ஹரி பிரபாகர்
ஆங்கிலத்தில்: சி.கே. வெங்கட்ராமன்
தமிழ்வடிவம்: மதுரபாரதி

ஹரி பிரபாகர் ஹார்வார்டு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர். ஆனால் ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே ஆதிவாசி இந்தியா உடல்நல அறக்கட்டளையை (Tribal India Health Foundation) நிறுவிவிட்டார். லண்டனில் MSc (Public Health), MSc (International Health) ஆகிய தகுதிகளை 2007-2009 காலகட்டத்தில் பெற்றார். இதற்காக அவர் 'மார்ஷல்ஸ் படிப்புதவித் தொகை' பெற்றது குறிப்பிடத் தகுந்தது. அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த இந்திய-அமெரிக்கரான ஹரி பிரபாகருக்கு இந்தியப் பாரம்பரியம், கலாசாரம் மீது அளவு கடந்த பற்றும் மதிப்பும் உள்ளது. சங்கீதத்தால் நோயைக் குணப்படுத்தலாம் என்பார்கள். ஆனால் இந்த மருத்துவ நிர்வாகியோ சங்கீத ஆர்வலரும் கூட. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலையில் படிக்கும் காலத்தில் 'ஹாப்கின்ஸ் கிராந்தி' என்ற பெயரில் ஓர் இசைக்குழுவைத் தொடங்கினார். 2004ல் தனது மூதாதையர் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று இந்தியாவுக்கு வந்த சமயத்தில், தமிழ் நாட்டின் கூடலூர் பகுதியில் ஒரு கொடிய பாரம்பரிய நோய் அங்குள்ள ஆதிவாசிகளைத் தாக்கி வருத்துவதை அறிந்தார். அவர் என்ன செய்தார், எப்படிச் செய்தார் என்பவற்றை அவர் வாய்வழியே கேளுங்கள்.....

*****


கே: உங்கள் பெற்றோரைப் பற்றிச் சொல்லுங்கள்.

ப: என் தந்தையார் உலோகவியலில் முனைவர் ஆய்வுக்காக முதலில் கனடாவுக்கு வந்தார். என் தாய் திருமணத்துக்குப் பின் அமெரிக்கா வந்தார். வீட்டில் இந்து மதத் தத்துவம், இந்தியாவின் வரலாறு, அதன் பன்முகத்தன்மை போன்றவற்றைப் பற்றி அறிய நிறைய வாய்ப்பு இருந்தது. வலுவான இந்தக் கலாசார, ஆன்மீகப் பின்னணி குறித்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டு. எனது அன்றாட வாழ்விலும் பணியிலும் இவ்விரண்டையும் இணைக்க முயற்சி செய்கிறேன்.

##Caption## கே: திரும்பிப் பார்க்கும்போது, அவர்கள் எடுத்த எந்த முடிவை நீங்கள் மிக முக்கியமானதாக எண்ணுகிறீர்கள்?

ப: எனது சின்ன வயதிலிருந்தே என் தாயார் ஒவ்வோர் ஆண்டும் என்னை இந்தியாவுக்கு அழைத்துச் செல்வார். அவர் செய்த முக்கியமான முடிவு என்று நான் அதை நினைக்கிறேன். அதன்மூலம் நான் இந்தியாவின் மீது மிகுந்த மதிப்பும், இந்தியாவின் பலங்கள் பலவீனங்கள் குறித்த பார்வையும் எனக்கு உண்டானது. இந்தப் பயணங்கள் இந்திய-அமெரிக்கன் என்ற எனது அடையாளத்தை திடப்படுத்தியது. அத்தோடு, இந்தியாவின் மருத்துவ வசதிகள் குறித்த விஷயங்களில் எனது ஈடுபாட்டைத் தொடரச் செய்தது. எனது பெற்றோர் எனக்கு மிகச் சிறந்த கல்வியைத் தருவதில் காட்டிய அக்கறைக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

கே: 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பத்திரிகையில் படித்த ஒரு கட்டுரை உங்கள் வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்கும் விதையை உங்களில் விதைத்ததாக ஓரிடத்தில் கூறியிருந்தீர்கள். அதில் தொடங்கி நீங்கள் பழங்குடி கிராமமான கூடலூருக்குப் போனது வரையில் நிகழ்ந்தவற்றை விவரிக்க முடியுமா?

