மூட்டு வலி
மூட்டு வலி நமது வயதை உணர்த்தும் வலி என்று சொன்னால் மிகையில்லை. நாற்பதைத் தொட்டவரும், ஐம்பதை எட்டிப் பார்த்தவரும் முன்போல் நடமாட முடியாமல் முனகுவதைப் பார்க்கிறோம். அறுபதுகளிலும் எழுபதிலும் இருப்பவர்கள் தனது தினப்படி வேலைகளைக் கூடச் செய்ய இயலாமல் போவது நமக்கு அச்சமூட்டுகிறது. இந்த வலிகள் பெரும்பாலும் ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் வகையைச் சேர்ந்ததாக இருக்கிறது. குறிப்பாக குளிர், மழை காலங்களில் மூட்டுவலி அதிகமாகிறது. வயது கூடக்கூட வலியும் கூடுகிறது.

மூட்டுகளின் இடையில் இருக்கும் குருத்தெலும்புப் (Cartilage) பகுதி தேய்ந்து போவதால் இந்த வலி உண்டாகின்றது.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



அவரவர் பழக்க வழக்கங்கள், நடை மற்றும் செயல்பாடுகளைப் பொறுத்து மூட்டுத் தேய்மானம் ஏற்படுகிறது.

தேய்மானத்தின் அறிகுறிகள்
எலும்புத் தேய்வு மூட்டழற்சி (ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்) முக்கியமாக முழங்கால் ##Caption## மூட்டு, இடுப்பு மூட்டு, தோள் மூட்டு, முதுகெலும்பு போன்ற பெரிய மூட்டுகளையும் கைவிரல் மூட்டுகளையும் தாக்கும். ஒரு மூட்டு மட்டுமோ அல்லது பல மூட்டுகளோ பாதிக்கப்படலாம். இது பெரும்பாலும் எந்தவித விபத்து அல்லது காயம் இல்லாமல் ஏற்படலாம். முழங்கால் மூட்டு வலி இருப்பவர்களுக்குப் படி ஏறுதல், இறங்குதல் கடினம். தரையில் இருந்து எழுவது மிகவும் கடினம். மற்றபடி நடக்க, நிற்க முடியும். நாளாக ஆக அதுவும் பாதிக்கப்படலாம். குறிப்பாக, காலையில் படுக்கையில் இருந்து எழுந்து கொள்ளும்போது மூட்டுகள் அதிகமாக இறுகிக்கொள்ளும். அங்குமிங்கும் அசைத்தால் கொஞ்சம் மனமிரங்கும். அறிகுறிகள் வேறுபடலாம். வலி, வீக்கம், மூட்டு இறுகுதல், இயக்கம் குறைதல் என்று வித்தியாசப்படலாம். இவை தொடர்ந்து 2 வாரத்துக்கு மேல் இருக்குமானல் மருத்துவரை நாட வேண்டும். எக்ஸ் ரே மூலம் தேய்மானம் கண்டு பிடிக்கப்படலாம். ஒரு சிலருக்கு MRI அல்லது Arthroscopy பரிசோதனை தேவைப்படலாம்.

யாரைத் தாக்கும்?
பெரும்பாலும் வயதானவர்களை; குறிப்பாக, 50-60 வயது உள்ளவர்களை. இவர்களின் நடமாட்டம் இந்த நோயினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. வயது ஆக ஆக இது அதிகரிக்குமே அன்றிக் குறைவது இல்லை. ஆனால் ஒரு சிலருக்கு 30 வயதிலேயே இது பதம் பார்க்கலாம். உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களுக்கு இது தாக்கும் வாய்ப்பு அதிகம். உடற்பயிற்சி செய்யாதவர்களையும் மூட்டு வலி சிறு வயதிலேயே தாக்கலாம். வீட்டு வேலை, வெளி வேலை என்று செய்தாலும் தகுந்த உடற்பயிற்சி செய்யாத போது, தசை நார்கள் வலுவிழந்து, எலும்புகளும் தேய்ந்து போகலாம்.

