'முடிவல்ல ஆரம்பம்'
காசுமேல காசு வந்து, அவனுக்கு ஒரு ரகசிய சிநேகிதியும் கிடைத்து, அவன் நினைத்தது நடந்தது. யாருக்கு என்று யோசிக்கிறீர்களா? விரிகுடாப் பகுதி நாடக ரசிகராக இருந்தால் இவை யாவும் மணிராம் எழுதிய இயக்கிய தமிழ் நாடகங்களின் பெயர்கள் என்பது தெரிந்திருக்கும்.

'அவதார்ஸ்' நாடகக் குழு முதலில் 'நினைத்தாலே நடக்கும்' நாடகத்தை 2008 மார்ச் மாதத்தில் பிரம்மாண்டமாக மேடை ஏற்றியது. இதில் முதன்முறையாகப் பார்வையாளர்களையும் நாடகத்தின் பகுதியாக இடம்பெறச் செய்து, அவர்களின் தீர்ப்புக்கு ஏற்ப நாடகத்தை எடுத்துச் சென்று ஓர் ஊடாட்ட நாடகமாக (interactive play) அமைத்திருந்தது சபாஷ் பெற்றது. பிரும்மாண்டமான காட்சி அமைப்புகள்—ஒரு சராசரி சென்னை வீட்டின் வெளிப்புறம், நிலவு கொஞ்சும் பால்கனி என்று—கண்களுக்கும் விருந்தாக அமைந்தது. 'நினைத்தாலே நடக்கும்' கடந்த 2 ஆண்டுகளில், அமெரிக்காவில் நியூ ஜெர்ஸி, ஜாக்சன்வில், வாஷிங்டன் டி.சி, சாக்ரமென்டோ ஆகிய பல நகரங்களிலும் நடந்தேறியது.

அடுத்த நாடகமான 'முடிவல்ல ஆரம்பம்' ஏப்ரல் 17ஆம் தேதி மேடையேற உள்ளது. ஒவ்வொரு நாடகத்தையும் வித்தியாசமாகச் செய்யும் 'அவதார்ஸ்' குழுவினர், இந்த முறை என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

நாடகத்தை எழுதியிருப்பவர் மணிராம், இயக்குபவர் சிவகுமார் ஜெயராமன். பிலானி தமிழ் மன்றம் மற்றும் பெங்களூரில் Black Coffee போன்ற நாடகக் குழுக்களிலும் 20க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்தும் இயக்கியும் உள்ளார் சிவகுமார். அவர் வளைகுடாவில் இயக்கும் முதல் நாடகம் 'முடிவல்ல ஆரம்பம்'.

'முடிவல்ல ஆரம்பம்' பற்றி இவர்களிடம் பேசியபோது, "தமிழக அரசியலைக் கதைக்களமாகக் கொண்டிருப்பதே முதல் வித்தியாசம். மாறுபட்ட கதையாக இருந்தாலும் ஜனரஞ்சகமாக இருக்கும்" என்று சொல்கின்றனர். அதையும் தவிர அவதார்ஸின் முத்திரையான மற்றுமொரு புதுமையும் இந்நாடகத்தில் உண்டு. "தமிழ் நாடக மேடை இதுவரை கண்டிராத உத்தி" என்று கூறும் சிவகுமார், அதைப் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கண் சிமிட்டுகிறார். தங்கள் நாடகங்களை அறிவித்த நேரத்தில் ஆரம்பித்து விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் 'அவதார்ஸ்', ரசிகர்களைச் சரியான நேரத்தில் அரங்கிலிருக்கும்படிக் கோருகிறார்கள்.

மேலும் அறிய: www.theAvatars.org
நாள்: ஏப்ரல் 17, 2010
நேரம்: இரண்டு காட்சிகள்: மதியம் 3:00 மணி; மாலை 6:00 மணி
அரங்கம்: De Anza Visual and Performing Arts Center, 21250 Stevens Creek Blvd., Cupertino, CA 95014.
நுழைவுக் கட்டணம்: $15 மற்றும் $20 (5க்கு மேற்பட்ட நுழைவுச்சீட்டுகளுக்கு முறையே $13 மற்றும் $18)
15 வயதுக்குட்பட்டோருக்கு அனுமதி இல்லை
கனகா: 510-440-9079
ஜனனி: 408-774-1910
மின்னஞ்சல்: tickets@theAvatars.org
ஆன்லைன் டிக்கெட்: www.indango.com
மே 31க்கு முன்னர் பதிவு செய்துகொண்டால் விரும்பிய இருக்கை கிடைக்கும்.

© TamilOnline.com