அவர் திருச்சியில் சரவணனாகத் தான் பிறந்தார். ஒரே பிள்ளை. தன் கனவை நிறைவேற்ற வந்த பிள்ளை என்பதால், நூற்றுக்கு ஒரு மார்க் குறைந்தால் பெல்ட்டால் ரத்த விளாறாக விளாசிவிடும் அப்பா. பாசமான அம்மா, சகோதரிகள். ஆனால், ஆணுடலில் சிக்கித் தவிக்கும் பெண்ணாகவே தன்னை உணர்ந்த சரவணனுக்கோ வாழ்க்கையே போராட்டம். தலைவலி, காய்ச்சல் என்றால் வெளியே சொல்லலாம். "நான் உடலால் ஆண், மனதால் பெண்" என்று எப்படிச் சொல்வது! யார் ஏற்பார்கள். பருவம் வரும்வரை காத்திருந்த சரவணன், மனதுக்கேற்ப உடலை மாற்றியமைத்துக்கொள்ளத் தீர்மானித்து வீட்டை விட்டு வெளியேறினார். சீண்டல், கேலி, பிச்சையெடுத்துப் பிழைக்க வேண்டிய நிர்பந்தம். இவற்றுக்கெல்லாம் இடையே மொழியியலில் முதுகலையும் படித்தார். வங்கி வேலை பார்த்தார். நாடகங்களில் நடித்தார். சினிமாத் துறையை ஆழம் பார்த்தார். வலைப்பதிவு எழுதினார். லிவிங் ஸ்மைல் வித்யா என்ற புதிய அவதாரத்தில் 'நான், வித்யா' என்ற நூலை எழுதினார்.
போராட்டம், வறுமை, வலி, ஏளனம் இவற்றில் வாழப் பழகிய இவர் தன்னை 'வாழும் புன்னகை'யாக அறிவித்துக்கொண்டது மனிதனின் உயரப் பறக்கும் உள்ளார்ந்த ஊக்கத்துக்கு ஓர் உயர்ந்த உதாரணம். மனிதன் என்று இங்கே கூறியது ஆண் என்ற பொருளில் அல்ல, மானுடத்தின் அடையாளமாக. ஆணல்ல, பெண்ணல்ல என்றாலும் தன்னை மானுடத்தின் அங்கமாக அழுந்தப் பதிவு செய்துகொள்வதில், திருநங்கைகளின் துயரம் மிகுந்த வாழ்க்கையை மனித அவலமாகச் சக மனிதர்களுக்குக் காட்டுவதில், ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார் லிவிங் ஸ்மைல் வித்யா. அவரைப் பேட்டி காண்பதில் தென்றல் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ஒருசேரக் கொள்கிறது. இனி நீங்களே கேளுங்கள் அவர் சொல்வதை.....
*****
கே: சரவணன், லிவிங்ஸ்மைல் வித்யா ஆனது எப்படி?
ப: திருச்சி எனது சொந்த ஊர். நான் ஆணாகப் பிறந்து ஆணாக வளர்ந்தேன். ஆறு, ஏழு வயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்குரிய நளினமும், மென்மையும் என்னிடம் இருந்தது. நான் வளர, வளர இந்த மாதிரிப் புடவை உடுத்திக் கொள்ள வேண்டும்; இந்த மாதிரி அழகுபடுத்திக் கொள்ள வேண்டும்; இந்த நடிகைகளைப் போலப் பேச வேண்டும் என்றெல்லாம் நினைக்க ஆரம்பித்தேன். பொதுவாக ஓர் ஆணுக்கு ரோல்மாடலாக அப்பா, சகோதரர் இப்படி யாரேனும் இருப்பார்கள். ஆனால் எனக்கு ரோல் மாடல் என் அம்மா, அக்கா ஆகியோர்தான். ஓர் ஆணான போதும் உள்ளத்தளவில் பெண்ணாகவே உணர்ந்தேன்.
ஒருவேளை நமக்கு ஏதேனும் மனநோய் இருக்குமோ என்றுகூட ஆரம்பத்தில் நினைத்தேன். நான் பருவ வயதை எட்டியதும் என்னுடைய பழக்க வழக்கங்கள் மற்றவர்களது கேலிக்கு ஆளானது. சிறுவயதிலிருந்தே தந்தையால் மிகவும் கண்டிப்போடு, அடித்து, உதைத்து, மிரட்டி வளர்க்கப்பட்டிருந்ததாலும், சமூகத்தின் கேலிப் பேச்சுக்களாலும் நான் ஒதுங்கிப் போனேன். படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் தனித்தே இருக்க ஆரம்பித்தேன்.
நான் கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தபோது நண்பர் ஒருவர் மூலம் ஒரு தொண்டு நிறுவனத்தின் முகவரி கிடைத்தது. அங்கு சென்று சிலரைச் சந்தித்தேன். அதுவரை நான் யார் என்ற குழப்பத்தில் இருந்தவள், அங்கே 'நான் ஒரு திருநங்கை' என்று அறிந்தவுடன் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். இதுபற்றித் தெரிந்தால் நம் குடும்பத்தினரின் நிலை என்னவாகும், உறவினர்கள், நண்பர்களெல்லாம் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று கேள்விகள் எழுந்தது. தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட நினைத்தேன். அப்போதுதான் நர்த்தகி நடராஜ், ப்ரியா பாபு போன்றோரைப் பற்றி பத்திரிகைகள் மூலம் அறிந்தேன். திருநங்கைகளான அவர்களால் வாழ முடிந்தது போல் நம்மாலும் வாழ முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. படிப்பு முடியும் வரை காத்திருந்து, முடித்தவுடன் வீட்டை விட்டு வெளியேறினேன்.