ப: 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' படித்தபின் “நான் தமிழ்நாட்டில் சித்திலிங்கியில் உள்ள பழங்குடியினர் மருத்துவ மனையைத் தொடங்கி நடத்தும் மருத்துவர் தம்பதிக்கு, அங்குச் சென்று சில 'நோய்த் தொற்றியல்' (epidemiology) குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாமா என்று கேட்டுக் கடிதம் எழுதினேன். அவர்களும் சம்மதித்தனர். ஊரக மருத்துவம் எவ்வாறு தொற்றுநோய்களைக் கையாள்கிறது என்பதை குறித்த அறியத் தொடங்கினேன். அங்கே அதிகம் காணப்படும் பரம்பரை நோய் எதுவென்று நான் அறிய விரும்பியபோது டாக்டர் ரெஜியும் டாக்டர் லலிதாவும் என்னை 2005ல் கூடலூருக்கு அனுப்பினர். அங்கே 'அரிவாள் அணுச் சோகை' (sickle cell disease - பெட்டிச் செய்தி காண்க) அதிகம் இருந்தது. அப்போதிலிருந்தே எனது தொழில்முறை கவனம் அவர்களுக்கு மருத்துவம் செய்வதில் குவிந்துள்ளது.

கே: உங்கள் வருடாந்திர இந்தியப் பயணம், நீங்கள் 'அரிவாள் அணுச் சோகை மையம்' தொடங்கிய பின்னர் அங்கே மக்களிடம் காணப்படும் மாற்றம் ஆகியவற்றைக் குறித்துச் சொல்லுங்கள்...

ப: முன்பெல்லாம் வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை அங்கே போவேன். முக்கியமாக, மக்களுக்குப் பரிசோதனை, சிகிச்சை மற்றும் அவர்களுக்கு நோய் குறித்த அறிவு ஏற்படுத்துதல் ஆகியவற்றை மீள்நோக்கவும், அவற்றை மேம்படுத்தவும் செல்வேன். 'அரிவாள் அணுச் சோகை மையம்' பெற்ற வெற்றி, நான் கூடலூர் ஆதிவாசி மருத்துவமனையின் அருமையான மருத்துவர்கள், செவிலியர், சமூக மருத்துவப் பணியாளர்கள் போன்றவர்களால் வந்தது என்பேன். அதேபோல அமெரிக்கத் தமிழ் மருத்துவச் சங்கம் (American Tamil Medical Association - ATMA) கொடுத்த ஆதரவும் மிக முக்கியமானது. இதுவரை அந்த மையம் 8000 நபர்களைப் பரிசோதித்துள்ளது. 190 பேர் முழுமையான சிகிச்சை பெறுகிறார்கள். அங்குள்ள சமூகத்தில் இந்த நோய் பற்றிய விழிப்புணர் அதிகமாவதையும் மேலும் பலர் பரிசோதனை செய்துகொள்ள முன்வருவதையும் நான் பார்க்கிறேன். சிகிச்சையின் பலனாக வலியும் நோயின் தீவிரமும் குறைந்துள்ளது என்று நோயாளிகள் கூறுகின்றனர்.

கே: உள்ளூர் மக்களோடு சேர்ந்து செயல்படுவதில் உங்கள் நோக்கங்களில் ஒன்று நோயாளிகளுக்கு சக்தியளித்தலும் ஆகும். அவர்களிலேயே சில 'நோயாளி வல்லுனர்'களை (expert patients) உருவாக்கியுள்ளீர்கள். மேற்குலகில் அதற்கு இணையான திட்டம் எதுவெனச் சொல்லமுடியுமா?

