அமர்நாத் யாத்திரை - தங்கப் பள்ளத்தாக்கில் கடைசி இரவு
ஆங்கில மூலம்: கரியாலி, முன்னாள் ஐ.ஏ.எஸ்.
தமிழ் வடிவம்: திருவைகாவூர் கோ.பிச்சை

சன்மார்கில் குடில்களில் தங்க அதிகம் செலவில்லை. சீக்கியருக்குச் சொந்தமான ஒரு 'தாபா'வில் இருந்து எங்களுக்குச் சாப்பாடு வந்தது. சுவையான அந்த உணவை உண்டுவிட்டுப் படுத்தோம். மறுநாள் காலைக்கடன்களை முடித்துக் குளித்த பின், நீண்ட தூரம் நடந்து ஒரு சிறிய கடைத்தெருவை அடைந்தோம். அங்கே லடாக்கி, காஷ்மீரி நகைகள், விலை உயர்ந்த கற்கள், அசல் பவளம், முத்துக்கள் எனப் பலவும் விற்பனையில் இருந்தன. நான் ஒரு நெக்லஸ், பிரேஸ்லெட், பவள மாலை, ஒரு காஷ்மீரி அட்டிகை போன்றவற்றை வாங்கினேன். நெக்லஸூம், பிரேஸ்லெட்களும் நண்பர்களுக்குப் பரிசுகளாகப் போயின. காஷ்மீரி அட்டிகை என் மகளிடம் இருக்கிறது. இப்போதும் நான் பவளமாலையை அணிவதுண்டு. அங்கிருந்த ஒரு சிறிய உணவகத்தில் மசாலா தோசையுடன் எங்கள் காலைச் சிற்றுண்டி முடிந்தது.

லே, லடாக் பகுதிகளுக்கு நீண்டு செல்லும் மலைத்தொடர்களின் அடிவாரத்தில சன்மார்க் அமைந்துள்ளது. சன்மார்க் என்ற சொல்லுக்கு 'தங்கப் பள்ளத்தாக்கு' என்பது பொருள். பள்ளத்தாக்கின் ஒரு பகுதியும், மலைகளும் ஆண்டு முழுவதும் பனியால் மூடப்பட்டிருக்கின்றன. சூரியக்கதிர்கள் பனிப்படலத்தில் விழும்போது தங்கமயமாகக் காட்சி அளிக்கின்றது. அதனால்தான் இந்தப் பெயர். லடாக் செல்லும் தரைப்பாதை சன்மார்கிலிருந்து தான் தொடங்குகிறது. ஆயினும் ஓர் ஆண்டில் ஆறு மாதங்களுக்கும் மேலாக அப்பாதை மூடியிருக்கிறது. சாலையையும் சுற்றுப்புறங்களையும் பனி சூழ்ந்து கொண்டபிறகு லடாக் மக்களுக்கும் வெளியுலகுக்கும் தொடர்பு விமானம் மூலம்தான்.

##Caption## ஸ்ரீநகர் திரும்பியதும் நான் என் அத்தை வீட்டுக்குச் சென்றேன். ஸ்ரீநகரில் நிலைமை இயல்பாக இல்லை. கடைகள் திறந்திருக்கவில்லை. எல்லோரும் வீட்டுக்குள் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். தலைமைச் செயலாளரின் கார்மீது கற்கள் வீசப்பட்டன. என் அத்தையின் பக்கத்து வீட்டுக்காரரான ஒரு முஸ்லீம் என்னை விருந்துக்கு அழைத்தார். அவர், பெரிய பள்ளிவாசலில் கூட்டம் நடந்ததையும், வெளியிலிருந்து வந்த மத அடிப்படைவாதிகள் பகை மூட்டும்படியாக ஆத்திரத்துடன் பேசியதையும் அச்சத்துடன் தெரிவித்தார். 1989 ஆகஸ்டில் நான் சென்னை திரும்பியதுமே, காஷ்மீரைப் பல அபாயங்கள் தாக்கின. முஃப்தி முகம்மது சயீதின் மகள் பயங்கரவாதிளால் கடத்தப்பட்டது தொடங்கி அநேக அப்பாவி குடிமக்கள் கொல்லப்பட்டதும், தங்கள் தாயகத்திலிருந்து காஷ்மீரி பண்டிதர்கள் வெளியேறியதும் அப்போது நடந்தது.

எனது மூதாதையர்களைப் போல பரம்பரை வழக்கப்படி பிடிவாதமாக நான் அமர்நாத் குகைக் கோவிலுக்கு சென்று வந்ததில் பெருமிதம் கொள்கிறேன். இதையே எனது பிற்கால சந்ததியினரும் செய்வார்கள் என்றே நம்புகிறேன்.

*****


மயிலை கபாலீஸ்வரர் திருக்கோவில்
சென்னை மாநகரின் ஆத்மாவாகவும், தமிழ்நாட்டின் இதயமாகவும் விளங்குவது மயிலாப்பூர். சென்னை என்ற பெயர் உண்டாவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மயிலாப்பூர் இருந்து வருகிறது. இதன் பண்டைய வடமொழிப் பெயர் 'மயூரபுரி'. இந்தத் தலத்தில் பார்வதி தேவி மயிலாக உருவெடுத்துச் சிவபெருமானை வழிபட்டு வந்ததாகத் தல புராணம்.

