மல்லிகா கார்கேயா பரதநாட்டிய அரங்கேற்றம்
மார்ச் 20, 2010 அன்று கேம்பெல் ஹெரிடேஜ் அரங்கில் லாஸ்யா டான்ஸ் கம்பெனி மாணவி மல்லிகா கார்கேயாவின் நாட்டிய அரங்கேற்றம் நடந்தது. கணபதி ஆராதனையாக 'மஹா கணபதி' பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்த திருவாலங்காடு காளி கவுத்துவம் புஷ்பாஞ்சலி, மகா காளியைக் கண்முன் நிறுத்தியது. அடுத்து வந்த 'மயில்வாகனா வள்ளி மனமோகனா' எனும் பாபநாசன் சிவனின் பாடலும், அதனைச் சித்திரித்த விதமும் சிறப்பு. தொடர்ந்த 'சலமேலனே சேவய்யா' என்னும் ரங்கசாமி நட்டுவனார் இயற்றிய நாட்டைக்குறிஞ்சி ராக வர்ணத்திற்குச் சிறப்பான முக பாவங்களுடன் அபிநயித்தார் மல்லிகா.

ராதா கிருஷ்ணனின் பாடலுக்கு நவரஸங்களையும் தத்ரூபமாக, இயல்பாக அபிநயித்த விதம் பாராட்டுக்களைப் பெற்றது. அடுத்து 'மையா மோரி' என்னும் சூர்தாஸ் பாடலில், கோகுலத்தில் நடந்த குழந்தைக் கண்ணனின் லீலைகளைப் படம்பிடித்த விதம் கனஜோர். பின் 'ஜோ அச்சுதானந்த' எனும் அன்னாமாச்சார்யா பாடலில், யசோதை கண்ணனை தோளில் போட்டு தட்டித் தாலாட்டுப்பாடித் தூங்க வைக்கும் காட்சியைச் சிறப்பாக அபிநயித்த விதம் உருக்கமாக இருந்தது. கடைசியாக லால்குடி ஜெயராமன் இயற்றிய தில்லானாவிற்கு துளியும் அசராமல் ஆடி முடித்த விதம் சிறப்பு.

குரு வித்யா சுப்ரமணியம் சிறந்த முறையில் மாணவிக்குப் பயிற்சி அளித்திருக்கிறார். ஆஷா ரமேஷ் குரலிசை, நாராயணன் (மிருதங்கம்) சாந்தி நாராயணன் (வயலின்) வாசிப்பு நிகழ்ச்சியை மேலும் சோபிக்கச் செய்தது.

சீதா துரைராஜ்,
கலிபோர்னியா

© TamilOnline.com