இலக்குவனார் நூற்றாண்டு விழா மற்றும் புறநானூறு கருத்தரங்கம்
மார்ச் 14. 2010 ஞாயிற்றுக் கிழமையன்று வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA), வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ் இலக்கிய வட்டம் ஆகியவை இணைந்து நடத்திய இரண்டாவது புறநானூற்றுக் கருத்தரங்கமும், செந்தமிழ்க் காவலர் சி. இலக்குவனார் நூற்றாண்டு விழாவும், மேரிலாந்து மாகாணத்தில் உள்ள கொலம்பியா நகரில் சிறப்பாக நடைபெற்றன.

கொழந்தைவேல் இராமசாமி அவர்கள் தமிழ் வாழ்த்துப் பாடினார். பேரவையின் தலைவர் முனைவர். முத்துவேல் செல்லையா விழாவுக்குத் தலைமையேற்றுப் பேசுகையில் பேரவை நடத்தி வரும் இலக்கிய நிகழ்ச்சிகளையும், கடந்த ஆண்டு நடத்திய முதலாவது புறநானூற்றுக் கருத்தரங்கம், பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு, வாசிங்டன் வட்டாரத்தில் பேரவையால் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை முதலானவற்றை நினைவு கூர்ந்தார். இவ்வருட ஆண்டு விழாவை செந்தமிழ்க் காவலர் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடப் போவதாகக் கரவொலிக்கிடையே அறிவித்தார்.

'புறநானூறு காட்டும் சங்ககாலத் தமிழகம்' என்ற தலைப்பில், சிகாகோவைச் சேர்ந்த முனைவர் ஃபிரான்சிஸ் முத்து, 'புறநானூறு காலத்துப் புரவலரும் புலவர்களும்' என்ற தலைப்பில் முனைவர். இர. பிரபாகரன், 'புறநானூறு கூறும் வாழ்வியல் கருத்துகள்' என்ற தலைப்பில் கு.பெ. வேலுச்சாமி, 'செந்தமிழ்க் காவலர் இலக்குவனார்' என்ற தலைப்பில் முனைவர். அரசு செல்லையா, 'தன்மானத் தமிழ் மறவர் சி. இலக்குவனார்' என்ற தலைப்பில் வலைப்பதிவர் பழமைபேசி என்ற மணிவாசகம் ஆகியோர் உரையாற்றினர்.

செந்தமிழ்க் காவலர் இலக்குவனாரின் நூற்றாண்டு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த பேராசிரியரின் புதல்வி முனைவர். இ. மதியழகி மனோகரன், 'புறநானூற்று நெறியில் தமிழறிஞர் இலக்குவனார்' என்னும் தலைப்பில், தனது தந்தையார் கொடை, அறம் என்பனவற்றில் எப்படியெல்லாம் பங்களித்தார் என்பதைத் தாம் அவரோடு வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த அனுபவங்களைக் குறிப்பிட்டுப் பேசினார்.

பின்னர், நாஞ்சில் திரு. பீற்றர் அவர்களின் புறநானூறு - வினா விடை விளக்கம் எனும் பல்லூடக நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு, கொழந்தைவேல் இராமசாமி, முனைவர் ஜெயந்தி சங்கர் ஆகியோர் அணித்தலைவர்களாகச் செயல்பட்டனர்.

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத் தலைவர் திருமதி. கல்பனா மெய்யப்பன் அவர்களின் நன்றியுரையோடு விழா நிறைவெய்தியது.

பழமைபேசி,
கொலம்பியா, மேரிலாந்து

© TamilOnline.com