல்காரிதான்.எல்லாவற்றையும் மூடி வைத்துவிட்டு புடவைத்தலைப்பால் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டாள்.

##Caption## வந்து ஹாலில் உட்கார்ந்து, பேப்பர் படித்துக் கொண்டிருந்த கணவரின் எதிரில் இருந்த இருக்கையில் உட்கார்ந்தாள். அவள் வந்த அரவம் கேட்ட நாராயணன் நிமிர்ந்து அவளைப் பார்த்தார். அலைமோதும் தன் உணர்வுகளை வெளியே காட்டிக் கொள்ளாமல் வசு,"நீங்கள் டிபன் சாப்பிடுகிறீர்களா? அல்லது சற்று போகட்டுமா?" என்று கேட்டாள். மறுபடி அவளை நிமிர்ந்து பார்த்த நாராயணன்,"சற்று நேரம் போகலாம்னு நினைக்கிறேன். சரி.நீ ஏன் ஒரு மாதிரி இருக்கே? எதாவது கவலை படறயா என்ன?" என்று கேட்டார். ஆச்சரியப் பட்டாள் வசு. இவருக்கு எப்படித் தெரிந்தது. தான் எவ்வளவோ மறைத்துக் கொண்டாலும் கண்டு பிடித்துவிட்டாரே! அவர் என்னவோ மிகவும் நல்லவர்தான். மனைவியை தன் தோழியாகப் பார்க்கும் உயர்ந்த பண்பாளர்தான். ஆனால் தான் ஒதுக்கப் பட்டதை பூரணமாக உணர்ந்த வசுவால் அதை அவரிடம் கூற முடியாமல் தவித்துத்தான் போனாள். "ஒன்றும் இல்லை" என்ற பொழுது அவள் குரல்லில் இருந்த வறட்சி அவளுக்கேத் தெரிந்தது. பெபரை மூடி வைத்துவிட்டு, அவர்,"ஏதாவது உடம்பு சரியில்லையா"என்றார். வசு,"உடம்புக்கு ஒன்றும் இல்லை.மனம்தான் சற்று சரியாக இல்லை. உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்று தன் ஆச்சரியத்தை அப்பட்டமாக காட்டிக் கொண்டு கேட்டாள்.

மெலிதாக முறுவலித்துக் கொண்டே, நாராயணன், "முப்பது வருஷம் உன்னோடு இருந்து இருக்கேன். உன்னுடைய முகம் வாடி இருப்பதை என்னால் உணர முடியாதா?"என்றார். தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று முன்பு முயன்ற வசு, இந்த வார்த்தைகளைக் கேட்டதும், கரையை உடைத்துக் கொண்டு வரும் வெள்ளம்போல் உணர்ச்சிகள் தாக்க, தன் வயதையும் அனுபவத்தையும் மறந்து, வெடித்தாள். "இன்று தீபக் சொன்னபோது நீங்களும் இருந்தீர்களே! டாக்டரிடம் போகலாமா வேண்டாமான்ற முடிவு அவர்களே எடுத்தாச்சு. எந்த டாக்டர், என்ன விஷயம் ஒண்ணும் சொல்லவில்லையே.வெறும் இன்ஃபர்மேஷன்தான். என்னால் இந்த புறக்கணிப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை." என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே கண்களில் நீர் முட்டியது. நராயணனுக்கு எல்லாம் புரிந்தது. வசு மகன் பேரிலும் மருமகள் பேரிலும் குற்றம் கண்டுப் பிடிக்கும் சாதாரண வகை பெண்ணல்ல. ஒரு தனியார் நிறுவனத்தில் பொறுப்புள்ள பதவியில் பணி ஆற்றி ஓய்வு பெற்றவள். பல சமயங்களில் அவளது கம்பீரமான போக்குக் கண்டு அவர் பெருமையும் ஆச்சர்யமும் பட்டு இருக்கிறார்.அவள் இந்த அளவு உடைகிறாள் என்றால், அது மகன் மேல் அவளுக்கு இருந்த பாசமும், என்ன ஆயிற்றோ, எதற்காக டாக்டரிடம் போகிறார்களோ என்ற கவலையும்தான் காரணம் என்று உணர்ந்தார்.

