ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiyagarajan
கௌசிகமுனி பின் மகனை அனுப்ப, தசரதனுக்குரைத்து, அன்று ராமனின் மணவாழ்வுக்கு ஆற்றுப்படுத்தினார் வசிட்ட முனி.
வியாச முனியோ வேதத்தைப் பகுத்து ஓதுவோர்க் கெளிதாக ஆற்றுப்படுத்தினார்;
விசிட்டாத்துவைத வழி கண்டு வைணவத்தை ஆற்றுப்படுத்தினார் யதிராசர்;
நக்கீரர் ஆற்றுப்படையில் முருகனைப் பாட சங்கம் கண்டது பொருநர், பெரும்பாண், சிறுபாண் என வகை வகையான ஆற்றுப்படைகள்.
புலவர், பாணர் ஏனையோர்க்கு வாழ்வு செழிக்க வழி வகுத்த ஆற்றுப்படைகள் அறிவோம் நாம். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இதோ
"எட்டாம் வகுப்பு எஸ்தர் வீடு எந்தத் தொகுப்பில் இருக்கிறது?"
"சிகப்பாக் கொண்டு, கொண்டை போட்ட மடிசார் மாமி மனை எங்கே?"
"நூற்றெட்டடி அனுமார் கோயில் பேருந்து எதனில் செல வேண்டும்?" பார்த்தவர்க்கெல்லாம் வினவத் தோன்றும். என் முகம் கண்ட போதினிலே. அது மட்டுமா...
வாயிற் காவல் கூண்டிலிருந்து, "வயதான பெண்மணி வந்திருக்கார், சமையலாள் கேட்டவர் அறிவீரோ?"
"அஞ்சலை காலை வந்தாளா?" அமுதம் ப்ளாக் ஆசிரியை விடும் ஆவல் கலந்த தொலைபேசி.
விதவிதமாக விவரம் கேட்போர்க்கு விடை அளித்து வழி கூறும் நானும் பாட மனம் கொண்டேன், ஒரு விசிட்டர் ஆற்றுப்படை!
அம்புஜவல்லி தேசிகாச்சாரி |