திருச்சியில் வசிக்கும் நேரு என்ற நண்பர் மூலம் சென்னையில் வசிக்கும் "அருணா" என்ற திருநங்கையின் அறிமுகம் கிடைத்தது. அருணாவிடம் என் கதையைக் கூறினேன். இனியும் இந்த இரட்டை வாழ்க்கையை என்னால் வாழ முடியாது. பெண்ணாக வாழ வேண்டும் என்பதுதான் என் லட்சியம் என்று சொன்னேன். அதற்கு அவர், அந்த வாழ்க்கை முறையை நீ தேர்ந்தெடுத்துக் கொண்டால், பிச்சை எடுத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டி வரும் என்றார். பரவாயில்லை. "ஆனால் என்னால் இந்த ஊரில் பிச்சை எடுக்க முடியாது. அதனால் புனே, பம்பாய் என்று எங்காவது அனுப்பி வையுங்கள்" என்று கேட்டுக் கொண்டேன். புனேவிற்குப் போனேன். அங்கு 5, 6 மாதங்கள் இருந்தேன் சக திருநங்கைகளுடன் சேர்ந்து பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தினேன். அதில் வந்த பணத்தைக் கொண்டு எனக்கு அறுவை சிகிச்சை நடந்தது. உடல் சரியானவுடன் மீண்டும் புனேவில் வாழ்க்கை தொடர்ந்தது. சில மாதங்களில் நான் சென்னைக்கு வந்து விட்டேன். முதன்முதலில் புனேவுக்குச் செல்லும் போது 'சரவணன்' என்ற ஆண் 'அடையாள'த்துடன் சென்ற நான், திரும்பிச் சென்னைக்கு வரும்போது வித்யாவாக வந்தேன்.
கே: 'சரவணன்', ஒரு 'திருநங்கை' என்பதை குடும்பத்தினர் எப்படி எதிர்கொண்டார்கள்?
ப: எனது வீட்டிற்கு இந்த விஷயம் கடைசி வரை தெரிந்துவிடக் கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். வீட்டை விட்டு சென்னைக்கு வரும்போது கூட வேலை விஷயமாகச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். எப்படியாவது பிஎச்.டி. முடித்து விட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது.
சென்னைக்கு வந்தபின் ஒரு பத்திரிகையில் திருநங்கை 'ஆஷா பாரதி'யின் பேட்டி வெளியாகியிருந்தது. எனது பேராசிரியர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறைத் தலைவர் மு. ராமசாமி நேர்காணல் செய்திருந்தார். அதைப் படித்ததும் பேராசிரியரிடம் என்னைப் பற்றிய உண்மையைச் சொல்லிவிடலாம் என்று தோன்றியது. ஏனென்றால் என்னிடம் மிகவும் அன்பும், அக்கறையும் காட்டியவர் அவர். அதுவரை நான் 'திருநங்கை' என்ற விஷயம் அவர் உட்பட, உடன் படித்த மாணவர்கள் யாருக்குமே தெரியாது. போனில் நான் விஷயத்தைச் சொன்னதும் அவருக்கு அதிர்ச்சியாகி விட்டது. வருத்தப்பட்டார். இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறிவிட்டு நான் போனை வைத்து விட்டேன். பின்னர் நான் புனேவுக்குச் சென்று விட்டேன்.
##Caption## என்னிடமிருந்து தகவல் ஏதும் இல்லாததால் என் அக்கா மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார். எப்படியோ அவருக்கு என்னைப்பற்றிய விஷயம் தெரிந்து விட்டது. என்னை சென்னைக்குக் கூட்டி வந்த திருச்சி நண்பர் நேருவிடம் நான் ஒருமுறை புனேவில் இருந்து பேசியபோது அவரும், உனது வீட்டாருக்கு விஷயம் தெரிந்து விட்டது. உன்னைப் பார்க்க வேண்டுமென்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னார். எனவே ஒரு பொது இடத்தில் எல்லோரும் சந்திக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. நான் புனேவிலிருந்து சென்னை வந்தேன். என்னை புனேவுக்கு அனுப்பி வைத்த அருணா பணியாற்றிய தொண்டு நிறுவனத்திலேயே சந்தித்தோம். எனது அக்கா, அக்கா கணவர், அப்பா என்று எல்லோரும் வந்திருந்தனர். அக்கா என் நிலையை உணர்ந்து கொண்டார். அப்பாவால் ஏற்கமுடியவில்லை. ஒரே 'மகனான' என்னிடம் அவரது எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போனதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் பின்னர் புனேவுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டேன். அதன் பிறகுதான் ஆபரேஷன், சென்னைக்கே திரும்பி வந்து சேர்ந்தது எல்லாம் நடந்தது.
இன்றுவரைக்கும் இந்த விஷயத்தில் எனது தந்தைக்குச் சமாதானம் ஏற்படவில்லை. நீ ஊருக்கே வந்து விடு. இப்போது இருப்பது போலவே நமது வீட்டில் இருக்கலாம் என்று சொல்வார். ஆனால் நான் அதை மறுத்து விடுவேன்.
