இளம் வயதிலேயே சமூகப்பணியில் முனைப்போடு ஈடுபட்டு சிறந்த சமுதாயத் தொண்டு செய்துவரும் அமெரிக்கத் தமிழ் இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு அறக்கட்டளை புதிய விருதுகளை நிறுவியுள்ளது.
லான்ஸ்டேல், பென்சில்வேனியாவில் வாழும் பதினாறு வயது மேனகா சூரி தன்னுடைய 16வது பிறந்தநாள் விழாவிற்கு, பரிசுகளுக்கு பதிலாக நிதி நன்கொடை பெற்று அதன்மூலம் தமிழகத்தில் நலிவுற்ற 16வயது ஏழை மாணவ மாணவியர் பள்ளிக் கல்வியைத் தொடரப் பயன்படுத்துகிறார். இந்த நன்முயற்சி தன்னோடு நின்று விடாமல் மற்ற 16 வயதினரும் இதேபோல் செய்யத் திட்டம் வகுத்துச் செயல்பட்டு வருகிறார். டெலவர் மாநிலத்தில் தன் எட்டாம் வகுப்பு நண்பர்கள் மூலம் வேதாரண்யத்தில் வறுமையால் வாடும் மாணவிகளுக்கு 6,000 டாலர் சேர்த்த பெருமை லெட்சுமணன் சோமசுந்தரத்தைச் சாரும்.
மேனகா, லெட்சுமணன் போன்று அமெரிக்காவின் பல மாநிலங்களில் சமூகப் பார்வையோடும், ஈகைப் பண்போடும் செயலாற்றி வரும் இளைய தமிழ்த் தலைமுறையினரை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதே இந்த விருதுகளின் நோக்கம் என்கிறார் தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ராம்மோகன். தமிழகத்தில் மட்டுமல்லாது, அமெரிக்கா உட்பட உலகின் எப்பகுதியிலும் அமெரிக்கத் தமிழ் இளைஞர்கள் செய்துவரும் சமூகசேவையைப் போற்றுவதே எங்களின் குறிக்கோள் என்கிறார் விருதுக்கு வித்திட்ட அறக்கட்டளையின் இயக்குநர் சோமலெ சோமசுந்தரம்.
22 வயதுக்குக் குறைந்தவர்கள், 23 முதல் 39 வயது கொண்டவர்கள் என்ற இரண்டு வயது வரம்புகளில் விருதுகள் அறக்கட்டளையின் தேசீய மாநாட்டில் பிலடெல்பியாவில் மே 29-30 தேதிகளில் வழங்கப்பெறும். விருதுகளுக்கான விண்ணப்பம் மற்றும் முழு விவரங்கள் அறக்கட்டளை மாநாட்டின் இணையதளத்தில்: www.tnfusa.org
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஏப்ரல் 23,2010. அதிக விவரங்களுக்கு: info@tnfusa.org தொலைபேசி - (610) 444-2628
சமுதாயப் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டுச் செயலாற்றும் இளைஞர்களை இந்த விருதுகளுக்குப் பரிந்துரைத்து அவர்களை ஊக்குவியுங்கள். |