##Caption## அறுபத்து மூவர் திருவிழா
தமிழ்நாட்டின் பக்தி இலக்கிய வளர்ச்சிக்கு நாயன்மார்களது பங்களிப்பும் சேவையும் ஒப்பற்றது. தம் பாடல்களால் தமிழ் இலக்கியத்துக்குச் செழுமை சேர்த்ததுடன், மக்கள் மனதில் பக்தி நெறியை நிரந்தரமாக வேரூன்றச் செய்ததும் இவர்கள்தாம். இதன் காரணமாகத்தான் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் அறுபத்து மூவர் விழா மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இது பங்குனி மாதம் எட்டாம் நாள் நடைபெறுகிறது. இத்திருவிழாவில் கபாலீஸ்வரருடன் வலப்புறம் கற்பகாம்பாளும், இடதுபுறத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகனும், எல்லோருக்கும் முன் விநாயகரும், பின்னால் சண்டிகேஸ்வரரும் வர, ஊர்வலம் புறப்படுகிறது. இதற்குப் பின்னால் அறுபத்து மூன்று நாயன்மார்களும் ஒரு பல்லக்குக்கு நான்கு பேராக பதினாறு பல்லக்குகளில் பவனி வருகின்றனர். ஊர்வலம் மயிலாப்பூரின் எல்லாத் தெருக்களிலும் உலா வருகிறது.

தேர்த் திருவிழா
அறுபத்து மூவர் விழாவுக்கு முதல்நாள் தேர்த் திருவிழா நடைபெறுகிறது. சிவன் பொன்னாலான வில்லும், ரத்தினம் பதித்த தங்க அம்பும் ஏந்தி, வேடன் உருவில், அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏறி, தீமைகளை அழிக்க வீதியுலா வருகிறார். ஆயிரக்க்கணக்கில் மக்கள் திரண்டு வந்து நான்கு மாட வீதிகளையும் சுற்றித் தேரை இழுத்துக் கொண்டு 'தெய்வாம்ச வேடனை' வழிபடுகிறார்கள்.

தேர் இழுப்பதே ஒரு சிறந்த ஆன்மீக அனுபவமாகும். அது எல்லோரையும் சமமானவர்களாக்குகிறது. தேரை இழுத்துச் செல்லும் பணக்காரன், ஏழை, உயர்ந்தவன் தாழ்ந்தவன், பலவான், பலவீனன் அனைவருமே கடவுளின் சந்நிதானத்தில் சமமானவர்கள் என்பதைக் குறியீடாகக் காட்டுகிறது. சமயங்களில் திடீரென தேர் நின்று விடுகிறது. அப்பால் நகர மறுக்கிறது. தேரோட்டத்தைப் பூர்த்தி செய்து குறித்த நேரத்தில் தேரை அதன் இடத்திற்கு கொண்டு வருவது சவாலாகிறது. இது தேவி கற்பகாம்பாள் கருணையில்தான் செய்து முடிக்கப்படுகிறது.

கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்
அறுபத்து மூவர் வீதி உலாவுக்கு மறுநாள் மாலை நேரத்தில் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. திருமணம், தேவிக்குத் தாலி கட்டும் நிகழ்ச்சி உள்பட அனைத்துச் சடங்குகளும் மிகுந்த ஆசாரத்துடன் நடத்தி வைக்கப்படுகின்றன.

கடவுளின் பல உருவங்கள்
மயிலாப்பூரில் வசிப்பவர்களுக்கு, கபாலீஸ்வரர் நெருங்கிய சொந்தம் போன்றவர். அவர், அவர்களுக்கு நம்பகமான ஆலோசகர். வழிகாட்டி. பாதுகாவலர். ஆசான். நண்பன். ஏன் பலருக்குக் குழந்தையாகக் கூட இருக்கிறார். எண்பது வயது மூதாட்டி ஒருவர் மயிலாப்பூரில் தனியாக வசிக்கிறார். வசதியாக டெல்லியில் வசிக்கும் தன் குடும்பத்துடன் சேர்ந்து கொள்ள அவர் மறுக்கிறார். 'நான் இங்கிருந்து போய்விட்டால் கபாலீஸ்வரனும் கற்பகாம்பாளும் அனாதையாகிவிடுவார்கள்' என்கிறார் அவர். அவருக்குக் கடவுளும் சிறு குழந்தைதான். தமிழ்நாட்டின் ஞானகுருவான திருவள்ளுவரின் சொந்த ஊரும் மயிலாப்பூர்தான். திருக்குறள் மதச்சார்பற்ற கருத்துக்களைக் கொண்ட நூல் என்பதில் ஐயமில்லை. ஆனால் இதற்கான உள்ளுணர்வைக் கடவுள் வழங்கவில்லை என்று யாரால் சொல்ல முடியும்?

மயிலாப்பூரில் உள்ள சிவன் எங்கும் நிறைந்திருப்பவர். எல்லோரையும் ஆதரித்து அணைத்துக் கொள்பவர். அவர் எல்லோருக்கும் சொந்தமானவர் என்றால் அது மிகையில்லை.

ஆங்கில மூலம்: கரியாலி, முன்னாள் ஐ.ஏ.எஸ்.
தமிழ் வடிவம்: திருவைகாவூர் கோ.பிச்சை

© TamilOnline.com