ப: 'அரிவாள் அணுச் சோகை நோயாளி வல்லுனர் திட்டம்' என்பதை அமெரிக்காவில் நாம் வடிவமைத்து வருகிறோம். இது ஸ்டேன்ஃபோர்டு நீடித்த நோய் சுயநிர்வாகத் திட்டத்தை அடியொற்றியது. அமெரிக்காவில் அரிவாள் அணு நோயாளிகள் குழுவொன்றை அமைத்திருக்கிறோம். இவர்கள் பல்வேறு அரிவாள் அணு நோயாளி மையங்களுக்குத் தேவையான சுயநிர்வாகத்துக்கான பாடத்திட்டம் தயாரித்து வருகிறார்கள். காலக்கிரமத்தில், இவர்கள் பிற நோயாளிகளுக்கு வகுப்புகளையும் நடத்துவார்கள். இவர்கள் பெற்றுள்ள அனுபவத்தின் காரணமாக இவர்களை 'நோயாளி வல்லுனர்' எனக் கூறுகிறோம். இங்கிலாந்தின் தேசீய மருத்துவச் சேவையில் இதே போன்ற வல்லுனர் திட்டம் பெருத்த வெற்றியைப் பெற்றுள்ளது. குறிப்பிட்ட்ட பகுதிகளில் இந்தியாவில் சமூக மருத்துவப் பணியாளர்களின் தொடர்ந்த சேவை, அரிவாள் அணுச் சோகை நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் இந்த நோயை முன்னிலும் திறம்படச் சமாளிக்கப் பெரிதும் உதவியாக அமையும்.

கே: இந்த மாற்றங்களை உள்ளூர் மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டு, மாறியுள்ளார்கள் என்பதைக் குறித்த உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்.

ப: கூடலூர் பள்ளத்தாக்கில் உள்ள மக்கள் தற்போது பரவலாக மையத்தில் தரப்படும் சிகிச்சை குறித்துத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு அறிவுறுத்துதல், பரிசோதனை முகாம்களை மேற்பார்த்தல், சிகிச்சையின் படிநிலையை கவனித்தல் என சமுதாயச் நலப் பணியாளர்கள் செய்துவரும் சேவை இதன் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

கே: கூடலூர் பணியில் உங்கள் பங்களிப்பு என்ன?

ப: திட்டத்துக்கான நிதி திரட்டுதல், மையத்தில் நோயறிதல், சிகிச்சை, ஆய்வு, கல்வி ஆகியவற்றுக்கான வழிவகைகளை வகுத்தல்/மேம்படுத்தல், நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்குமான கையேடுகள் தயாரித்தல் என்று இவற்றுக்காகவே தொடக்கத்தில் நான் பெரிதும் வேலை செய்து வந்தேன்.

##Caption## கே: அமெரிக்காவில் உங்கள் பொறுப்பு என்ன?

ப: நிதி மற்றும் மருத்துவ ஆதாரங்களைக் குறித்தபடி அறக்கட்டளை தனது பங்கேற்பு நிறுவனங்களுக்கு வழங்குமாறு பார்த்துக் கொள்வதில் நான் கவனம் செலுத்துகிறேன்.

கே: மருத்துவப் படிப்பு, அதிலும் ஹார்வார்டில், மிகவும் கடினமாக இருக்கும். உங்கள் பொறுப்புகளை நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

ப: எந்த மருத்துவக் கல்லூரியையும் போலவே ஹார்வார்டிலும் பாடத்திட்டம் சாராத பணிகளை, குறிப்பாக உலகளாவிய மருத்துவப் பணி, செய்வதை மிகவும் ஆதரிக்கின்றனர். எங்கள் திட்டப்பணிகளைச் செய்ய வழிகாட்டுவதோடு பிற உதவிகளும் செய்கின்றனர்.

கே: அமெரிக்காவில் உங்களுக்கு உதவியாக இருக்கும் குழுவைப் பற்றிச் சொல்லுங்கள்...

