ஷைலஜா
நவீன கதைப்போக்குக்கு ஏற்றவாறு நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து காத்திரமான படைப்புகளைத் தந்து கொண்டிருப்பவர் ஷைலஜா.

திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கத்தில் பிறந்த ஷைலஜாவின் இயற்பெயர் மைதிலி. தந்தை பிரபல எழுத்தாளர் ஏ.எஸ். ராகவன். பள்ளிப்படிப்பு ஸ்ரீரங்கத்தில். அப்போதே ஆனந்த விகடனுக்கு ஒரு நகைச்சுவைத் துணுக்கை எழுதி அனுப்ப, அது உடனடியாகப் பிரசுரமாக, அதுவே ஷைலஜாவின் எழுத்தார்வத்துக்குப் பிள்ளையார் சுழி ஆனது. திருச்சி எழுத்தாளர் சங்கத்திற்குத் தந்தையுடன் சென்று பல எழுத்தாளர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டதில் எழுத்தார்வம் கொழுந்து விட்டது. வீட்டுக்கு வருகை தந்த சாவி, மணியன், ஜெயகாந்தன் போன்ற பல பிரபலங்களைச் சந்திக்க முடிந்ததும் சிறுவயதிலேயே ஷைலஜாவுக்கு எழுத்தின் மீதான காதலை அதிகரிக்கச் செய்தது.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



பள்ளியில் நாடகங்களுக்கு கதை-வசனம் எழுதியதுடன் தொடர்ந்து கதை, கவிதை எழுத ஆரம்பித்தார். கல்லூரியில் படிக்கும்போது எழுதிய நகைச்சுவைக் கட்டுரை விகடனில் பிரசுரமானது. அது எழுத்தில் தன்னம்பிக்கையை அளித்தது. முதல் சிறுகதை குமுதம் இதழில் 1983ல் வெளியானது. அதற்கு கிடைத்த வரவேற்பில் இவரது பேனா சுறுசுறுப்படைந்தது. விகடனில் வெளியான 'வானைத்தொடலாம் வா' என்ற இவரது தொடர்கதைக்குச் சிறப்புப் பரிசு கிடைத்ததுடன் பிரபல எழுத்தாளர்கள் முன்னிலையில் பாராட்டு விழாவும் நடந்தது. தொடர்ந்து கல்கி, கலைமகள், அமுதசுரபி, தினமலர் போன்ற இதழ்களில் எழுதினார். இணையத்திலும், மடற்குழுக்களிலும் கதை, கவிதை, கட்டுரைகள் என்று கலக்கத் தொடங்கினார்.

##Caption## இதுவரை 225 சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 4 தொடர்கதைகள் மற்றும் எண்ணற்ற கவிதை, கட்டுரை, நாடகங்களை எழுதியிருக்கும் ஷைலஜா, தான் எழுத ஆரம்பித்த நாளில் தந்தையார் ஊக்கம் தந்திருக்காவிட்டால் தொடர்ந்து எழுதியிருக்கச் சாத்தியமே இல்லை என்கிறார்.

வாழ்க்கையின் லட்சியம் எதுவோ அதைத்தான் இலக்கியம் என்று தாம் கருதுவதாகக் கூறும் இவர், வாழ்க்கையும் இலக்கியமும் வேறல்ல என்றே தமக்குத் தோன்றுவதாகக் கூறுகிறார். "அப்பாவின் சில சிறுகதைகளை இப்போது படித்தாலும் அந்தக் கதைகளில் ஜீவன் இருப்பதை உணரமுடியும். எத்தனையோ கதைகள் இருந்தாலும் 'அம்மா' என்ற என் அப்பாவின் சிறுகதை தந்திருக்கும் பாதிப்புதான் எனக்கு இன்னமும் உந்துசக்தியாகச் செயல்படுகிறது" என்று கூறும் இவர், லாசராவில் ஆரம்பித்து, குபரா, திஜார, சுஜாதா, ஆர். சூடாமணி, வசுமதி ராமஸ்வாமி, ராஜம் கிருஷ்ணன், மேலாண்மை பொன்னுச்சாமி, பிரபஞ்சன், இரா. முருகன், உஷா சுப்ரமணியன், எஸ் ராமகிருஷ்ணன், அழகியபெரியவன் என பலரது எழுத்துக்கள் தன்னைக் கவர்வதாகச் சொல்கிறார்.

ஷைலஜாவின் எழுத்துக்கு உறுதுணையாக இருந்து ஊக்குவிப்பது தம் கணவர்தாம் என்று கூறும் ஷைலஜா, பிரபல எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார், இந்திரா சௌந்திரராஜன், இலக்கியபீடம் விக்கிரமன், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் போன்றோரது அக்கறையும், ஊக்குவித்தலும் தம்மைத் தொடர்ந்து உற்சாகத்தோடு இயங்கச் செய்கிறது என்கிறார்.

