தென்றல் நல்ல பொழுதுபோக்குப் பத்திரிக்கை என்பதோடு அல்லாமல், மிகவும் பயனுள்ளதாகவும், தரமுள்ளதாகவும் அமைந்துள்ளது. டிசம்பர் 2009 தென்றலில் சிரிக்க சிந்திக்க பகுதியில் 'அம்மா அப்பா வராங்க' என்ற சிறுகதையைப் படித்தேன். எதிர்மறை முடிவோடு கதை நன்றாக இருந்தாலும் மனதில் ஒரு நெருடல் இருக்கவே செய்தது. ஒரு பெண்ணின் மாமனார், மாமியார் என்றாலே ஏதோ குடும்பத்து ஜென்ம விரோதியைப் போலச் சித்திரிப்பது படிப்பவர்களை தப்பான முடிவெடுக்கத் தூண்டுதலாய் இருந்து விடக் கூடாது. இதுதான் நியதி, இதுதான் உண்மை என்று இன்றைய தலைமுறைகள் நினைத்துவிடும் நிலைமை வந்து விடக் கூடாது. ஏற்கனவே நம் இந்திய டி.வி.யும், சினிமாவும் இன்றைய இளைய தலைமுறையைச் சீரழித்துக் கொண்டிருக்கும் விஷயம் நாம் அறிந்ததே. மாமனார், மாமியாருடன் கூடி வாழும் நம் இந்திய கூட்டுக் குடும்பக் கலாசாரத்தை அமெரிக்கர்களே வியந்து பாராட்டி வரும் இந்தக் காலத்தில் நம் பண்பாடு சிறிதளவாவது காக்கப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தின் காரணமாகத்தான் இதை எழுதுகிறேன்.
"மாமனார், மாமியார் வருகையை நம்முடைய நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்" என்ற டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரனின் எழுத்து நினைவுக்கு வந்து என்னைப் பெருமிதம் கொள்ள வைக்கிறது.
பிரபா முத்துக்குமாரசாமி, அட்லாண்டா, ஜார்ஜியா
***
மார்ச் மாதத் தென்றல் பாரதியின் பாடல் வரிக்கேற்ப "பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா" என்று மகிழ்ச்சி மிகுதியால் கூத்தாட வைத்துவிட்டது. அப்பப்பா! பக்கத்துக்குப் பக்கம் எத்தனை சாதனைப் பெண்கள்! சொந்த வாழ்க்கை, விருப்பு வெறுப்பு, சுகதுக்கம் எல்லாவற்றையும் பின்னால் தள்ளிவிட்டு சமுதாயத்தை மட்டுமே மனதில் கொண்டு குறிப்பாக பெண் சமூகத்திற்காக சாவித்திரி வைத்தி நடத்தி வரும் விச்ராந்தி முதியோர் இல்லத்தின் தொண்டினைப் பொதுமக்கள் கவனத்திற்குக் கொண்டுவந்த தென்றலுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். சமுதாயத்தைப் பற்றிச் சிந்திக்கவும் சேவை செய்யவும் வயதோ உடல்ரீதியான குறைபாடோ ஒரு தடையில்லை என்பதற்கு சுபா ட்ரெம்மல், அமுத சாந்தி நல்ல முன்மாதிரிகள். குறைந்த வயதில் நிறைந்த எண்ணிக்கையில் கணினி நூல்களை எழுதிக் குவித்துள்ள காம்கேர் புவனேஸ்வரி இன்னும் இசைத்துறை, ஹரிகதை, நாட்டியம், விளையாட்டு, கைவினை, வயது தடையில்லை எனபதற்கு 90 வயது பூரணி அம்மாள் என சாதனை படைத்த பெண்களின் வரலாறுகள் பிரமிக்க வைக்கின்றன.
சாதனை மகளிர் பற்றிய சுவையான கருத்தோவியமாக அமைந்த மகளிர் சிறப்பிதழைச் சிறக்க வைத்த ஆசிரியர் குழாத்திற்கு மீண்டும் என் பாராட்டுக்கள்.
டாக்டர். அலர்மேலு ரிஷி, சன்னிவேல், கலி.
***
மார்ச் 2010 தென்றல் இதழில் வெளியான சாவித்ரி வைத்தி அவர்களின் நேர்காணல் மிகச் சிறப்பு. அவர் இவ்வளவு அரிய சேவை செய்வது நெஞ்சைத் தொடுகிறது. தென்றல் வாசகர்கள் பலர் விச்ராந்திக்கு நன்கொடை அளிக்க விரும்பலாம். அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு சென்னை முகவரிக்குத் தபாலில் அனுப்புவதை விட, ஒரு வலைதளத்தில் கொடுக்க ஏற்பாடு இருந்தால் நன்றாக இருக்கும்.
கணேஷ், விரிகுடாப்பகுதி, கலி.
***
நான் தொடர்ந்து தென்றலை வாசித்து வருகிறேன். ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு சுவையைத் தருவதால் அதைப் பக்கத்துக்குப் பக்கம் விடாமல் வாசிக்க விரும்புகிறேன். பெரிய ஆரவாரம் எதுவுமில்லாமல் நீங்கள் இயன்றவரை பெரும்பாலான அம்சங்களை நல்ல தமிழில் தருகிறீர்கள். ஒவ்வொரு மாதமும் எப்போது தென்றல் வரும் என்று ஆர்வத்தோடு காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்.
கே. கன்னியப்பன், மேன்ஸ்ஃபீல்டு, ஒஹையோ.
***
'மகளிர் சிறப்பிதழ்' தென்றல் கண்டதும் வாரம் ஒரு 'தென்றல்' வராதா என்ற ஏக்கம் வந்தது. சாவித்ரி வைத்தியின் நேர்காணல் படிக்கையில் முதியவர்களின் பரிதாப நிலையை நினைத்து மனம் கனத்தாலும் தமிழ்நாட்டின் 'மதர் தெரஸா' போலச் சேவை செய்யும் அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்று தோன்றியது. தங்கம் ராமசாமி, எல்லே சுவாமிநாதனின் சிறுகதைகள் மிகவும் நன்றாகவும் வேடிக்கையாகவும் இருந்தன. மீரா சிவாவின் 'பிறந்த நாள்' இங்குள்ள எல்லா பெற்றோர்களின் அனுபவத்தை (அவஸ்தையை!) நினைவுபடுத்தியது.
பத்மா வைத்தீஸ்வரன், ஃப்ரீமாண்ட், கலிபோர்னியா
***
பெரியவர்கள் பார்க்கத் தவறும் சிலவற்றைக் கூடக் குழந்தைகள் நுண்ணுணர்வால் கண்டுவிடும் என்பதைத் 'தவிப்பு' சிறுகதை அழகாகச் சொல்கிறது. குழந்தைகளின் இயல்பு, நடத்தை ஆகியவற்றை ஹரியின் செயல்பாடு அழகாகச் சித்தரிக்கிறது.
கிருத்திகா, மேரிலாந்து (ஆன்லைனில்)
***
'தவிப்பு' மிக நல்ல கதை
சங்கீதா ஈஸ்வர், மின்னசோடா.
*** |