நாங்கள் அமெரிக்காவில் குடியேறி 11 வருடங்கள் ஆகின்றன. என் பெண்ணிற்கு இன்னும் இரண்டு மாதங்களில் 16 வயது முடிகிறது. இந்த ஊரில்தான் இதெல்லாம் மிகவும் விசேஷமாகக் கொண்டாடுகிறார்களே என்று நானும் எங்களால் ஆனதைச் செய்யலாம் என்று திட்டம் போட ஆரம்பித்தேன். வந்தது வினை. என்னுடைய பெண்ணின் ஆசைக் கனவுகளைத் தூண்டிவிட்டு விட்டோம் போலிருக்கிறது.
என்னுடைய நாத்தனாரின் பெண்ணிற்கு (கணவன், மனைவி இருவரும் அமெரிக்காவில் டாக்டர்கள்) 2 வருடம் முன்பு அவளுடைய 16 வயதிற்கு மிகவும் அமர்க்களப் படுத்தியிருந்தார்கள். அதைப் போலக் கனவுகளை இவளும் வளர்த்துக் கொண்டுவிட்டாள். மிகவும் ஆடம்பரமாக அழைப்பிதழ் போட்டு நண்பர்கள் எல்லோரையும் கூப்பிட வேண்டுமாம். அவள் limousine-ல் வந்து இறங்க வேண்டுமாம். பெரிய ஹால் பார்க்க வேண்டுமாம்.
Indian catering கூடாதாம். ஆயிரத்தெட்டு கட்டுப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறாள்.
என் கணவருக்கு கோபம் கோபமாக வருகிறது. தினமும் அப்பாவிற்கும், பெண்ணுக்கும் தகராறு. ''உங்களுக்கு வசதியில்லையென்றால் ஏன் ஆரம்பித்து வைத்தீர்கள்? எனக்கு எதுவும் வேண்டாம். Cancel everything. I hate you guys" என்று கத்திவிட்டுத் தடாலென்று கதவைச் சாத்திக்கொண்டு தன் அறைக்குப் போய் விடுகிறாள்.
"அவளுக்கென்ன அவ்வளவு பிடிவாதம். இது என்ன கல்யாணமா? நான் கேன்சல் செய்து விடுகிறேன்" என்று இவர் hall booking-ஐ கேன்சல் செய்துவிட்டு வந்து விடுவார். நான் சமாதானக் கொடியைப் பறக்க விட்டு மறுபடியும் ஹாலை புக் செய்தால் வேறு எதற்காவது பிரச்சினை கிளம்பும். ஆக மொத்தம் மூன்று மாதமாக யாருக்கும் நிம்மதியில்லை. அவரும் வயதுவந்த பெண் என்று பார்க்காமல் சொல்லால் சுட்டு விடுகிறார்.
இவளுக்கும் பெற்றவர்களின் நிலைமை புரிய மாட்டேன் என்கிறது. தான் அடிமையாக நடத்தப்படுவது போல நினைக்கிறாள். நான் சமரசம் செய்யப்போனால் ''நீ ஒரு வழவழ.. ஒரு அம்மாவா!" என்று இவள் கேட்டு என்னைப்
பைத்தியமாக அடிக்கிறாள். கணவன், மனைவி பிரச்சினைதானா உலகில்? இந்த டீன் ஏஜ் பெண்களை வைத்துக் கொண்டு நாங்கள் படும்பாடு! நீங்கள் எப்படி சமாளிப்பீர்கள் என்று கோடி காட்டுங்களேன்.
இப்படிக்கு. ............
அன்புள்ள...
இந்தப் பகுதியில் உங்கள் பிரச்சினையும், என் கருத்துக்களும் தென்றல் இதழில் வந்து நீங்கள் அதைப்படிக்கும் முன்பே உங்கள் பெண்ணின் பிறந்த நாளை மிகவும் விமரிசை யாகக் கொண்டாடி முடித்திருப்பீர்கள்.
நீங்கள் சொல்வது உண்மைதான். டீன் ஏஜ் பெண்களை இந்த ஊரில் அல்ல, எந்த ஊரிலும் சமாளிப்பது பெரிய சவால்தான். தனக்கு 16 வயது ஆகிவிட்டது என்றாலே ஏதோ பெரிய பதவியை அடைந்துவிட்டது போல நினைப்பு நம் குழந்தைகளுக்கு இருக்கிறது. 'சுதர்சன சக்கரம்' (காரோட்டும் உரிமம்) கிடைக்கும் வயது. சுதந்திரம், நண்பர்கள், கேளிக்கை, பார்ட்டிகள் என்றுதான் மனது யோசிக்க ஆரம்பிக்கிறது. இதெல்லாம் பெற்றவர்களுக்குத் தெரியாதது அல்ல. Teenagers go through constant emotional roller coaster. அதனால் எப்போதும் பெற்றவர் களுக்குக் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
நான் எப்படிச் சமாளிப்பேன் என்று நீங்கள் கேட்டதால் நான் எழுதுகிறேன். ஆனால் எல்லோருக்கும் பொருந்தாது. ஒவ்வொரு குடும்பமும் தனிவகை.
