டென்னஸி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
பிப்ரவரி 6, 2010 அன்று டென்னஸி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவைக் கொண்டாடியது. நேஷ்வில் நகர் விநாயகர் ஆலயக் கலையரங்கத்தில் C.S.ஐங்கரன் அவர்கள் இன்னிசை விருந்தோடு இது நடந்தேறியது.

ஐங்கரன் தனது குழுவினருடன் இசை நிகழ்ச்சியை வழங்கியபோதும், புதியவர்களின் திறமையை ஊக்குவிக்கத் தவறவில்லை. சம்பிரதாயப் பாடல்களுடன் நிகழ்ச்சியைத் துவங்குவார் என்ற எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி, நிகழ்ச்சி எப்படி நடக்கப் போகிறது என்பதை குறிப்பாக உணர்த்தும் வண்ணம், இளையராஜாவின் பிரபலமான 'மடை திறந்து தாவும் நதியலை நான்' என்ற பாடலுடன் ஆரம்பித்தார். தொடர்ந்து வந்த பாடல்களும் இசை வெள்ளமாகக் கேட்போரை மெய்மறக்கச் செய்தன. A.M. ராஜா, S.P. பாலசுப்ரமணியம், P.B. ஸ்ரீனிவாஸ் என்று பல பாடகர்களைத் தன் குரலில் ஐங்கரன் அப்படியே கொண்டுவந்தார். சட்டென்று ஒரு பாடலில் பெண் குரலிலும் பாடினார். அபூர்வத் திறமைதான்.

சேர்ந்து பாடிய அனிதா கிருஷ்ணனுக்கு அற்புதமான, இனிமையான குரல். முறையான சங்கீதப் பயிற்சி இவருக்குக் கூடுதல் பலம். பாடலின் அத்தனை நெளிவு சுளிவுகளையும் துளி பிசகாமல் அள்ளித் தெளிக்கிறார். கிடார், கீபோர்டு, டிரம்ஸ் வாத்தியக் கலைஞர்கள் இவர்களுக்குச் சிறிதும் சளைக்காமல் வாசித்தனர்.

60களிலிருந்து இன்றுவரை ரசிகர்களை மகிழ்வித்த அனைத்துப் பாடல்கைளயும் பாடி ரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்தினர். அதுமட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் பாடல்களைப் பாடினர். தமிழ் மொழியில் புகழ்பெற்று பிற மொழிகளுக்குச் சென்ற பாடல்களையே பாடியதால், மொழியைத் தாண்டி இசை அனைவருக்கும் இன்பத்தை அள்ளித் தந்தது.

நிகழ்ச்சி நடக்கும் பகுதியிலிருக்கும் உள்ளூர்க் கலைஞர்களின் திறமையப் பயன்படுத்திக் கொள்வது ஐங்கரனுக்குக் கைவந்த கலை. நிகழ்ச்சிக்குத் தபலா வாசிக்கும் பொறுப்பை அமுதன் வெங்கடேஷ்வரனிடம் ஒப்படைத்துவிட்டார். தவிர, ரங்கராஜன் அருணாசலம், ரமா ஜெயக்குமார், புஷ்பா கிருஷ் உலூர் ஆகியோரும் பாடுவதில் பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்தனர்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டென்னஸி தமிழ்ச் சங்கத்தினர் பாராட்டுக்கு உரியவர்கள்.

அருணாசலம்,
டென்னஸி

© TamilOnline.com