கே: பெரும்பாலான திருநங்கையர் மொழி புரியாத வட இந்திய நகரங்களுக்கு வாழ்க்கை நடத்தச் செல்வதன் காரணம் என்ன?
ப: நிறையச் சமூக மற்றும் உளவியல் காரணங்கள் உள்ளன. முதற்காரணம் இங்கே நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று பலர் முன்னால் அவமானப்படுவதை விடக் கண்காணாமல் எங்காவது சென்று நிம்மதியாக இருக்கலாம் என்பது. இரண்டாவது திருநங்கைகளின் வாழ்வாதாரம். இங்கிருப்பதை விடத் திருநங்கைகளுக்கு வட இந்தியாவில் ஓரளவாவது அங்கீகாரம் உள்ளது. பிச்சை எடுத்து வாழ வேண்டிய நிலையில் உள்ள அவர்களுக்கு ஒருவித நம்பிக்கையை அங்குள்ள சூழல் அளிக்கிறது. அங்கே திருநங்கைகள் வசிப்பதற்கு என்று தனி குடியிருப்புகள் உள்ளன. இங்கே இருப்பதைவிட நிம்மதியாகப் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அங்கே உள்ளன.
கே: உங்கள் புனே வாழ்க்கை குறித்துச் சொல்லுங்கள்....
ப: முற்றிலும் புதிய நகரம். புதிய அனுபவம். இருபது வயது வரை நான் அதிகம் வெளி உலகம் பார்க்காமல், பயம், கட்டுப்பாடோடு வளர்ந்தவள். ஆனால் புனேவின் புதிய சூழ்நிலைக்குப் பழகிக் கொண்டேன். சக திருநங்கைகளுடன் ஊர் சுற்றுவது, அரட்டை அடிப்பது என்று பொழுது கழிந்தது. டிரெயினில் பிச்சை எடுத்ததை என்னால் மறக்க முடியாது. பல இன, மத, மொழி பேசும் பலதரப்பட்ட மக்களை நான் அங்கு சந்தித்தேன். பிச்சை எடுக்காமல் கௌரவமாக வாழ சுயதொழில் கூட (டிரெயினில் பொருட்கள் விற்பனை) செய்தேன். ஆனால் பயனில்லை. என்னிடம் யாருமே பொருட்கள் வாங்கவில்லை. நஷ்டம்தான் வந்தது. அதனால் மீண்டும் பிச்சைக்கே திரும்பினேன். கட்டுப்பாட்டோடு வளர்ந்த எனக்கு எந்தப் பொறுப்புகளுமற்ற சுதந்திரமான புனே வாழ்க்கை ஒருவிதத்தில் பிடித்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது நான் கண்ணியமாக, கட்டுப்பாட்டோடு வாழ்ந்தாலும் கூட புனே வாழ்க்கை அனுபவம், ப்ரியா போன்ற நண்பர்களை என்னால் என்றுமே மறக்க இயலாது.
கே: பொதுவாக திருநங்கைகள் மீது காணப்படும் ஒருவித வெறுப்புணர்விற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், இது மாறுவதற்கு என்ன வழி?
ப: புரிதல் இல்லை என்பதுதான். திருநங்கைகளுக்கும் புரிதல் இல்லை. சமூகத்திற்கும் புரிதல் இல்லை. சமூகத்திற்கு ஆண்பால், பெண்பால் போல திருநங்கைகளும் இடைப்பட்ட பாலினத்தினர்தான் என்ற அறிவியல் பூர்வமான விளக்கங்கள் சரியாகச் சென்று சேரவில்லை. கல்வி முறைகளின் மூலம் அவை சரியாக அறிவுறுத்தப்படவில்லை. மேலும் திருநங்கைகளைப் பற்றிய தவறான, ஆபாசமான சித்திரிப்புகளையே சினிமா போன்ற வெகு ஜன ஊடகங்கள் முன் வைக்கின்றன. அதைப் பார்த்துவிட்டுத் திருநங்கைகள் இப்படித்தான் இருப்பார்கள் என்ற தவறான எண்ணத்தைச் சமூகம் வளர்த்துக் கொள்கிறது. இதுதான் முக்கியக் காரணம். இரண்டாவது பெண்களைப் போல திருநங்கைகள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டாலும், அவர்களது குரல், முரட்டுத்தனமான முகம், நளினமின்மை காரணமாக அவர்களது தோற்றத்தைப் பார்க்கும் போது சிலருக்கு ஒருவித அச்சவுணர்வு அல்லது வெறுப்புணர்வு உண்டாகலாம்.