ப: அரிவாள் அணுத் திட்டத்தில் பங்கேற்கும், அறக்கட்டளையை ஆதரிக்கும், பல நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ளன. 2005ல் இருந்தே அமெரிக்கத் தமிழ் மருத்துவர் சங்கம் பெரிய அளவில் ஆதரவளித்து வருகிறது. மிகவும் சமுதாய நோக்கோடு பணிபுரியும் தமிழ் வம்சாவளி மருத்துவர்களைத் தன்னகத்தே கொண்ட சிறந்த அமைப்பு அது. இந்தியாவிலும் அமெரிக்காவிலும் அற்புதமாகச் சேவைகள் பலவற்றைச் செய்து வருகிறது.

கே: இன்றைய தேதியில் நீங்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால்கள் எவை?

ப: அரிவாள் அணு மையத்தை நீடித்து நடத்த வழிவகை செய்வது, மேலும் பல திட்டங்களை வடிவமைப்பது, ஒருக்கால் அரசின் நிதியுதவி நிறுத்தப்படுமானாலும் மாற்று நிதி தொடர்ந்து கிடைக்க ஏற்பாடு செய்வது ஆகியவை என் முன் நிற்கும் பெரிய சவால்கள்.

கே: நெடுநாள் பார்வையில் இந்த முயற்சியும், நீங்களும் எங்கு அடைவீர்கள் என எண்ணுகிறீர்கள்?

ப: அரிவாள் அணு மையம் தமிழக அரசுடன் அரசு-தனியார் கூட்டாண்மையில் இயங்கப் போகிறது. இந்தத் திட்டத்தில் நான் இதுவரை கற்றதை, இன்னும் மருத்துவ கவனம் பெறாத நோயாளிகளுக்கு, இந்தியாவிலும் அமெரிக்காவிலும், கொண்டு செல்வதில் மேற்கொண்டு நான் ஈடுபடப் போகிறேன். அறக்கட்டளை (Tribal India Health Foundation) இன்னும் பல நிறுவனங்களோடு கைகோர்த்து மேம்பட்ட சிகிச்சைத் தரத்தை மக்களிடையே தருவதற்காக உழைக்கும்.

கே: உங்களுக்கு மக்கள் எப்படி உதவலாம்? எதில்?

ப: பயன்படும் நிலையில் உள்ள பழைய மருத்துவ சாதனங்களை மருத்துவ நிலையங்கள் எங்களுக்குக் கொடுக்கலாம். தவிர, மருத்துவ நிறுவனங்கள் எங்கள் பணித்திட்டப் பகுதிகளில் குறைந்தபட்சம் மூன்றிலிருந்து ஐந்து மாத காலம் எங்களோடு இணைந்து பணியாற்றலாம்.

கே: உங்களது பிற படைப்பாக்க ஆர்வங்களைப் பற்றிச் சொல்லுங்கள். ஹாப்கின்ஸ் கிராந்தி (http://www.jhu.edu/kranti/), இசை ஈடுபாடு ஆகியவை பற்றிப் பேசுங்கள்...

ப: மேற்கத்திய இசை, ஹிந்துஸ்தானி, கர்நாடக இசை, சூஃபியிசை என்று இதுவானாலும் கற்கவும், கலந்து புத்திசை உருவாக்கவும் என்று சங்கீதம் ஒரு நல்ல களம். ஹாப்கின்ஸ் கிராந்தி புதிய உயரங்களை எட்டிக்கொண்டுதான் இருக்கிறது. அதன் வளர்ச்சி என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது.

கே: மருத்துவ மேலாண்மை விரைந்து வளரும் துறை. அதில் நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள். அத்தோடு மருத்துவராகவும் போகிறீர்கள். இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ப: கல்லூரியில் கற்பதைவிட, களத்தில் கற்பதே மருத்துவ நிர்வாகத்தைப் பயிலச் சிறந்த வழி என்று நான் கருதுகிறேன். எனக்கு அதில் சிறிது அனுபவம் உள்ளது. நிறுவனம், மனிதவளம், நிதி ஆகிய நிர்வாகங்களை மருத்துவ அமைப்புகள் கற்பது நல்ல பலன் தரும். வருங்காலத்தில் இவற்றைப் பற்றிய என் அறிவைப் பெருக்கிக்கொள்ள நான் விரும்புகிறேன்.