இதைத் தவிர வேறு வித ஆர்த்ரைடிஸ் காரணமாக மூட்டுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பரம்பரையில் வரக்கூடிய ருமடாயிடு ஆர்த்ரைடிஸ், தோல்வகை நோயுடன் காணப்படும் ஸோரொயாடிக் ஆர்த்ரைடிஸ், கீல்வாதம் (gout) போன்றவற்றால் மூட்டு பாதிக்கப்படவருக்கும் ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் ஏற்படலாம். அதிக பளு தூக்குபவர்களுக்கு முதுகு மற்றும் முழங்கால் மூட்டுகள் பாதிக்கப்படலாம். நீரிழிவு, தைராயிடு மற்றும் கேல்சியம் பாதிப்பு இருப்பவர்களுக்கும் இந்தவகை ஆர்த்ரைடிஸ் ஏற்படலாம். தீவிர உடற்பயிற்சி செய்பவர்கள், குறிப்பாக ஓட்டப் பயிற்சி செய்பவர்கள், தகுந்த கவனம் எடுத்துக்கொள்ளாவிடில் மூட்டுகளில் தேய்மானம் ஏற்படலாம்.

வலி நிவாரண மாத்திரைகளும், அறுவை சிகிச்சையும் சிலருக்குத் தேவைப்படும். ஆனால் எல்லோருக்கும் தேவையான தீர்வும், தவிர்ப்பு முறையும் நீட்டிமடக்கும் பயிற்சிகளில் அடங்கி விடுகின்றன. இவற்றை 'Physical Therapy' நிபுணர்கள் மூலம் அறிந்து கொள்ள வேண்டும். இது மூட்டு வலி இருப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். தகுந்த உடற்பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு, பாதிக்கப்பட்ட பிறருடன் சேர்ந்து இவற்றைச் செய்யும்போது ஊக்கமும் உற்சாகமும் ஏற்படுகின்றன. பயிற்சிகளை தினமும் செய்வதால் தசைகளும் மூட்டுகளும் வலுவடையும். குறிப்பாக மழை, குளிர் காலங்களில் முன்கூட்டியே இவற்றைச் செய்தால் மூட்டு விறைப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். ஒரு சில பயிற்சிகளை இங்கு ஆராய்வோம்.

மூட்டுப் பயிற்சிகள்
காலையில் எழுந்திருக்கும் போது முட்டியை மடக்கி நிமிர்த்தித் தசைகளை தளர்த்த வேண்டும். நடக்கத் தொடங்குவதற்கு முன்னர் இந்தப் பயிற்சிகளைச் (stretching exercises) செய்வது மிக நல்லது. இவற்றை அமர்ந்தபடியோ நின்றபடியோ செய்யலாம். அவரவர் சக்திக்கு ஏற்ப 10 முதல் 20 தடவைஇவற்றைச் செய்யலாம்.



அமர்ந்த வண்ணம் செய்யும் பயிற்சிகள்
  1. முட்டியை தூக்குதல்: படத்தில் இருப்பது போல் ஒரு நாற்காலியில் அம்ர்ந்த வண்ணம், முதலில் ஒரு முட்டியைத் தூக்கி, 3 முதல் 4 அங்குல உயரத்தில் காலை 5 முதல் 10 வினாடிகள் நீட்ட வேண்டும். மெதுவாகக் கீழே தளர்த்தவும். 5 முதல் 10 முறை செய்ய வேண்டும்.
  2. முட்டியை பின்னுக்கு தள்ளுதல்: நாற்காலியில் அமர்ந்த வண்ணம் பாதத்தை பின்னுக்கு தள்ள வேண்டும். முதலில் வலது பாதத்தை பின்னுக்கு தள்ளி 5 முதல் 10 வினாடிகள் காத்திருக்கவும். பின்னர் இடது பாதம் என்று 10 முறை செய்ய வேண்டும்.
  3. காலை உயர்த்துதல்: முதலில் வலது காலை நேராக இருக்க முடிந்த வரை நீட்ட வேண்டும். நீட்டிய வண்ணம் 5 முதல் 10 வினாடிகள் தளர்த்த வேண்டும். பின்னர் இடது காலை நீட்ட வேண்டும். எதிர்ப்பு சக்தி விரும்புவோர் மறுகாலில் துணியினால் கட்டிய படியும் செய்யலாம். இதை 10 முறை செய்ய வேண்டும்.
  4. காலை பின்னுக்கு தள்ளுதல்: ஒரு பாதத்தை நாற்காலியின் காலில் அழுத்திக் கால் தசைகளை பின்னுக்கு தள்ள வேண்டும். கால்களை மாற்றிச் செய்ய வேண்டும்.