திருநங்கைகளும் இந்தச் சமூகம் தன்னைப் புறக்கணிக்கிறதே என்ற கோபத்தில் மிகவும் முரட்டுத்தனமாகவும், எரிச்சலூட்டும் விதத்திலும் நடந்து கொள்கிறார்கள். சொல்லப்போனால் திருநங்கைகள் அவ்வாறு முரட்டுத்தனமாக இருப்பதினால்தான் அவர்களால் வாழ்க்கை நடத்தவே இயலுகிறது. ஏனென்றால் திருநங்கைகள் எங்காவது வெளியே சென்றால், சாதாரணச் சிறுவர்கள் கூட அவர்களைக் கிண்டல், கேலி செய்கின்றனர். அப்படியிருக்க பொறுக்கிகள், சமூக விரோதிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அவர்களால் திருநங்கைகளுக்குப் பலவிதமான தொல்லைகள். அந்தத் தொல்லைகளிலிருந்து தப்பிக்கவும், தற்காத்துக் கொள்ளவும் திருநங்கைகள் மோசமாகப் பேசுகின்றனர். முரட்டுத்தனமாக நடந்து கொள்கின்றனர். திருநங்கைகள் அவ்வாறு பேசுவதும், நடப்பதும்தான் சமூகத்திற்குக் கண்ணில் படுகிறதே தவிர, அப்படிப் பேச வைத்தவர்களைப் பற்றி அது அக்கறை கொள்வதில்லை. திருநங்கைகளும் மற்ற சக மானிடர்களைப் போன்றவர்கள்தான் என்பது எப்போது கல்விமுறைகளின் மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் சமூகத்திற்குத் தெரிய வருகிறதோ, அப்போதுதான் இந்த நிலைமை மாறும்.
கே: கோவையில் திருநங்கைகள் ஒன்றிணைந்து இட்லிக் கடை நடத்தி வருவதாகச் செய்தி படித்தோம். அப்படியால்லாமல் திருநங்கைகள் பிச்சை எடுப்பதும் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும் சரிதானா?
ப: பிச்சை எடுத்தல் மற்றும் பாலியல் தொழில் சரியா, தவறா என்று கேட்டால் அதைச் சொல்லும் இடத்தில் நான் இல்லை. பிச்சை எடுத்தலில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், வேறு வழியில்லாமல் உயிர் பிழைக்கத்தான் திருநங்கைகள் பிச்சை எடுக்கின்றனர். அல்லது சமூகத்தால் அதைச் செய்யத் தள்ளப்படுகின்றனர் என்பேன். அவர்களுக்கு வேலை தர இந்தச் சமூகத்தில் எத்தனை பேர் தயாராக இருக்கின்றனர்? ஒரு சில திருநங்கைகள் வேண்டுமானால் பூத் தொடுப்பது, ஏதேனும் பொருள் விற்பனை செய்வது என்று சுயதொழில் செய்யலாம். மற்றவர்கள் பிழைக்கவும், வாழ்க்கை நடத்தவும் என்ன வழி? அதனால் தான் சரியோ, தவறோ அவர்களில் பலரும் பிச்சை எடுக்கின்றனர். அதுபோல பிச்சை எடுப்பதைவிடப் பாலியல் தொழிலில்அதிக வருமானம் கிடைக்கிறது என்பதால் சிலர் அதில் ஈடுபடுகின்றனர். இது அவரவர் தேர்வுதான்.
ஆனால், எல்லாத் திருநங்கைகளும் வீட்டை விட்டு வெளியே வந்தவுடனேயே பிச்சை எடுப்பதில்லை. பாலியல் தொழில் செய்வதில்லை. பல தொழில்களை முயன்று பார்த்துவிட்டு, ஒவ்வோரிடத்திலும் சக மனிதரின் புறக்கணிப்பையும், அவமானப்படுத்தலையும், பாலியல் வன்முறைகளையும் கண்டு வெறுத்துப் போய் வேறு வழியில்லாமல்தான் இதற்கு வருகின்றனர். ஒருவித வெறுப்புணர்வுடன், விரக்தியுடன் தான் இவற்றில் ஈடுபடுகின்றனர். காந்தியை விட கோட்ஸேக்கள் அதிகம் இருக்கும் தேசம் இது என்பதை நாம் மறுக்க முடியுமா?
என்னை எடுத்துக் கொண்டால் நான் புத்தகம், வாசிப்பு, எழுத்து, நாடகம் என்று பலவிதங்களில் என்னைத் தயார் செய்து கொண்டிருந்தேன். அதனால் நான் பிச்சை, பாலியல் தொழில் எல்லாம் வேண்டாம், நமது கல்வியறிவை வைத்து முன்னேறலாம் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த வாய்ப்புகள் எல்லாத் திருநங்கைகளுக்கும் கிட்டுவதில்லையே! சமூகப் புறக்கணிப்பால்தான் திருநங்கைகள் இப்படி இருக்கின்றனர்.
கே: அரசு சாரா அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் திருநங்கைகளுக்கு எவ்வளவு உதவுகின்றன?
##Caption## ப: என்.ஜி.ஓ.க்களால் கிடைத்த ஒரே நன்மை என்னவென்றால் திருநங்கைகள் அதிகம் வெளியுலகில் பேசப்பட்டார்கள் என்பதுதான். பிறரது கவனம் திருநங்கைகள் மீது திரும்ப என்.ஜி.ஓ.க்கள் ஒரு காரணமாக இருந்தன. அவ்வளவுதான். எய்ட்ஸைத் தவிர்ப்பது குறித்தும், பாதுகாப்பான உறவுமுறைகள் குறித்தும் திருநங்கைகளுக்கு போதிப்பதைத் தவிர திருநங்கைகளது வாழ்வாதாரத்திற்கு, வாழ்க்கை உயர்விற்கு அவற்றால் எந்தப் பயனும் இல்லை. ஒருவர் புகலிடம் வேண்டி ஒரு தொண்டு அமைப்பை நாடி வந்தால், அவர் தகுதி என்ன, திறமை என்ன, எதில் எதில் அவர் ஆர்வமாக இருக்கிறார், எந்தத் துறையில் ஈடுபட்டால் அவர் வாழ்க்கை உயர்வு பெறும் என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்து அவருக்கு ஆலோசனை கூறி வழிநடத்துவதுதான், மறுவாழ்வு கொடுப்பதுதான் தொண்டு நிறுவனங்களின் பணி. ஆனால் திருநங்கைகளுக்கான தொண்டு நிறுவனங்கள் அப்படிச் செயல்படுவதில்லை. அவற்றின் மூலம் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு திருநங்கைகளுக்கு ஏற்பட்டிருப்பது உண்மை.
