நட்பு என்ற மலைத்தேன்
அன்புள்ள சிநேகிதியே,

சென்ற இதழில் 'நட்பை'ப் பற்றி எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தேன். அந்த வாக்கைக் காக்க வேண்டிய நோக்கில் எழுத ஆரம்பிக்கும்போதுதான் புரிகிறது நட்பின் பரிமாணம். ஒரு பக்கத்தில் முடிக்கக் கூடிய விஷயமா அது! எப்படி ஆரம்பிப்பது, எப்படி முடிப்பது என்று திணறிக் கொண்டிருக்கிறேன். 'நட்பின்' மேல் அவ்வளவு அன்பு, நட்பு எனக்கு.

'நட்பு' என்ற வார்த்தையை உதிர்த்தவுடன் பெரும்பாலோருக்குத் தங்களுடைய சிநேகிதி/ சிநேகிதர் தான் ஞாபகத்திற்கு வருவர், இல்லையா? நட்பு என்று நான் நினைக்கும் போது அதை ஒரு உறவாக நினைக்கிறேன். நண்பன்/சிநேகிதி என்பது உறவு முறை. இரத்த சம்பந்தம்/திருமண சம்பந்தத்தால் ஏற்பட்ட உறவுகளை நாம் நட்பு என்ற உறவில் சேர்ப்பதில்லை.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



இது ஒரு அருமை, அருமையான உறவு. இந்த உறவை அஸ்திவாரமாக ஏற்படுத்தினால்தான் உறவு முறைகளில் பலம் இருக்கும், பாசம் இருக்கும், பங்கேற்பு இருக்கும், பரிசுத்தம் இருக்கும். உறவுமுறைகளை நாம் விவரிக்கும்போது, அதில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைச் சற்று புரிந்து கொள்கிறோம். அம்மா, அப்பா என்று சொன்னால் கண்டிப்பாக வயது, இனம், அதிகாரம், பொறுப்பு, குணம், உருவ அமைப்பு என்று நமக்குள் Stereo Type செய்து கொள்கிறோம். தங்கை, தம்பி, சித்தி, மாமா, பையன், பெண், Boss, ஆசிரியர் என்று சொன்னவுடனேயே நமக்குச் சில விஷயங்களை உடனே கிரகித்து உள்மனது வாங்கிக் கொள்கிறது. ஆனால் சிநேகிதன், சிநேகிதி (அதுவும் ஆங்கிலத்தில் Friend என்றால் இன்னும் கஷ்டம்) என்றால் 1. குடும்ப உறவுகளில் சேர்க்கப்பட்டவர் இல்லை. 2. இவருடைய குண இயல்புகளுக்கும், பழக்க வழக்கங்களுக்கு ஒத்தவராக இருப்பவர் என்றுதான் நம் மனம் சிந்திக்கிறது.

##Caption## ஓர் உரையாடலில் நண்பர்/சிநேகிதி என்று சொல்லும்போது அந்த நட்பின் ஆழம் நமக்குத் தெரிவதில்லை. புரிவதும் இல்லை. காரணம், நிறைய சந்தர்ப்பங்களில் நாம் நட்பென்று எண்ணிக் கொள்வது, அதை உபயோகப்படுத்திக் கொள்ளத்தான். நமக்கு எதிலாவது ஆர்வம் இருந்தால் அந்த ஆர்வத்துக்கு மற்றவர் துணை போவாரா என்று தெரிந்து நண்பர்களை உண்டாக்கிக் கொள்கிறோம்; தேடிப் பிடிக்கிறோம். அங்கே நட்பை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம். அதில் தவறு இல்லை. எல்லா உறவுமுறைகளையும் எதற்கோ எல்லோரும் பயன்படுத்திக் கொள்கிறோம். அது இயற்கை. இதுபோன்ற ஒரு நட்பில் ஒரு பிரச்சனை என்னவென்றால், நம் தேவை பூர்த்தியடைந்தவுடன், அந்த நட்பு விலகிப் போய்விடுகிறது. எந்த நட்பில் முறிவு ஏற்பட்டாலும் 'நாம்தான் பாதிக்கப்பட்டவர்' என்ற எண்ணம்தான் எல்லோரிடமும் இருக்கும். அதனால், மனதில் ஒரு கசப்பு ஏற்படும். காரணம், அந்த நட்பில் ஒரு இலக்குக்காகப் பயன்படுத்தப்படும் நோக்கம்தான் மேலோங்கி இருக்கும்.