நின்றபடி செய்யும் பயிற்சிகள்
  1. ஓரிடத்தில் நின்றபடி முட்டியை முடிந்த வரை மேலே உயர்த்தி, இறக்க வேண்டும். இதை இரண்டு நிமிடங்கள் செய்ய வேண்டும். இதை ராணுவ பேண்ட் இசையுடன் செய்தால் நேரம் போவது அறியாமல் செய்து விடலாம்.
  2. நின்ற வாக்கில் இருந்து அமருவது போல முட்டியை மிக இலேசாக மடக்க வேண்டும். பின்பு நிமிரவும். இதில் இடுப்பு, முதுகு மடங்காமல் கவனம் செலுத்தவும். 10 முறை செய்யவும்.
  3. நின்றபடி முட்டியை நீட்டி மடக்கவும். ஒரு நாற்காலியில் சாய்ந்து இதைச் செய்யலாம்.
  4. முட்டியை பின் பக்கமாக எட்டி தள்ளவும்.
  5. முட்டியை வலது இடது பக்கம் எட்டித் தள்ளவும்.


ஒவ்வொன்றையும் தினமும் 10 முறையாவது செய்ய வேண்டும். பின்னர் நடப்பது, அல்லது Ellyptical செய்வது போன்ற aerobic பயிற்சிகளை வாரத்தில் மூன்று முறை செய்ய வேண்டும். அதிக நேரம் அமர்ந்திருக்க வேண்டி வரும்போதும் முட்டிகள் இறுகாமல் இருக்க இந்தப் பயிற்சிகள் உதவும். ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற கைதேர்ந்த உடற்பயிற்சியாளர்களுக்கும் இந்தப் பயிற்சிகள் மிகவும் அவசியம். முக்கியமாக விளையாட்டு சார்ந்த தேய்மானம் (sports injuries) இல்லாமல் இருக்க இவை உதவும்.

##Caption## அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள் தங்கள் பயிற்சி முறையை அவ்வப்போது மாற்றி அமைக்க வேண்டும். மூட்டுகளுக்கு அதிகத் தேய்மானம் ஏற்படாமல் தடுக்க வேண்டும். குறிப்பாக குனிந்து செய்யும் வேலைகளை, முழங்கால் முட்டி மடிந்து செய்வது முதுகெலும்பைக் காக்கும். தகுந்த உடற்பயிற்சி மூலம் மூட்டுகளை இணைக்கும் தசைகளையும் தசைநார்களையும் பலப்படுத்த வேண்டும். உடற்பயிற்சி அதிகம் செய்பவர்களும் மூட்டுகளில் ஏற்படும் தாக்கத்தை அவ்வப்போது மாற்றி அமைக்க வேண்டும். உதாரணத்திற்கு வேகநடை செய்பவர்கள், வேறு விதத்தில் இதயத்துடிப்பை அதிகரிக்கும் உடற்பயிற்சியுடன் மாற்றி செய்தால் முழங்கால் மூட்டு பாதிப்பைக் குறைக்கலாம். Treadmill நடையுடன் Elliptical செய்வதை மாற்றி மாற்றிச் செய்ய வேண்டும். தேவையான அளவு கேல்சியம் மற்றும் வைடமின் D உட்கொள்ள வேண்டும். இது பால், தயிர் மற்றும் பாலாடைக்கட்டி வழியாகவும், மாத்திரை மூலமாகவும் உட்கொள்ளலாம். சராசரி மனிதனுக்கு 1200 முதல் 1500 மில்லி EQ கால்சியம் தேவை. 400 முதல் 800 IU வைடமின் D தேவை. சூரிய வெளிச்சம் குறைந்து காணப்படும் குளிர் காலங்களில் உடலுக்கு வைடமின் D குறைவாகவே கிடைக்கிறது. அதனால் குளிர் பிரதேசங்களில் இருப்பவர்களிடம் இந்த நோய் அதிகமாகக் காணப்படுகிறது.

முழங்கால் மூட்டுகளுக்கு Brace மருந்துக்கடையில் கிடைக்கும். இதை அணிந்து நடப்பதும் உதவும். இதைத் தவிர Chondroitin sulfate மற்றும் Glycosamine என்று சொல்லப்படும் மாத்திரைகள் மருந்துச்சீட்டு இல்லாமலேயே கிடைக்கின்றன. இந்த வகை மாத்திரகள் மூட்டு பாதிப்பை குறைக்க வல்லது எனச் சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

தண்ணீரை விரும்புவோர் நீச்சல் குளத்தில் நின்றபடியும் இந்த உடற்பயிற்சிகளைச் செய்யலாம். நீச்சல் தெரியாத போதும் இவற்றை செய்ய முடியும். தண்ணீர் மூட்டுகளின் தேய்மானத்தைக் குறைக்க வல்லது. விவரங்களை hyalgan.com என்ற வலைதளத்தில் காணலாம்.

மரு. வரலக்ஷ்மி நிரஞ்சன்

© TamilOnline.com