திருநங்கைகளை மையமாக வைத்து, துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி என்.ஜி.ஓக்கள் சம்பாதிக்கின்றனர் என்பதுதான் உண்மை. ஆனால் இதைப்பற்றியெல்லாம் பெரும்பாலான திருநங்கைகள் கவலைப்படுவதில்லை. படித்த, என்னைப் போன்ற திருநங்கைகளை என்.ஜி.ஓக்கள் தங்களது நிறுவனங்களில் பணிக்கமர்த்திக் கொள்வதில்லை. திருநங்கைகள் நலனுக்காகச் செயல்படுகிறோம் என்று கூறிக் கொள்பவர்கள் திறமை, தகுதியுள்ள திருநங்கைகளுக்கு தங்கள் அமைப்புகளில் வேலை வாய்ப்பளிக்கலாமே! ஏன் மறுக்கின்றனர்? ஏனென்றால் அவர்கள் திருநங்கைகளைப் பயன்படுத்தி எவ்வளவு சம்பாதிக்கின்றனர் என்ற விஷயம் வெளியில் தெரிந்து விடும் என்பதால்தான். களப்பணி, எண்ணிக்கை கணக்கெடுப்பது போன்று ஆள் பிடிக்கும் வேலையைத்தான் அவர்கள் திருநங்கைகளுக்குக் கொடுப்பார்களே தவிர, நிர்வாக வேலை எதுவும் தர மாட்டார்கள். என்.ஜி.ஓ.க்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளாதவரை அவர்களால் திருநங்கைகளின் வாழ்க்கை உயர்வுக்கு எந்தப் பயனும் ஏற்படாது.
கே: நீங்கள் திரைத்துறையில் பணியாற்றி இருக்கிறீர்கள். அந்த அனுபவம் குறித்து...
ப: எனக்கு நாடகம் போன்ற காட்சி ஊடகங்களில் அதிக ஆர்வமுண்டு. எனது 'நான் வித்யா' புத்தகம் வெளியான சமயத்தில், அதைப் படித்து விட்டு இயக்குநர் ஒருவர் என்னை அழைத்து தனது படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்தார். ஆனால் அந்தப் படம் பாதியிலேயே நின்று விட்டது. இயக்குநர் மிஷ்கின் தனது 'சித்திரம் பேசுதடி' படத்தில் திருநங்கைகளைப் பற்றி நல்லவிதமாகச் சித்திரித்திருந்தார். எனது வலைப்பூவைப் படித்த தோழி ஈஸ்வரி மூலம் அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு நன்றி தெரிவிக்கலாம் என்றுதான் அவரைச் சந்திக்கப் போனேன். ஆனால் அவரது அறிவுத்திறனைக் கண்டு வியந்து, அவரிடம் உதவி இயக்குராகப் பணியாற்ற வாய்ப்புக் கேட்டேன். அவரும் சரி என்றார். அப்படித்தான் நான் உதவி இயக்குநர் ஆனேன். அங்கு என்னிடம் யாரும் எந்த வித்தியாசமும் காட்டவில்லை. மேலும், எல்லோரும், எல்லாமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதிலும் மிஷ்கின் மிகுந்த ஆர்வமாக இருந்தார். அவரிடம் நான் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். நடுவில் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாலும், சிலருக்கு அங்கே எனது இருப்பு பிடிக்கவில்லை என்பது பின்னர் தெரிய வந்ததாலும் தொடர்ந்து நான் அங்கே போகவில்லை.
இயக்குநராகிப் பெரிய சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக நான் திரைத்துறைக்கு வரவில்லை. அழகியலோடும், கதையம்சத்தோடும் கூடிய நல்ல குறும்படங்களை இயக்க வேண்டும் என்பதற்காகத் தான் இத்துறைக்கு வந்தேன். ஓரளவுக்கு இத்துறை பற்றிக் கற்றுக் கொண்டேன். ஆனால் எதையும் சாதிப்பது என் நோக்கமல்ல; வாழ்வதுதான் என் நோக்கம். நான் நானாக வாழ முயற்சிக்கிறேன். சாதிக்க முடிந்தால் சாதிக்கிறேன். அவ்வளவுதான்.
கே: நீங்கள் இட ஒதுக்கீடு கேட்கக் காரணம் என்ன?