"கலைமகள் பத்திரிகையில் அமரர் கி.வா. ஜகந்நாதன் சிறுகதைப்போட்டியில் பரிசுபெற்ற எனது 'சருகு' சிறுகதைக்கு, முதியோர் இல்லத்திலிருந்து ஒரு பெண்மணி நெகிழ்ச்சியுடன் எழுதிய விமர்சனக் கடிதத்தை மறக்க முடியாத பாராட்டாகக் கருதுகிறேன்" என்று கூறும் ஷைலஜா, அரங்கன் கோயில், ஆழ்வார் பாடல்கள், ஆண்டாள் பாசுரங்கள், அகண்ட காவிரி, தெளிந்த கொள்ளிடம், தெற்கு வாசல் என்ற பசுமையான ஊர்ச் சுவைகளே இன்றும் தனது எழுத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதாகக் கூறுகிறார்.

தினபூமி, தினச்சுடர், மாலைமதி, குடும்ப நாவல், குங்குமச் சிமிழ் என பல மாத இதழ்களில் இவரது நாவல்கள் வெளியாகியுள்ளன. 'திரும்பத் திரும்ப' என்னும் சிறுகதைத் தொகுப்பு திருமகள் வெளியீடாக வெளியாகியுள்ளது. பல சிறுகதைத் தொகுப்புகளிலும் இவரது சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. திரிசக்தி பதிப்பகம் 'அவனும் இவனும்' என்ற சிறுகதைத் தொகுப்பை அண்மையில் வெளியிட்டுள்ளது. இவரது இரு சிறுகதைகள் கன்னடத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டி, இலக்கியபீடம் சிறுகதைப் போட்டி, தினமலர் சிறுகதைப் போட்டி, கலைமகள் கிவாஜ சிறுகதைப் போட்டி எனப் பல போட்டிகளில் பரிசு வென்றிருக்கும் ஷைலஜா, இணையத்தில் மரத்தடி, தமிழுலகம் ஆகியவை நடத்திய கதை, கவிதைப் போட்டிகளிலும் பரிசு வென்றதுண்டு.

##Caption## விக்கிரமன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட 'இலக்கியபீடம்' இதழ் நடத்திய அமரர் ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் இவர் எழுதிய 'திக்குத் தெரியாத காட்டில்' என்னும் நாவலுக்கு முதற் பரிசு கிடைத்துள்ளது. விளம்பரப் படங்கள் மற்றும் குறும்படங்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்துவரும் ஷைலஜா, இணைய வானொலியில் சிலகாலம் அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இசை, ரங்கோலி, ஓவியத்தில் அளவற்ற ஈடுபாடு உண்டு. மேடை நாடகங்களிலும் நடித்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தின் அனைத்துத் தமிழ் நாடக மன்றங்களுக்கான நாடகப் போட்டியில் இவர் நடித்ததற்குச் சிறந்த நடிகைக்கான முதல் பரிசு கிடைத்திருக்கிறது. கோவை, திருச்சி, பெங்களூரு வானொலிகளில் இவரது படைப்புகள் ஒலிபரப்பாகியுள்ளன. பொதிகைத் தொலைக்காட்சியில் சித்தர்கள் பற்றிய கலந்துரையாடலில் பதினெட்டு வாரங்கள் கலந்துகொண்டிருக்கிறார்.

நிறைவாக இன்னும் எதுவும் எழுதவில்லை எனும் நெருடல் இருக்கிறது என்று கூறும் ஷைலஜா, "சொற்களையே சார்ந்திருக்கும் எழுத்துத் துறையில், அனைவரும் பாராட்டி வியக்கும்படியான சிறப்பான சிறுகதை ஒன்றைப் படைக்கவேண்டும், அது மொழி எல்லையைக் கடந்து எல்லாருடைய மனங்களையும் ஊடுருவிச் செல்லவேண்டும், காலத்தால் அழியாத கலைப் படைப்பாய் இருக்கவேண்டும். இதுவே எனது லட்சியம்" என்கிறார்.

கணவர், குழந்தைகளுடன் பெங்களூரில் வசித்து வரும் ஷைலஜா, அங்குள்ள கன்னட அமைப்பினருடன் இணைந்து சமூகப் பணிகளும் ஆற்றுகிறார். "பெண்கள் அழுமூஞ்சிகள். அவர்களால் நகைச்சுவை எழுதமுடியாது என்ற பொதுவான கருத்தை என் எழுத்தின் மூலம் மாற்றியமைக்க விரும்புகிறேன்" என்கிறார் மாறாத புன்னகையுடன். அதில் அவர் வெற்றி கண்டிருக்கிறார் என்பதைத்தான் அவரது எழுத்துகள் சொல்கின்றன.

அரவிந்த்

© TamilOnline.com