நான் உருவகித்துக் கொள்ளும் நட்பில் நட்புதான் இருக்கும். இங்கே இனம், வயது, தேசம், சமூகநிலை, கல்வி நிலை எதுவுமே எவ்வளவு வித்தியாசப்பட்டாலும் நட்பு என்ற உறவில் சமநிலைப்படுத்தப்படும். அந்த நட்பில் ஒளிவு, மறைவு இருக்காது. பக்குவமாகப் பொய் சொல்லத் தேவையில்லை. எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்காது. பாசாங்கு இருக்காது. அந்த உறவில் பாதுகாப்பு இருக்கும். இன்பம் இருக்கும். அந்த உறவுக்குச் சொந்தமானவர் பள்ளித் தோழனாக இருக்கலாம்; கொள்ளுத் தாத்தாவாக இருக்கலாம்; வண்டி ஓட்டுபவராக இருக்கலாம்; கல்வி மேலாளராக இருக்கலாம். யார் வேண்டுமானாலும். அங்கே தெரிவதெல்லாம் மனிதநேயம், ஆத்மார்த்தம், பாதுகாப்பு உணர்ச்சி. இப்படி இருப்பதுதான் நட்பு என்ற உறவு. எல்லா உறவு முறைகளிலும் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை சமநிலைப் படுத்தக்கூடிய சக்தி இந்த உறவுக்குத்தான் உண்டு. இந்தச் சமநிலை நோக்கு இருந்தால்தான் உறவு நிலைகளை நம் மனம் அனுபவித்து, ரசித்து, ஆனந்தித்து குதூகலிக்கிறது. கணவன், மனைவி உறவு பரிமளிக்கிறது. தந்தை-மகன், மகள், தாய், சகோதரர் எந்த உறவுக்கும் பூரணத்துவம் கொடுப்பதுதான் இந்த நட்பு என்னும் உறவு.

ஆயிரக்கணக்கான நண்பர்களை நம் வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்கிறோம். ஆனால் ஐந்து உண்மையான நண்பர்களை (அவர்கள் உலகத்தில் எந்த மூலையிலும் இருக்கலாம். சொந்த உறவாகவும் இருக்கலாம். பந்தம் அற்றும் இருக்கலாம்) நாம் அடையாளம் கண்டு கொண்டால் போதும். நம் மனதிற்கு வலிமை கொடுப்பவர்கள் அவர்கள். நம் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பார்கள் அவர்கள், எதிர்பார்ப்புகள் இல்லாமலே நம் பிரச்சனைகளை தீர்த்துக் கொடுப்பவர்கள் அவர்கள்.

அந்த வகையில் நான் பாக்கியசாலி. என் சிநேகிதங்கள் அத்தனையும் அருமை. ஏமாற்றங்கள்—ஹூம். அவ்வளவாக இல்லை. மலைத்தேனைப் போல, கலப்படம் இல்லாத அந்த நட்பை ருசித்தவர்களுக்குத்தான் புரியும்.

##Caption## இந்தப் பகுதியைப் படிக்கும் பல வாசகர்களும் தங்களுடைய நட்பு வட்டத்தை ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். யாரந்த ஐந்து பேர் என்று. எல்லோருக்கும் நண்பர்கள் உண்டு. அதுவும் பள்ளிக்கால, கல்லூரிக் கால நட்பில் இருந்த ஆழம், ஆத்மார்த்தம், அழுத்தம், ஆனந்தம்—வேலை, குடும்பம் என்று வந்த பிறகு குறைந்துதான் போகிறது.

இந்தப் பகுதியைப் படித்து யாருக்காவது தாங்கள் அனுபவிக்கும் நட்பை/சிநேகிதங்கள் (பெயர் வேண்டாம்) பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டால், தென்றலுக்கு எழுதுங்கள். Then it becomes the Editor's Choice to cover it or not.

இன்னும் எவ்வளவோ பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. I have to draw a line some where.

எத்தனை பிரச்சினைகளை சந்தித்தாலும், வாழ்க்கையை ரசிக்கும்படியாக ஒரு மனநிலையை எனக்குக் கொடுத்த அந்த நண்பர் சமூகத்துக்கு தலை வணங்கி, நன்றி கூறுகிறேன். I am getting emotional.

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்

(நட்பு என்கிற அந்த உறவுக்கு இந்தப் பகுதியை அர்ப்பணிக்கிறேன்)

© TamilOnline.com