ப: முதலில் உளவியல் சிக்கல்கள். பின்னர் பள்ளி, கல்லூரிகளில் சக மாணவர்கள், ஆசிரியர்களின் கேலிக்கு ஆளாகிறோம். பெற்றோர்களிடமோ மற்றவர்களிடமோ எதையும் கூற இயலாத சூழ்நிலை. இதனால் படிப்பில் கவனம் குறைந்து, அதிக மதிப்பெண் எடுக்க முடிவதில்லை. எப்படியோ படித்து முடித்து வேலைக்கு முயற்சித்தாலும் நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம். அப்படியே வேலை கிடைத்தாலும் சக ஊழியர்களின் கிண்டல் பேச்சுக்கள், அவமானங்கள், பாலியல் சீண்டல்கள். இப்படி சமூகத்தில் பல சிக்கல்களை அனுபவிக்கிறோம். அதனால்தான் இட ஒதுக்கீடு கேட்கிறோம். வேலை வாய்ப்பும் வேண்டும். நாங்களும் மாற்றுத் திறனுடையோர் என்று கூறப்படும் உடல் ஊனமுற்றவர்களைப் போல ஏதோ ஒருவித உடற்குறை உள்ளவர்கள்தான். எங்களுக்கும் அவர்களுக்கு வழங்குவது போன்ற உரிமைகளைக் கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். ஒருவேளை இட ஒதுக்கீடு வழங்க முடியாவிட்டாலும் உள் ஒதுக்கீடாவது வழங்க வேண்டும். இதை அரசு ஆலோசித்து சட்டப்பூர்வமாகச் செய்ய வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் திருநங்கைகள் பற்றிய கணக்கெடுப்பு என்பது வெறும் கணக்கோடு மட்டும் நின்றுவிடாமல், அவர்களது எண்ணிக்கைக்கேற்பச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். என்னைப் போன்ற படித்த திருநங்கைகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும். திருநங்கைகள் மற்றவர்களுக்கு கேலிப் பொருளாக இருந்தாலும், அவர்கள் தங்களது திறமையை, ஆற்றலை நிரூபிக்க ஒரு வாய்ப்பு தரப்பட வேண்டும். திருநங்கைகள் விரும்பினால தங்கள் குடும்பத்துடன் வாழ்வதற்கான சட்டப் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். சக மனிதர்களின் கிண்டல், கேலிகளால் திருநங்கையோ, அவர்களது குடும்பமோ பாதிக்கப்படும் போது, எப்படி ஈவ் டீஸிங் சட்டம் பெண்களைப் பாதுகாக்க இருக்கிறதோ அதுபோன்று திருநங்கைகளுக்கும் தேவையான சட்டப்பாதுகாப்பு செய்யப்பட வேண்டும். திருநங்கைகளும் சக மனிதர்கள். அவர்களை நாம் கேலி, கிண்டல் செய்யக் கூடாது. சக உயிர்களாக மதிக்க வேண்டும் என்று காட்சி ஊடகங்களில், நாளிதழ்களில் பொது விளம்பரங்கள் மூலம் வெளியிடப்பட வேண்டும். திரைப்படங்களில் திருநங்கைகளைக் கேலியாகச் சித்திரித்தால் அந்தப் படத்திற்கு தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்கக் கூடாது. அந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும். இவையெல்லாம் சக திருநங்கைகள் சார்பாக அரசுக்கு எனது வேண்டுகோள்கள்.
கே: இப்போது என்ன செய்கிறீர்கள்?
ப: நான் முதுகலை படிக்கும்போதே அண்ணன் முருகபூபதி, பேராசிரியர் மு. ராமசாமி ஆகியோரது நாடகங்களில் நடித்திருக்கிறேன். இலக்கிய வாசிப்பும், நடிப்பும் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். நடிப்பில் என்னை நானே வேறொரு ஆளாகக் காண்பது மகிழ்ச்சியைத் தந்தது என்பதை விட ஒருவிதமான கிளர்ச்சியைத் தந்தது என்றுதான் சொல்ல வேண்டும். நான் பார்த்த மதுரை வங்கி வேலையைக்கூட எனக்கிருந்த கலையார்வத்தின் காரணமாகத்தான் விட்டேன். அப்போது பாலியல் சிறுபான்மையினர் திரைப்பட விழாவில் பங்கு கொண்டிருக்கிறேன். ஒரே நாளில் நான்கு படங்கள் திரையிட்டிருக்கிறோம். அதுபோக மதுரையில் இருக்கும்போது கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் திருநங்கைகள் பற்றிய குறும்படத்தைத் திரையிட்டு, அதை முன்னிறுத்திச் சில கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன். ஆனால் சென்னைக்கு வந்து எதுவும் செய்ய இயலவில்லை. சென்னையில் சுயம் என்ற என்.ஜி.ஓ. அமைப்பில் பார்த்த வேலையைக் கூட கலை ஆர்வத்தினால்தான் துறந்தேன். ஒருநாடகத்தில் நடிக்கும்போது கிடைக்கும் பெருமையும், மகிழ்ச்சியும் சினிமாவில் உதவி இயக்குநராகப் பணியாற்றும்போது கூட எனக்குக் கிடைக்கவில்லை.