கே: இந்திய வம்சாவளிப் பெற்றோர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ப: இந்திய-அமெரிக்கர்களான நாம் உலகின் மிகப் புராதனமான, துடிப்புள்ள நாகரீகங்களில் ஒன்றில் வேர்கொள்ளும் அதிர்ஷ்டம் செய்தவர்கள். நாம் இந்தியாவுடன், அதன் கலாசாரத்துடன் தொடர்பு வைத்துக்கொள்வது அவசியம். இந்தியாவுடனும், அதன் முற்போக்கானதும் பின்பற்றற்குரியதுமான அதன் தத்துவத்துடனும், கலாசாரத்துடன் தமது குழந்தைகள் பிடிப்பை வளர்த்துக்கொள்ளப் பெற்றோர் தம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும். பல வகைகளிலும் இந்தியா மாறிவிட்டது, அதுவும் மேற்கத்திய மயமாகிவிட்டது என்பதில் சந்தேகமில்லை. புராதன தத்துவங்கள், கலை வடிவங்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் கற்பது நம் வாழ்க்கையை வளப்படுத்தும் என்பதோடு நாம் இந்தியா-அமெரிக்கா இரண்டுக்கும் சிறந்த நல்லெண்ணத் தூதுவர்கள் ஆகவும் முடியும். இரண்டு நாடுகளுக்குமிடையே நல்லுறவு இருக்க வேண்டியதன் அவசியத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. அந்த உறவைப் பேணி வளர்ப்பதற்கு இரண்டு நாடுகளையும் குறித்து நன்கறிந்தவர்கள் பலர் இருப்பது அவசியம்.

இரண்டாம் தலைமுறை இந்திய-அமெரிக்கர்கள் தமது முன்னோர் தேசத்தை மறந்துவிட்டனர் என்பது போலப் பரவலாகக் காணப்படும் கருத்தைப் பொய்யாக்கப் புறப்பட்டிருக்கின்றனர் ஹரி பிரபாகர் போன்ற நம்பிக்கை நட்சத்திரங்கள். இங்கே முடிவது நேர்காணல் தான். இதுவும் முடிவல்ல, ஆரம்பம்....

ஆங்கிலத்தில்: சி.கே. வெங்கட்ராமன்
தமிழ்வடிவம்: மதுரபாரதி

*****


அரிவாள் அணுச் சோகை என்றால் என்ன?
அரிவாள் அணு நோய் அல்லது அரிவாள் அணுச் சோகை ஒரு பரம்பரை நோயாகும். இந்த நோயுற்றவரின் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அரிவாள் வடிவத்தில் மாறிவிடும். (சாதாரணமாக இவை வட்டத் தகடுபோல் இருக்கும்.) இவ்வாறு உருமாறிய ரத்தச் சிவப்பணுக்கள் சிறிய ரத்தக் குழாய்களை அடைத்துக் கொள்வதன் மூலம் அந்த உறுப்புக்கு ரத்தமும் உயிர்வளியும் (ஆக்ஸிஜன்) போகவிடாமல் தடுத்துவிடும். எங்கே அடைப்பு ஏற்படுகிறது என்பதைப் பொறுத்து மூட்டுவலி, வயிற்றுவலி, சிறுநீரகக் கோளாறு என ஏற்படும். மூளையைப் பாதித்தால் பக்கவாதம், வலிப்பு ஆகியவை ஏற்படலாம். நுரையீரலில் நோய் தொற்றலாம். அரிவாள் வடிவமடைந்த சிவப்பணுக்கள் எளிதில் அழிவடையும் என்பதால், ரத்த சோகை ஏற்பட்டு அதனால் சோர்வு, மஞ்சள் காமாலை, தலைவலி எனப் பல அறிகுறிகள் காணப்படலாம்.

இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய மூன்றிலிருந்து நான்கு மில்லியன் பேர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.


© TamilOnline.com