##Caption## குரலில் மென்மையை வரவழைத்துக் கொண்டு,"வசு, இது சாதாரண செக்-அப் ஆக இருக்கும்.என்னதான் அவன் நமக்கு மகன் என்றாலும் இதெல்லாம் டெலிக்கேட் விஷயம் இல்லையா வசு. அதுதான் முதலிலேயே சொல்லி பெரிசு பண்ண வேண்டாம்னு சொல்லி இருக்க மாட்டான்."என்றார். உடனே வசு,"மாலினியும் ஒண்ணும் சொல்லலையே. அதை கவனித்தீர்களா?" என்றாள். நாராயணன்,"நானும் அதைத்தான் சொல்ல வந்தேன். அவளுக்கு ஒருவேளை இதில் இஷ்டம் இல்லாமலும் இருக்கலாம், இல்லையா?"என்றார். இந்த புது கோணம் வசுவை சிந்திக்க வைத்தது. நாராயணன், அவள் நிலையை சரியாக உணர்ந்து கொண்டு,"வசு, 30 வருஷம் நீயும் இந்த குடும்பத்தை தாங்கிட்டே. இன்னும் எவ்வளவுதான் பாரம் சுமக்க முடியும் உன்னாலன்னுகூட இருக்கலாம்." என்றார்.

வசு உடனே,"நீங்கள் சொல்வதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லையே. அப்படி என்னை பெரிய இடத்தில் வைத்து இருந்தால் முதலில் கன்சல்ட் செய்து இருப்பானே"என்றாள். அவர்,"வசு, ஒண்ணு உனக்கு புரியணும். உனக்கு மகன்மேல இருக்க பாசத்தால கவலைப் படுகிறாய். இது அவன் வாழ்க்கை வசு. அவன் அதை நடத்த ஆசைப் படுவான். நடத்தட்டும்னு நாம் ஒதுங்கணும். ஏதாவது உதவி கேட்டால் மட்டுமே நாம் அந்த வட்டத்துக்குள் நுழையணும்.இந்த குடும்பத்தை இத்தனை வருஷம் நிர்வகித்து சரியாக நடத்தி, நீ மன நிறைவு அடைந்தாற்போல் அவர்களும் அனுபவப்படட்டுமே வசு! எத்தனையோ வீட்டில் கல்யாணம்னு ஆன கையோட மகன் தனிக் குடித்தனம் போய் விடுகிறான். அவர்கள் வீட்டு பெரியவர்களைக் கேட்டுப் பார். உன்னை உன் மகன் எங்கே வைத்து இருக்கிறான் என்று அவர்கள் சொல்லுவார்கள். வாழ்க்கையில் எல்லாம் நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது வசு"என்றார்.

நீண்ட பிரசங்கமே செய்த தன் கணவனை ஆச்சர்யத்துடன் ஏறிட்ட வசு,"உங்களுடைய வாழ்க்கையைப் பற்றிய அணுகுமுறை சரியாகத்தான் இருக்கும்னு தோன்றுகிறது. ஆமாம், இதெல்லாம் எப்படி உங்களுக்குத் தோன்றுகிறது?"என்றாள். மனைவியின் அருகேவந்து, ஆதூரத்துடன் அவள் தலையை தடவிய அவர், "பகவத் கீதை உபன்யாசம் கேட்டால் மட்டும் போதாது. அதை வாழ்க்கையில் எப்படிப் பின்பற்றுவது என்றும் சிந்திக்க வேண்டும்" என்றார் குறும்பாக. அதை உணர்ந்துகொண்ட வசு 50 வயதிலும் அழகாக வெட்கப் பட்டாள்.

சுதா சந்தானம்,
சான் ரமோன், கலி

© TamilOnline.com