'என் ராமாயணம்' என்று ஒரு நாடகம். சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி என்று மூன்று இடங்களில் நடத்தினோம். அது சமூக விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட நாடகம். அதை உருவாக்கி நடித்தவர் ஸ்ரீஜித். ஸ்ரீஜித், அ. மங்கையின் மாணவர். அவரிடம் நாடகம் பயின்றவர். ஏற்கனவே எனக்கு அ. மங்கையின் அறிமுகம் இருந்தது. ஸ்ரீஜித்துடன் இணைந்து சில நாடகங்கள் நடித்தேன். அ. மங்கையின் நெறியாள்கையில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம், மரப்பாச்சி அமைப்பினரது இரு நாடகங்களின் அரங்கேற்றம் சமீபத்தில் நிகழ்ந்தது. நானும் அதில் பங்களித்திருக்கிறேன். தொடர்ந்து சில நாடகங்களில் நடிக்க இருக்கிறேன். திரைப்படம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு வந்துள்ளது. இவை பொருளாதார ரீதியாக எனக்குப் பெரிய உதவிகரமாக இல்லை என்றாலும் மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகின்றன.
கே: இந்த சமூகம் உங்களை எப்படி நடத்த வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?
ப: சமூகத்திடம் நாங்கள் சொல்ல விரும்புவதெல்லாம் இயற்கை என்னைத் திருநங்கையாகப் படைத்து விட்டது. இதில் என் தவறு என்ன இருக்கிறது? என்னையும் உங்களைப் போன்ற சக உயிரிகளாக, மனிதர்களாக நினைத்துப் பாருங்கள் என்பதுதான். எங்களை வெறுத்து ஒதுக்கவும் வேண்டாம். அய்யோ பாவம் என்று இரக்கம் காட்டிக் கட்டிக் கொள்ளவும் வேண்டாம். அதுபோதும். இதைத்தான் இந்தச் சமூகத்திடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
கேள்விகள் கேட்கக் கேட்க, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் பதில்கள் வந்து விழுகிறது வித்யாவிடமிருந்து. வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து மீண்டு வந்து, பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு போராடி ஜெயித்து, இன்னமும் வாழ்க்கையில் நிலைபெறப் போராடிக் கொண்டிருக்கும் வித்யாவின் கனவுகள் நிறைவேற வாழ்த்துக் கூறி விடை பெற்றோம்.
சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்
*****
பிச்சை எடுத்தேன்
புனேவுக்குச் செல்லும் திருநங்கைகள் பிச்சை எடுத்தும், பாலியல் தொழில் செய்தும்தான் வாழ்க்கை நடத்த வேண்டி வரும். என்னையும் பிச்சைக்கு அனுப்பினார்கள். நானும் தயங்கித் தயங்கிச் சென்றேன். ஆனால் கடைகளுக்கு முன் சென்று நின்று என்னால் பிச்சை கேட்க முடியவில்லை. குரலே எழும்பவில்லை. கையைக்கூட நீட்ட முடியவில்லை. குடும்பம், எம்.ஏ. மொழியியல் படிப்பு என்று எல்லாம் அப்போது நினைவுக்கு வந்து, கண்ணீர் பெருகியது. நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பம்தான். ஆனால் நேர்மையாக, கௌரவமாக வாழ்ந்தவர்கள். யாரிடமும், யாருக்கும் கையேந்தியதில்லை. ஆனால் இன்று நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று எனக்கு ஒரே வருத்தம். அந்த உணர்ச்சிகளை, அப்போதைய மனநிலையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. ஆனாலும், வேறு வழியில்லை என்று என்னை நானே தேற்றிக் கொண்டு பிச்சை எடுக்க ஆரம்பித்தேன். முதலில் தயங்கித் தயங்கி கடைகளின் முன் சென்று நின்று கொண்டிருப்பேன். நாளடைவில் அது எனக்கு பழகி விட்டது. நம்மைப் புறக்கணித்த சமூகத்தை, பழிவாங்குவது போலத் தான் இது என்று நான் நினைத்துக் கொண்டேன்.
*****
கசாப்புக்கடை ஆபரேஷன்
சுகாதாரமற்ற மருத்துவமனை வளாகம். ஒரு படுக்கைகூட இருக்காது. வெறும் கட்டிலில் பேப்பர் விரித்துப் படுக்கவைப்பார்கள். ஆபரேஷன் செய்யும் டாக்டர் எதற்கும் உத்தரவாதம் தரமாட்டார். உயிர் உள்பட. உள்ளே போனதும் மயக்கத்துக்கு ஒரு ஊசி போடுவார்கள். அதுவும் முழு மயக்கத்துக்கல்ல. இடுப்புக்குக் கீழ்ப்பகுதி மட்டும் சற்றுநேரம் மரத்துப் போகும்படியான மருந்து. பிறகு அதிக நேரம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். நம் கண் எதிரே, நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பிறப்புறுப்பை நீக்கிவிடுவார்கள்.
அடுத்த சில நிமிடங்களில் தையல் போட்டு, ஒப்புக்குப் பஞ்சால் கொஞ்சம் துடைத்துவிட்டு வெளியே அனுப்பிவிட்டு, 'நெக்ஸ்ட்?' என்று அழைத்துவிடுவார்கள்.
பிறப்புறுப்பு நீக்கப்படும்போது எவ்வாறு வலிக்கும் என்பதை ஒருபோதும் வெறும் சொற்களால் விவரிக்க முடியாது. அது வீண் முயற்சி. அதற்குப்பதில் இறந்து விடலாம் என்று அவசியம் தோன்றும். பலர் இறந்து இருக்கிறார்கள். அநேகமாகக் கசாப்புக் கடைகளில் செய்யப்படுகிற காரியத்துக்குப் பல விதங்களிலும் நெருக்கமான ஆபரேஷன் இது.