எந்த உத்தி வேலை செய்யும் எது வேலை செய்யாது என்பது அந்தக் குடும்பத்தினரின் குணநலன்களைப் பொறுத்தது. முதலில் அவளுடைய அத்தனை எதிர்பார்ப்புகளையும், ஆசைகளையும் (அதிர்ச்சியைக் காட்டாமல்) கேட்டுக் கொள்வேன். நம்மால் எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்ய முடியாது என்றாலும் ஒரு பெரிய குழந்தை யின்
சிந்தனை ஓட்டம் எப்படிச் செல்கிறது என்பது புரியும்.
பிறகு அவளையே அதற்கு பட்ஜெட் போடச் சொல்லுவேன்.
எது அவளுக்கு அதிகம் என்று தெரிகிறதோ அதைப்பற்றி என்ன செய்யலாம் என்று கேட்டு, எந்த வகையில் அவள் குறைத்துக் காட்ட முடியும் என்று இரண்டு பேரும் கணக்குப் போடுவோம்.
எந்த பட்ஜெட்டுக்கு வருகிறோமோ அதைவிட 15 சதவீதம் அதிகம் செலவு செய்யும் வசதி எனக்கு இருக்குமா என்று எனக்குள் சிந்திப்பேன்.
எது உல்லாசம் (luxury), எது முக்கியம் (priority) என்று அவளையே சிந்திக்க விடுவேன். வெறும் விரயம் என்று தோன்றும் சில செலவுகள் அவர்களுக்கு மிக முக்கியமானதாகத் தோன்றும். We have to be sensitive to those requirements.
அவளை வைத்துக்கொண்டே விருந்தினர் பட்டியல் தயார் செய்வேன்.
நான் எழுதியிருப்பது பொதுவாக எல்லா அம்மாக்களும் செய்வதுதான். நான் புதிதாக எதுவும் சொல்லவில்லை. நம் உடனடி எதிர்வினைகளைக் கொஞ்சம் மாற்றிய மைத்துக் கொண்டால், சூடான தருணங்களைக் குறைக்கலாம்.
பதின்ம வயதுக் குழந்தைகள் ஏதேனும் எதிர்பார்ப்புகளுடன் பேசும் போது உடனே தர்க்க வாதத்தில் ஈடுபட்டால், அவர்கள் சொல்லுவதைப் பொறுமையாகக் கேட்டு முதலில் ஜீரணித்துக் கொள்ள வேண்டும்.
பிறரது மனநிலையைப் பொறுத்து அவர்களின் எண்ணப் போக்கை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். அவர்கள் கொதி நிலையில் இருந்தால் வார்த்தையை வளர்க்காதீர்கள். எரிமலை பொங்கித் தானாக அடங்கட்டும். அவர்களையும் ஈடுபடுத்துங்கள். அப்போது அவர்களே பொறுப்புடன் அது தேவையில்லை, இது தேவையில்லை என்று யோசிப்பார்கள். அதற்கு பதில் 'உனக்கு இது தேவையா? நமக்கு இவ்வளவு வசதி இல்லை. நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் தெரியுமா?' என்று கேட்கும் போது, அந்தத் தேவை இன்னும் அவர்களுக்கு அத்தியாவசியமாகப் படும். ஒரு பெண்ணின் அந்தரங்க உணர்ச்சிகளை ஒரு தோழிபோலப் பகிர்ந்து கொண்டு, தாயாக அவள் ஆசைகளுக்கு அனுசரணையாக வடிகால் அமைக்கும் போது, அங்கே கொஞ்சம் நிம்மதி கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
ஆமாம், இவ்வளவிலும் கணவரை விட்டுவிட்டோமே? நீங்கள் அதைப் பற்றிக் கேட்கவே இல்லையே!
புதிராக இருக்கும் மகளோ, புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் தாயோ, பொங்கி எழும் தந்தையோ எப்படியிருந்தாலும், this moment would have been a great success. பெற்றவர்கள் தங்கள் பெண்ணின் கண்களில் கண்ணீரைப் பார்க்க விரும்ப மாட்டார்கள். நிறைய விட்டுக் கொடுத்து இருப்பீர்கள், இந்த 16 வயதுக்கு.
வாழ்த்துக்கள்.
மீண்டும் சந்திப்போம். சித்ரா வைத்தீஸ்வரன் |