'நான், வித்யா' புத்தகத்திலிருந்து.
*****
சலுகை வேண்டாம், உரிமை தாருங்கள்
இந்தியாவைப் பொருத்தவரையில் திருநங்கைகள் விஷயத்தில் தமிழகம் நல்ல முன்னுதாரணமாக இருக்கிறது. அடையாள அட்டைகள் வழங்கியிருக்கிறார்கள். ரேஷன் கார்டு வழங்குவதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஏதோ சலுகை வழங்கும் மனோபாவம்தான் இதில் தெரிகிறது.எங்களுக்குச் சலுகைகள் வேண்டாம், சம உரிமை வேண்டும். ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இல்லாத எந்தச் சலுகையும் நாங்கள் கேட்கவில்லை. அவர்களுக்கு என்ன உரிமைகள், வாய்ப்புகள், சலுகைகளைத் தருகிறீர்களோ அதை எங்களுக்கும் கொடுங்கள் என்கிறோம். அதை வழங்குவதுதான் உண்மையான ஜனநாயகமாக இருக்கும். இப்போதுதான் திருநங்கைகள் மேற்கல்வி படிக்கவே அனுமதி கிடைத்திருக்கிறது. அதுவும் கலை மற்றும் அறிவியல்தான் படிக்க முடியும். Co-education நிறுவனத்தில்தான் படிக்க முடியும் என்று சில விதிமுறைகள் உள்ளன. அனைத்துப் படிப்பிற்கும், எஞ்சினியரிங், மருத்துவம் போன்ற பிற துறைகளிலும் இதை விரிவாக்க வேண்டும்.
லிவிங் ஸ்மைல் வித்யா
*****
ஆண் திமிர்!
நான் முதுகலை மொழியியல் படித்திருக்கிறேன். வங்கி உட்படப் பல இடங்களில் பணியாற்றியிருக்கிறேன். ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். சினிமாவில் உதவி இயக்குநராக இருந்திருக்கிறேன். நாடகங்களில், குறும்படங்களில் நடித்திருக்கிறேன். பத்திரிகை, ஊடகங்கள் மூலமாக ஓரளவாவது பிரபலமாகியிருக்கிறேன். அப்படிப்பட்ட என்னை, எந்த வேலை வெட்டிக்கும் போகாத, சும்மா தெருவில் உட்கார்ந்து பொழுது போக்குகிற பொறுக்கிகள், வெளியே செல்லும் போதும் வரும் போதும் கிண்டல் செய்கின்றனர் என்றால் அது அந்த ஆண் திமிர் காரணமாகத்தானே! இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பாலின அடையாளத்தைச் சொல்லி ஒருவரைக் கேவலமாகப் பேசுகிறார்கள், நடத்துகிறார்கள் என்றால் அது என்ன மாதிரியான சமூகம்? அது ஒரு ஜனநாயக நாடாகவே இருக்க முடியாது. பாலின அடையாளம் நீங்கி, அனைவரும் சமம், அனைவரும் சக மனிதர்கள் என்ற கருத்து வந்தால்தான் ஒட்டுமொத்தமான சமூக மாற்றம் ஏற்படும். இல்லாவிட்டால் இந்த அவலங்கள் தொடரத்தான் செய்யும்.
லிவிங் ஸ்மைல் வித்யா
*****
'நான், வித்யா' எழுதியது எப்படி
நான் மதுரையில் ஒரு வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். என் எண்ணங்களை ஆங்கிலத்தில் 'யாஹூ 360' பக்கத்தில் எழுதிக் கொண்டிருந்தேன். ஒரு சமயம் ஒரு கூட்டத்தில் எழுத்தாளர், பத்திரிகையாளர் பாலபாரதியின் அறிமுகம் கிடைத்தது. அவர் என்னிடம் எனது அனுபவங்களைத் தமிழில் எழுத வேண்டும், அது சமூகத்தில் பல பேரைச் சென்றடைய வேண்டும் என்று கூறினார். அவரே எப்படி வலைப்பதிவு (பிளாக்) உருவாக்குவது, அதில் எப்படித் தமிழில் எழுதுவது என்பவற்றைச் சொல்லிக் கொடுத்தார். அதன்படி நான் எழுத ஆரம்பித்ததுதான் livingsmile
எனது பிளாகைப் படித்த எழுத்தாளர் பா. ராகவன் என்னை அழைத்து, கிழக்கு பதிப்பகத்திற்காக எனது வாழ்க்கையை எழுதுமாறு சொன்னார். நான் தயங்கினேன். எனது சொந்த வாழ்க்கையை எழுத எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. ஆனால் பா.ரா. என்னை ஊக்குவித்தார். திருநங்கைகளின் வாழ்க்கைப் பதிவு என்று ஏதுமில்லை; சில புத்தகங்கள் இருந்தாலும் சுயசரிதை என்று ஏதும் இல்லை; ஆகவே தயங்காமல் உங்கள் அனுபவங்களை, உங்களுக்கு நிகழ்ந்ததை எழுதுங்கள் என்று சொல்லி, நிறைய ஆலோசனைகள் தந்து வறுபுறுத்தி எழுத வைத்தார். அப்படி வெளியானது தான் 'நான், வித்யா'.
லிவிங் ஸ்மைல் வித்யா இந்நூலை இணையத்தில் வாங்க
***** |